லில்லி குறும்படம் விமர்சனம்

லில்லி குறும்படம் அனைத்து உயிர்களிடத்தும் இயற்கையான பாலியல் உணர்வுகள் உண்டு என்பதை ஆழமான வலியுடன் விளக்குகிறது.

“கூனோ, குருடோ, ஊனோ, முடமோ உணர்ச்சிக்கும் புணர்ச்சிக்கும் உணர்வுகள் எல்லா உயிர்க்கும் பொது தானே” என்ற வசனத்தில் பொதிந்துள்ள நிதர்சனப் பெருவெளியை இக்குறும்படம் தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது.

நீங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் வலியை, வேதனையைப் பெற்றுக் கொண்டே இருக்க விரும்பாதவர்களா? அப்படியாயின் இக்குறும்படத்தைப் பார்க்காதீர்கள். இந்த விமர்சனத்தையும் படிக்காதீர்கள்.

லில்லி குறும்படக் கதை

ஊனமும், குருடுமான ஒரு முதிர்கன்னி. அம்மா இல்லாத பெண். ஏழ்மையான அப்பா நன்கு பாசத்துடன் வளர்த்து வருகிறார்.

ஒருநாள் வேலை விட்டு சீக்கிரமாக வீடு வருகின்றார்.

அங்கு தன் மகள் தனிமையில் தொலைக்காட்சியில் இசையைக் கேட்டுக் கொண்டே உடலில் சுயஇன்பம் பெற்றுக் கொண்டு இருக்கிறாள்.

இதைப் பார்த்த தந்தை மனதளவில் மிகவும் கஷ்டப்படுகிறார்.

ஒரு விலை மாதுவிடம் சென்று ஆண் விலை மகனை வேண்டுகிறார். கண் இல்லாதத் தன் மகனை அந்த விலைமாது அனுப்பி வைக்கிறாள்.

தந்தையும் தன் மகளின் ஆசையைத் தீர்க்க அந்த கண் தெரியாதவரை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்லுகிறார்.

பிறகு சில காலம் கழித்து இருவரையும் திருமணம் செய்தும் வைக்கின்றனர்.

தந்தை செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் நிறுவனத்தின் மேனேஜர், இக்கதையைக் கேட்டு இது போன்றவர்களின் மன உணர்வுகளை நினைத்துப் பார்ப்பதாக குறும்படம் நிறைவு பெறுகிறது.

கதையும் வாழ்வியலும்

உலக ஜீவன்கள், மரம், செடி, கொடி என‌ அனைத்திற்கும் காமம் பொதுவானது. அதைத் தடுத்து அடக்கி ஆளும் ஆற்றல் மானிடரைத் தவிர வேறு எவ்வுயிர்க்கும் இல்லை.

இயற்கையின் மையப் புள்ளியாகப் பிரபஞ்ச செயல்பாடுகளின் சுழற்சிக்கான கருவாக விளங்கும் அதைத் தடுத்தல் இயற்கைக்கு விரோதமானது.

அவரவரின் காமத்தை நிறைவேற்றிக் கொள்ள, அவரவர் ஒரு வழியைத் தேடிக் கொள்கின்றனர். ஆனால், அந்த வழியை உருவாக்கிக் கொள்ள இயலாத அவர்களின் மனப்போக்கு எவ்விதம் இருக்கும் என்பதை யாரும் உணர்ந்து கொள்வதே இல்லை.

காமம் என்பது சிற்றின்பம். இந்தச் சிற்றின்ப நிலையைக் கடந்து தான் இறைநிலை என்கிற பேரின்ப நிலையை அடைய முடியும் எனத் தத்துவ ஞானி ஓஷோ கூறுகிறார்.

இந்த உள்ள உணர்வுகளின் அனைத்தின் உள்ளும் அடிநாதமாக விளங்கி அனைத்தும் உருவாகக் காரணமாக இருப்பது, வளர்ப்பது பாலியல் உணர்வுகளே என உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

இக்குறும்படம் ஊனமான, குருடான ஒரு இளம் பெண்ணின் காம உணர்வைப் பேசுகிறது. திருமணம் நடக்கவில்லை. ஏழ்மை சூழ்நிலை.ஆனால், உடம்பு வளர்கிறது. அதனுள்ளே காமமும் உணர்வும் வளர்கிறது.

என்ன செய்ய முடியும் அவளால்?

கதையும் சமூகமும்

எல்லை தாண்டிப் போகக் கூடாது என்ற சமூகக் கட்டுப்பாடு அல்லது சமூக ஒழுக்க வரையறை. மற்ற பெண்கள் அடைந்து விட்டதாக கூறும் இல்லற சுகம். அதன் நினைப்பு. இதை அறியாமலும் இருக்க முடியாத பொழுது என்ன செய்ய முடியும்?

திருமணம் ஆகாத முதிர் கன்னிகள் மனம் படும் பாடு என்கிற ஒன்று இருக்கிறதே! அதைச் சொல்லி மாளாது.

அத்தகு கொடுமையானது, அது தன்னை ஒத்த வயதுடைய பெண்கள் குழந்தையைப் பெற்றுக் கொண்டு சுற்றும் பொழுது, தான் அடையும் வேதனையை அந்தப் பெண்கள் எப்படி, யாரிடம் போய் சொல்வார்கள்?

இதேபோல் ஊனமான திருமணமாகாத பெண்களின் வேதனை, இதனை யார் உணர்வர்?

அவர்களுக்குள் தோன்றும் உணர்வுகளுக்கு வடிகால் எவை? கல்லாய் மனதை எல்லோராலும் மாற்ற முடியாது. அப்பொழுது என்ன செய்வார்?

பல கேள்விகள் நமக்குள் இக்குறும்படம் பார்க்கும் பொழுது எழுகின்றன. இக்கேள்விகள் தான் ஒரு படைப்பாளனை ஒரு படம் பண்ண வைத்திருக்கிறது.

சரியான படைப்பாளன் இது போன்ற உணர்வையே தன் படங்களில் பதிவு செய்ய நினைக்கிறான்.

இலக்கியத்தில் பாலியல் உணர்வுகள்

சமூக ஒழுக்கம் முதலியவற்றின் காரணமாக மன உணர்வுகள் சுதந்திரமாக வெளிப்படாமல் அழுத்தப்படுகின்றன.

இவ்வுணர்வுகளும் அடி மனதில் ஆழமாய் மையம் கொண்டிருக்கும் பாலியல் உணர்வுகளும், நனவிலி மனத்தின் ஊடாக அவனே அறியாத நிலையில் அவனுடைய சொல்லிலும் செயலிலும் வழிபடுகின்றனர்.

கலைஞரிடம் இத்தகைய உணர்வுகள் அவனுடைய அறிவார்ந்த விருப்பங்களையும், உணர்வுகளையும் மீறி அவனுடைய கலைப்படைப்பில் வெளிப்பட்டு விடுகின்றன என்பதாக இலக்கிய இசங்கள் என்னும் நூலில் டாக்டர் தி.சு.நடராசன் கூறுகின்றார்.

குறும்படத்தின் கதை படைப்பு உணர்வால் ஏற்பட்டதே. படைப்பாளனின் உள்ளம் இத்தகு சமூகப் புறக்கணிப்பு அவர்களின் மன உணர்வுகளின் பிரதிபலிப்பு வெளிப்படுத்துவதில் முன்னிலை வகிக்கின்றன.

குறும்படத்தின் சிறப்புகள்

திரைக்கதை நீரோட்டமாகச் செல்லுகிறது. கதை இதைவிட எதையும் ஆழமாக வெளிப்படுத்தி விட முடியாது.

ஒளிப்பதிவு கண்கள் மிக நேர்த்தி. கதையை ஒளி நிறங்களால் கூறி விடுகின்றனர்.

சோகத்தைக் கருப்பும், காமத்தை மஞ்சளும், விலைமாது வீட்டை சிகப்பும், கோயில்களை வெண்மையும் என்று வித்தியாசமான ஒளிப்பதிவு கலப்படம் நிறைந்திருக்கிறது. அருமையான கலை கண்கள் வேண்டும் இதற்கு.

இசை சில இடங்களில் அழுகையை வரவழைத்து விடுகிறது. அலாதியான இசைதான் இது.

வசனம் சரியான உணர்வுகளின் வெளிப்பாடாக நிமிர்ந்து நிற்கிறது. ஒரு வசனம் கூட தேவையற்றதாக இல்லை என்று கூறிவிட முடியும்.

இனிமேல் உடல் குறைபாடு உடையவர்களை வாழ்வில் எங்காவது பார்த்தால், பார்க்க நேரிட்டால், இந்தக் குறும்படம் நம் நினைவில் உள்நுழைந்து நிற்கும்.

லில்லி குறும்படம் மூலமாக ஏற்பட்ட வலியும் வேதனையும் அவர்களின் மேலாகச் சார்ந்து, அவர்கள் இம்மாதிரியான பல கொடுமைகளை அனுபவித்தவர்களாக இருக்கிறார்கள் என்கிற எண்ணம் நமக்கு இந்த வலியை தரும்.

லில்லி குறும்படம் பாருங்கள்

(குறும்படம் விரியும்)

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com

4 Replies to “லில்லி குறும்படம் விமர்சனம்”

  1. மனம் உடல் இரண்டும் கேட்பதை யாராலும் தடுக்க முடியாது. முதிர்கன்னிகள் படும் பாட்டை இக்குறும்படம் அருமையாக விளக்கியிருக்கிறது. அதை எடுத்துச் சொன்ன விதம் மிக அருமை.

  2. இப்படி ஒரு சம்பவம் உண்மையில் நடந்ததா? அல்லது படைப்பாளியின் புனைவா? என்பது எனக்கு தெரியவில்லை.

    ஆனால் இப்படி ஒரு படைபை படைக்கக் கூடாது. ஏன்னென்றால் மனிதனின் மனதை சோகத்தின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது.

    விமர்சனம் மிக சிறப்பு அய்யா!

  3. மறுபடியும் மனதை உருக்கும் ஒரு கதைக்களத்துடன் கொண்ட குறும்படத்தை விமர்சித்து வெளியிட்டிருக்கிறார் பாரதி சந்திரன்.

    மனிதர்கள் உலகம் உணர்வுகளின் குவியல் என்கிறார்
    human being is a collection of emotions

    அந்த வகையில் இந்தப் படம் உணர்வுகளின் மொத்த அர்த்தங்களையும் சொல்லிச் செல்கிறது.

    சொல்லக் கூடாதவை என்று எதுவும் இல்லை ஏனெனில் இந்த பிரபஞ்சத்தில் எதுவுமே புதிதில்லை.

    எல்லாமே இங்கிருந்து தான் வருகிறது, இங்கிருந்துதான் மாறுகிறது, எல்லோருக்கும் எல்லாம் இருக்கிறது, இல்லாமலும் இருக்கிறது,

    எதை மறைக்க, எதை மாற்ற, ஏன் மாற்ற வேண்டும்? ஏன் மறைக்க வேண்டும் ?என்றெல்லாம் எண்ண ஓட்டங்களை இந்த படம் தருகிறது.

    எப்போதும் போல் நம் சிந்தனைகளை கிளறி விட்டு இந்த படத்தின் விமர்சகர் சென்று விடுகிறார், நாம் இதிலேயே ஓரிரு நாள் தங்க நேரிடுகிறது

    நன்றி வாழ்த்துக்கள்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.