வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை என்ற இப்பாடல், சூடிக்கொடுத்த சுடர்க் கொடியும், பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியும் ஆகிய ஆண்டாள் அருளிய, திருப்பாவையின் முப்பதாவது பாசுரம் ஆகும்.
திருப்பாவை பாடல் 30
வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப்பறை கொண்ட வாற்றை அணிப்புதுவைப்
பைங்கலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்
விளக்கம்
அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய திருமகளுக்கு நாதன் மாதவன்!
மற்றும் தன்னை அழிக்க வந்த கேசி என்னும் அரக்கனை அழித்தவன் கேசவன் ஆகிய கண்ணன்!
சந்திரன் போன்ற அழகிய முகத்தினையும், மேன்மையான ஆபரணங்களையும் அணிந்த பெண்கள், கண்ணனை விரும்பிச் சென்று நிறைவேற்றிய பாவைவிரதத்தின் பலனை ஆண்டாள் முப்பது பாசுரங்களில் சொல்லி இருக்கிறாள்.
திருவில்லிபுத்தூரில் பிறந்த குளிர்ந்த தாமரை போன்ற முகத்தினை உடைய, பெரியாழ்வாரின் செல்வப் புதல்வி இப்பாமாலைகளைத் தொடுத்துள்ளாள்.
இதனைப் படிப்பவர்கள் உயர்ந்த தோள்களை உடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தினை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியான திருமகளின் தலைவனான திருமாலின் திருவருளை எல்லா இடங்களிலும் பெற்று இவ்வுலகில் இன்பமாக வாழ்வார்கள் என்பது உறுதி!
மறுமொழி இடவும்