பாரத ஸ்டேட் வங்கி

வங்கிகள் இணைப்பு

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி உலக அளவில் கணக்கிட்டால் ஒரு சிறிய வங்கியே ஆகும். அதனை விடப் பெரிய சுமார் 60 வங்கிகள் உலகில் உள்ளன.

ஆனால் உலகின் முதல் பத்து பெரிய வங்கிகளில் 3 வங்கிகள் சீனாவைச் சார்ந்தவை. எனவே நாமும் பெரிய வங்கிகளை உருவாக்க வேண்டும் என்ற கருத்து உருவாகி வருகின்றது.

பெரிய வங்கிகளை உருவாக்குவதற்காக சிறிய வங்கிகளை இணைப்பதா? வேண்டாமா? என்று யோசிக்கும் முன்பு இந்திய வங்கிகளின் இன்றைய நிலைமையை பற்றி அறிய வேண்டும்.

உலகம் முழுவதும் பொருளாதாரப் புயல் அடித்த போதும் கூட நமது வங்கிகளில் ஒன்று கூட சாய்ந்து கீழே விழுந்து விடவில்லை. பாரத ரிசர்வ் வங்கியின் சீரிய வழிநடத்தலின் படி சிறப்பாகவே செயல்பட்டன.

ஆனால் இன்றைக்கு வாராக் கடன் என்கின்ற புயல் நமது வங்கிகளைச் சற்றே அசைத்துப் பார்க்கின்றது என்பது மறுமுடியாத உண்மை.தொடர்ந்து இலாபம் ஈட்டிக் கொண்டிருந்த நமது வங்கிகள் வாராக் கடனுக்காக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ள காரணத்தினால் நஷ்டத்தைச் சந்திக்க ஆரம்பித்துள்ளன.

வாராக் கடன்கள் அனைத்தையும் தெளிவாக ஆராய்ந்து எந்தெந்த நிறுவனங்கள் கடன் பாக்கி வைத்துள்ளன. அவற்றால் கடனைத் திரும்பச் செலுத்த முடியுமா? முடியாதா? என்று பார்க்க வேண்டும்.

வசதி இருந்தும் கடனைத் திரும்பச் செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கூறிய இரண்டு கருத்துகளில் தான் பெரும்பாலான வங்கிகள் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த சூழ்நிலையில்தான் வங்கிகளை இணைப்பதா? வேண்டாமா? என்ற கேள்வி எழுகின்றது.

 

ஏன் இணைக்க வேண்டும்?

1. உலக அளவிலான பெரிய வங்கிகளை நாம் உருவாக்குவதற்கு வங்கிகளை இணைக்க வேண்டும்.

2. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் கிட்டத்தட்ட ஒரே கொள்கையோடு ஆனால் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன. அதாவது ஒரே முதலாளியின் பல நிறுவனங்கள் ஒரே சந்தையில் செயல்படுகின்றன. அவற்றை ஒருங்கிணைத்து சில நிறுவனங்களாக மாற்றினால் அவற்றை சிறப்பாக நிர்வகிக்க முடியும்.

3. நிர்வாகச் செலவு குறைந்து திறன் மேம்பாடு அதிகரிக்கும்.

4. அரசு மான்யங்களை வங்கிகள் மூலம் மக்களுக்கு அளிக்க இருப்பதால் பெரிய வங்கிகளாக இருப்பது வேலையை எளிதாக்கும்.

 

ஏன் இணைக்கக் கூடாது?

1.வங்கிகள் பெரிதாக மாறும் போது அவற்றின் மீதான ஆபத்தும் பெரிதாகி விடுகின்றது. நிறைய சிறிய வங்கிகள் இருந்து அவற்றில் ஒன்று திவாலாகும் போது ஏற்படும் பாதிப்பை விட சில பெரிய வங்கிகளில் ஒன்று திவாலாகும் போது ஏற்படும் பாதிப்பு மிக அதிகம்.

2.பெரிய நிறுவனங்கள்தான் சிறப்பாகச் செயல்படும் என்பதில்லை. சிறிய நிறுவனங்கள் எளிதாகத் தம்மை மாற்றிக் கொள்ள முடியும். நிர்வாக அடுக்குகள் குறைவான காரணத்தினால் விரைவாகத் திறம்பட செயல்படவும் முடியும்.

3. சிறிய வங்கிகள் பெரும்பாலும் நாட்டின் ஒரு மாநிலத்தில் அல்லது ஒரு பகுதியில்தான் நிறையக் கிளைகளைக் கொண்டுள்ளன. அவற்றால் அந்தப் பகுதி மக்களின் தேவைக்கேற்பத் திட்டங்கள் தீட்டிச் சிறப்புடன் செயல்பட முடியும்.

 

என்ன தீர்வு?

வங்கிகள் இணைப்பு என்பதில் சாதக அம்சங்களும் உண்டு. பாதக அம்சங்களும் உண்டு. இன்றைய நிலையில் எல்லா வங்கிகளும் கஷ்டப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. இப்போது வங்கிகளை இணைப்பது என்பது சிறிய பிரச்சினைகளைச் சேர்த்து பெரிய பிரச்சினைகளை உருவாக்குவதற்குச் சமம்.

ஆனாலும் வளரும் இந்தியப் பொருளாதாரத்தை உலக அளவில் உயர்த்திப் பிடிக்க பெரிய வங்கிகள் அவசியம் தேவை.

நாம் என்ன செய்ய வேண்டுமென்றால் ஒரு பெரிய வங்கியைத் தற்போது உருவாக்க வேண்டும். உதாரணமாக பாரத ஸ்டேட் வங்கியை உலகின் முதல் பத்து வங்கிகளுக்குள் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். அதற்குத் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

ஒரு ஐந்தாண்டு காலத்தில் நாம் அதனைச் சாதிக்க வேண்டும். அதற்காக ஒரு சில வங்கிகளை அதனுடன் இணைத்தாலும் தவறில்லை. அப்படிச் செய்யும் போது நாம் இப்போது இருக்கும் பல வங்கிகளை உடனே பாதிக்காமல் அதே நேரம் ஓர் உலக வங்கியையும் கொண்டிருப்போம்.

அந்தப் பயணத்தில் நாம் கற்கும் படிப்பினை நம்மை வங்கிகள் இணைப்பு தொடர்பான‌ அடுத்த கட்டத்திற்குத் தானாக வழிநடத்திச் செல்லும்.

– வ.முனீஸ்வரன்

 


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.