வங்கிக்கணக்கு அனைவருக்கும் பல வழிகளில் பயன்தரக் கூடியது.
1. பாதுகாப்பானது
வங்கிக் கணக்கு பணத்தைப் பத்திரமாக வைத்திருக்க உதவுகின்றது. திருடர் பயமின்றியும், நம்மிடமிருந்தால் செலவாகிவிடுமோ என்ற பயமின்றியும் பணத்தை வங்கியில் பாதுகாப்பாக வைத்திருக்கலாம். மேலும் நமக்கு தேவைப்படும்போது வங்கிக்கு சென்றோ அருகிலுள்ள ஏடிஎம்ற்கு சென்றோ எடுத்துக் கொள்ளலாம்.
2. பணம் பெறுவதற்கு
அரசு ஊழியர்கள் மற்றும் பல தனியார் நிறுவனங்களில் சம்பளம் மற்றும் பென்சன் போன்றவை கையில் பணமாகக் கொடுக்கப் படாமல் நேரடியாக வங்கிக் கணக்கிலே வரவு வைக்கப்படுகின்றன. அரசின் முதியோர் உதவித்தொகை கூட அப்படித்தான் வழங்கப்படுகின்றது.
நமக்கு வரும் காசோலை, வரைவோலை ஆகியவற்றைப் பணமாக்கவும், உள்நாடு மற்றும் வெளிநாட்டிலிருந்து உறவினரிடம் இருந்து அல்லது வியாபாரத்திற்காக பணத்தை விரைந்து பெறவும் வங்கிக் கணக்கு உதவியாக இருக்கும்.
3. பணம் கொடுப்பதற்கு
வங்கிக் கணக்கு வைத்திருந்தால் நாம் பிறருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை காசோலையாக அல்லது வரைவோலையாகக் கொடுக்கலாம். உடனே பணம் அனுப்ப வேண்டுமென்றால் வங்கியின் இணைய சேவை மற்றும் கைப்பேசி சேவையைப் பயன்படுத்தலாம்.
மேலும் ஏடிஎம் அட்டை மூலம் நாம் உலகில் உள்ள பெரும்பாலான கடைகளிலும், இணையம் மூலமும் பொருட்களை வாங்க முடியும். இதனால் எப்போதும் கையில் ரொக்கமாகப் பணத்தைப் பயத்துடன் வைத்திருக்கத் தேவையில்லை. ஒரே ஒரு ஏடிஎம் அட்டையை வைத்திருந்தால் போதும்.
4. சுலபமான வியாபாரத்திற்கு
பணம் பெறுவதற்கும், பணம் கொடுப்பதற்கும் எளிதாக ஏற்பாடு செய்வதன் மூலம் உள்ளுர் முதல் உலகம் முழுவதும் வியாபாரிகளுக்கு வங்கிக் கணக்கு ஓர் அடிப்படைத் தேவையாகின்றது.
பயணம் செய்பவர்களுக்கும் எங்கும் எப்போதும் ஏடிஎம் அட்டை மூலம் பணம் எடுத்துக் கொள்ளும் வசதி பேருதவியாக இருக்கின்றது.
5. வங்கியில் கடன் பெற
சிறப்பான முறையில் நாம் வங்கிக்கணக்கை நிர்வாகம் செய்தால் வங்கிகள் தாமாகவே முன்வந்து நமக்குக் கடன் தரும். வண்டி வாங்க, வீடு கட்ட, மேற்படிப்புக்காக, தொழில் ஆரம்பிக்க, தொழிலை விரிவாக்க மற்றும் சொந்த தேவைகள் எனப் பல காரணங்களுக்காக நாம் வங்கியில் கடன் வாங்கலாம்.
கடனை சிறப்பான முறையில் நாம் திருப்பிச் செலுத்தும்போது வங்கியில் நமது நன்மதிப்பு உயரும். மேலும் நாம் வேண்டும்போது கடன் கொடுக்கக்கூடிய உற்ற நண்பனாக வங்கி திகழும்.
6. பாதுகாப்புப் பெட்டகம் (லாக்கர்)
நமது வீட்டிலிருக்கும் தங்க நகைகள், விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் சான்றிதழ்களைப் பத்திரமாக வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்து விட்டுத் திருடர் பயமின்றித் தினமும் நிம்மதியாகத் தூங்கலாம்.
இவ்வாறு பலவழிகளில் வங்கிக் கணக்கு நமக்கு உதவியாக இருக்கும். வங்கியை நண்பனாக்கிக் கொள்வது நமது வாழ்வை வளமாக்கும்.
மறுமொழி இடவும்