கிராமத்தில் முறைசாரா ஆதாரங்களில் (வட்டிக்கடை) கடன் வாங்காமல் ஏன் வங்கி கடன் வாங்க வேண்டும்?
வட்டிக் கடைகளை விட வங்கி ஒரு சிறந்த நிதி ஆதாரமாகும். வங்கியிலிருந்து கடன் பெறும் போது சிறிது கால தாமதம் ஆகலாம். இருந்தாலும் வங்கி ஒரு பாதுகாப்பான நம்பகமான வெளிப்படையான நிறுவனம். அது எளிய நிபந்தனைகளின் பேரில் நமக்குக் கடன் தந்து உதவ முடியும். இந்திய ரிசர்வ் வங்கியினால் வங்கிகள் யாவும் முறைப்படுத்தப்பட்டுள்ளன.
முறைசாரா ஆதாரங்கள், நண்பர்கள், உறவினர்களை விட வங்கி கடன் குறைந்த வட்டி கொண்டது. இது ஒரு சிறப்பான அம்சமாகும்.
கடன் வழங்கும் முன்பே முழு ஆவணங்களும் தயாரிக்கப்படுகின்றன. பிரச்சனை ஏற்பட்டால் குறைதீர் அமைப்பும் உள்ளது. வங்கிகள் வெளிப்படையானவை குறைந்த வட்டி வசூலிப்பவை.
வங்கிகளில் உள்ள குறைதீர்க்கும் அமைப்பு என்றால் என்ன?
வங்கி ஒரு முறைப்படுத்தப்பட்ட நிறுவனமாகும். ஒவ்வொரு வங்கியிலும் ஒரு குறை தீர்க்கும் அதிகாரி உள்ளார். இது பற்றிய விபரங்கள் அந்தந்த வங்கி கிளைகளிலும் வங்கியின் வலைதளத்திலும் வெளியிடப்படுள்ளன.
பிரச்சனை ஏற்படின் நம் புகாரை அந்த அதிகாரியிடம் தாக்கல் செய்யலாம். அவர் எடுக்கும் முடிவு திருப்தி அளிக்காவிட்டால் இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள புகார்களை விசாரிக்கும் அதிகாரியிடம் புகார் செய்யலாம்.
இது போன்ற குறை தீர்க்கும் அமைப்பு முறைசாரா ஆதாரங்களில் இல்லை. அவை முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் அல்ல. அதனால் தான் அவற்றின் நிபந்தனைகளோ, ஆவணங்களோ வெளிப்படையாக இல்லை.
வங்கிக் கடன் பெற மற்ற அமைப்புகளை விட ஏன் சில நேரங்களில் சற்று காலதாமதமாகிறது?
வங்கி பொது மக்கள் செலுத்திய வைப்பு தொகையிலிருந்து கடன் வழங்குகிறது. சேமிப்பாளர்களின் பணத்தைப் பாதுகாப்பதற்கு அவர்கள் பணம் சரியாக பயனாளியை அடைகிறதா என்பதை உறுதி செய்தல் வேண்டும்.
ஆகவே கடன் வழங்கும் முன்பு கடன் முன் மொழிவுகள் விரிவாக பரிசீலனை செய்யப்படுகின்றன. இதற்குச் சற்று கால அவகாசமானாலும் கடன் வாங்குவோர் ஏமாற்றப்படுவதிலிருந்து காக்கப்படுகிறார்கள்.
உண்மையில் சேமிப்பாளர் கடன் வாங்குவோர் இருவரின் நன்மைக்காகவே இவ்வாறு செய்யப்படுகிறது.
வங்கி அளிக்கும் கடன் வகைகள் யாவை?
வணிக நிறுவனங்கள் நுகர்வோர் கடன்கள், வீடு கட்ட, கல்வி, விவசாயம் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக வங்கிகள் கடன் வழங்குகின்றன. அனைத்து வகையான கடன் தேவைகளையும் இங்ஙனம் வங்கிகள் பூர்த்தி செய்கின்றன.
ஒருவர் ஒரு வங்கியிலிருந்து கடன் பெற என்ன செய்ய வேண்டும்?
கடன் பெறும் நோக்கத்தைக் குறிப்பிட்டு ஒரு கடன் விண்ணப்பத்தை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். வங்கி அதிலுள்ள விபரங்களை சரிபார்க்கும். விண்ணப்பதாரரின் திரும்ப செலுத்தும் திறனை கண்டறிந்து கடன் வழங்கும்.
கடன் பெற்றவர் வங்கி குறிப்பிட்ட கால தவணைகளில் கடனை வட்டியுடன் திரும்பச் செலுத்த வேண்டும்.
வங்கியிலிருந்து கடன் வாங்குவதற்கான விலை என்ன?
கடன் வாங்கிய தொகைக்கு வசூலிக்கப்படும் வட்டி தான் கடன் வாங்குதலுக்கான விலையாகும். கடனுக்காக செலுத்தப்படும் வட்டிதான் வாங்கியவர் கொடுக்கும் விலை என்பதை உணர வேண்டும்.
வங்கிகள் வழக்கமாக வட்டி விகிதத்தை ஆண்டுக்கு இவ்வளவு என்று குறிப்பிடும் (எ.கா.) ஆண்டு வட்டி விகிதம் 12 சதவிகிதம் என்றால் மாதத்திற்கு வட்டி ஒரு சதவிகிதம் ஆகும்.
கடன் விலையை நிர்ணயிப்பதால் கடன் தொகையுடன் வட்டி எத்தனை மாதத்திற்கு ஒரு முறை கூட்டப்படுகிறது என்பதும் முக்கிய அம்சமாகும். (மாதா மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறையா என்பதை அறிய வேண்டும்.)
வட்டி கடைகளில் கடனின் உண்மையான விலையை நம்மிடம் சொல்வதில்லை. ஆனால் வங்கியில் வட்டி விகிதங்கள் மற்ற கட்டணங்கள் ஆகியவை அறிவிப்பு பலகையில் இடம் பெற்றிருக்கும்.
அவை எல்லா வாடிக்கையாளர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும். கடன் மற்றும் வைப்புத் தொகை வட்டி விகிதம், மற்ற கட்டணங்களை வங்கிகள் வெளிப்படையாக அறிவிக்கின்றன.
கடனுக்காக நாம் ஏதும் பிணையம் அளிக்க வேண்டுமா?
பிணையம் நாம் எடுக்கும் கடன் வகை, கடன் வாங்கும் நோக்கத்தைப் பொறுத்தது. பொதுவாக அதிகபற்று கடன்களுக்கு பிணையம் தேவையில்லை.
ஆனால் பெருந்தொகையான கடன்களுக்குப் பிணையம் கொடுக்க வேண்டும். அது வங்கி கடன் மூலம் வாங்கும் சொத்தாகவும் இருக்கலாம். அல்லது நிலம் வீடு போன்றவற்றைப் பிணையாக அளிக்கலாம். அது எந்த வகைக்கடன் என்பதைப் பொறுத்தது.
நாம் ஏன் கடனைத் திரும்பச் செலுத்த வேண்டும்?
வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் பெற்ற வைப்பு நிதிப் பணத்தைத்தான் கடன் வழங்கப் பயன்படுத்துகிறது.
கடனாளி கடனைத் திரும்பச் செலுத்தவில்லையென்றால் வங்கியின் நிதி நிலைமை பலவீனமாகும். அது வாடிக்கையாளர்களின் வைப்பு நிதியை உரிய நேரத்தில் வழங்கும் வங்கியின் திறனைப் பாதிக்கும்.
வங்கியின் எல்லாக் கடனாளிகளும் இப்படிக் கடனைத் திரும்பச் செலுத்தாமல் இருந்தால் நாம் மற்றும் நம் உறவினர்கள் வங்கியில் செலுத்தியுள்ள வைப்புத் தொகையைத் திரும்பப் பெறுவது சிரமமாகும்.
மேலும் கடனாளி செலுத்தும் தொகை வேறொருவருக்குக் கடன் கொடுக்க வங்கிக்குத் தேவைப்படுகிறது.
அது மட்டுமல்ல நாம் கடனைத் திரும்பச் செலுத்தினால் தான் எதிர்காலத்தில் வங்கி நமக்குக் கடன் வழங்கும்.
ஒருவர் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால் என்ன ஆகும்?
ஒருவேளை ஒரு கடனாளி கடனைத் திரும்பச் செலுத்தாவிட்டால் அவர் பிணையம் வைத்த சொத்தை எடுத்துக் கொள்ள வங்கிக்கு உரிமை உண்டு.
மேலும் கடனை வட்டியுடன் திரும்பப் பெற வங்கி சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!