அனைத்து வங்கி சேவைகளையும் பெற சேமிப்புக் கணக்கைத் தொடங்குவதே முதல் படி.
நம் பணத்தைச் சேமித்து வைக்க வங்கி சேமிப்புக் கணக்கு நமக்கு உதவுகிறது.
பணம் பெறுதல்
மின்னனுவியல் பயன் மாற்றல் மூலம் சமூக பாதுகாப்பு பயன்களான திரவ எரிவாயு மானியத்தற்கான ரொக்கம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கூலி, முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம். ஆகியவை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
நமக்கு சேர வேண்டிய பணம் நம் கணக்கில் நேரடியாக உரிய நேரத்தில் இடைத்தரகர் இடையூறின்றி சேர்கிறது. இதன் மூலம் தாமதமும், இடைத்தரகர் முறையில் ஏற்படும் இழப்பும் தவிர்க்கப்படுகின்றன.
நமக்குத் தேவையான போது நம் கணக்கிலிருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம்.
பணம் செலுத்துதல்
நாட்டில் எந்த இடத்திலும் உள்ள ஒரு நபருக்கு நாம் வங்கியின் மூலம் பணம் செலுத்தலாம்.
ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஒரு நபரிடமிருந்து இன்னொரு நபருக்கு பணத்தை வங்கி பாதுகாப்பாகவும், விரைவாகவும், திறமையாகவும் அனுப்புகிறது.
வேறொரு ஊரில் படிக்கும் நம் பிள்ளைகளின் வங்கிக் கணக்கிற்கு எளிதில் பணம் அனுப்பலாம். அதே போல் தொலை தூரத்தில் பணிபுரியும் நம் உறவினரிடமிருந்து நம் வங்கி கணக்கிற்கு பணம் பெற முடியும்.
வட்டி என்றால் என்ன?
வட்டி என்பது நாம் சேமிக்கும் பணம் சம்பாதிக்கும் தொகையாகும்.
அல்லது நாம் கடன் வாங்கினால் அசலுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டிய தொகை வட்டி எனப்படும்.
நாம் வங்கியில் போடும் பணம் அப்படியே இருப்பதில்லை. அந்த பணத்தை வங்கி மற்றவர்களுக்கு கடனாக வழங்குகிறது. அவ்வாறு கடன் வாங்குபவர் வங்கிக்கு வட்டி கட்டுகிறார்.
எடுத்துக்காட்டாக நாம் வங்கியில் ரூ.1000 சேமிக்கிறோம். வங்கி அதை ஒருவருக்கு கடனாக கொடுக்கிறது. ஆண்டு இறுதியில் அவர் வங்கி கட்டணமாக ரூ.100 செலுத்துகிறார். வங்கி அதில் ஒரு பகுதியை (ரூ.40) நமக்கு கொடுக்கிறது. இது தான் வட்டியாகும்.
வட்டி கடைக்காரர்கள் வாங்கும் வட்டி விகிதம் 3-5% என்கிறார்கள். எனில் நாம் வங்கியோடு ஒப்பிடும் போது வட்டிகடைக்காரருக்கு அதிக வட்டி கொடுக்க வேண்டியுள்ளது ஏன்?
வங்கி அறிவித்தது வருடாந்திர வட்டி விகிதம். ஆனால் வட்டி கடைக்காரர் சொல்வது மாதாந்திர வட்டி விகிதம். எனவே வட்டிக் கடையில் வட்டி விகிதம் 3% என்றால் ஆண்டுக்கு (3 X 12) 36% ஆகும்.
வங்கியில் 12% வட்டி என்றால் ஆண்டுக்கு 12% மட்டுமே. ஆக வங்கி வட்டிக்கடையை விட குறைந்த வட்டியே வசூலிக்கிறது. எனவே வங்கியில் கடன் பெறுவோம். வட்டிக்கடையில் அதிக வட்டி செலுத்துவதை தவிர்ப்போம்.
சேமிப்பு கணக்கு வகைகள் யாவை?
வங்கியில் மூன்று விதமான சேமிப்பு கணக்குகள் தொடங்கலாம்.
1. சேமிப்புக் கணக்கு
சேமிப்புக் கணக்கில் அன்றாடம் கிடைக்கும் அதிகப்படி பணத்தை செலுத்தலாம். நமக்கு தேவையான போது எடுத்துக் கொள்ளலாம். சேமிப்பு கணக்கில் அதிகப் பற்றும் (அவசரத் தேவைக்கு) பெற்றுக் கொள்ளமுடியும்.
2. நிரந்தர வைப்பு நிதி கணக்கு
நிரந்தர வைப்பு நிதி கணக்கில் நம் பணத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு போட்டு வைக்கலாம். இதற்குச் சேமிப்புக் கணக்கைவிட அதிக வட்டி உண்டு.
நமக்கு தேவை ஏற்பட்டால் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே பணத்தை எடுக்கலாம் அந்த தருணத்தில் வட்டி குறைவாகத்தான் கிடைக்கும்.
3. தவணைமுறை சேமிப்பு கணக்கு
தவணை முறை சேமிப்பு கணக்கில், தினம் தினம், வாரா வாரம் அல்லது மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தலாம் நிரந்தரமான சேமிப்புக்கு இது நல்லது.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!