வசந்த வைகாசி

வசந்தம் உண்டாகக் கூடிய காலநிலை, விழாக்கள், வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவதால் வைகாசி மாதமானது வசந்த வைகாசி என்று அழைக்கப்படுகிறது.

இம்மாதமானது மாதவ மாதம், வைகாசம் என்றெல்லாம் சிறப்பிக்கப்படுகிறது. இம்மாதத்தில் வழிபாடுகள் மேற்கொள்ள ஆயுள், செல்வம், புத்திரப்பேறு ஆகியவை கிடைக்கும்.

வைகாசியானது தமிழ் வருடத்தின் இரண்டாவது மாதம் ஆகும். இளவேனிற் எனப்படும் வசந்த காலத்தில் இம்மாதம் வருவதால் கோவில்களில் பிரம்மோற்சவங்கள், வசந்த விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

இம்மாதத்தில் பௌர்ணமி விசாக நட்சத்திரத்தில் வரும். எனவே இம்மாதம் வைகாசி என்றழைக்கப்படுகிறது. வைகாசம் என்பதற்கு மலர்ச்சி என்பது பொருளாகும்.

வைகாசியில் தமிழ் கடவுளாம் முருகப்பெருமான், நரனும், சிங்கமும் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி, புத்த மதத்தை தோற்றுவித்த கௌதம புத்தர், என்றும் சிரஞ்சீவியாக வாழும் தத்தாத்ரேயர் மற்றும் இந்துக்களின் மரணக்கடவுளான எமதர்மன்  ஆகியோர் தோன்றியுள்ளனர்.

பாற்கடலில் இருந்து அமுதம் வெளிப்பட்டது வைகாசி வளர்பிறை ஏகாதசியில். சிவபெருமான் உலகைக் காக்கும் பொருட்டு ஆலகால விஷத்தை உண்டது வைகாசி வளர்பிறை துவாதசியில்.

ஆலகால விஷத்தினை கண்டத்தில் இருத்தி திருநீலகண்டனாய் நந்தியெம் பெருமானின் கொம்புகளுக்கு இடையில் இறைவன் திருநடனம் புரிந்தது வைகாசி வளர்பிறை திரயோதசியில்.

தேவர்கள் அமிர்தத்தை புசித்தது வைகாசி பௌர்ணமியில். ஆதலால் வைகாசி வளர்பிறை ஏகாதசி, துவாதசி, திரயோதசி, பௌர்ணமி தினங்களில் தானம் செய்ய, பல மடங்கு நன்மைகள் கிடைக்கும்.

வைகாசியில் புனித தீர்த்தங்களில் நீராடி திருமாலை துளசியால் வழிபட நற்பேறுகள் கிடைக்கும்.

வைகாசியில் வைகாசி விசாகம், விநாயகர் வெள்ளிக்கிழமை விரதம், ரிஷப விரதம், புத்த பூர்ணிமா, மோஹினி ஏகாதசி, வரூதினி ஏகாதசி போன்ற விழாக்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன.

 

வைகாசி விசாகம்

முருகப்பெருமான் அவதாரக் கொண்டாட்டம்

வைகாசி விசாகம்
வைகாசி விசாகம்

வைகாசி விசாகம் என்பது வைகாசி மாதத்தில் பௌர்ணமியை ஒட்டி வரும் விசாக நட்சத்திரத்தில் தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அவதார தினமாகக் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவானது வைகாசி விசாக பெருவிழா என்றும் அழைக்கப்படுகிறது.

இத்திருவிழாவின் போது மக்கள் முருகப்பெருமானுக்கு விரதமுறையை மேற்கொண்டும், காவடி எடுத்தும், பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும், பாதயாத்திரை மேற்கொண்டும் வழிபாடு செய்கின்றனர்.

விரதமுறையை மேற்கொள்வோர் பகல் முழுவதும் உண்ணாமல் முருகன் பற்றிய நினைப்புடன் இருந்து, மாலையில் விளகேற்றி முருகனை வழிபட்டு உணவினை உண்டு விரதத்தை நிறைவு செய்கின்றனர்.

வழிபாட்டின்போது சர்க்கரைப் பொங்கல், நீர்மோர், பானகம், தயிர், அன்னம், அப்பம் ஆகியவற்றைப் படைக்கின்றனர். செவ்வரளி, நாகலிங்கப்பூ, செந்தாமரை, மல்லிகை முதலிய மலர்களைக் கொண்டு வழிபடுகின்றனர்.

இந்நாளில் குடை, செருப்பு, நீர்மோர், பானகம், தயிர் அன்னம் ஆகியவை தானமாக வழங்கப்படுகின்றன. மலைக் கோவில்களில் கிரிவலம் மேற்கொள்ளப்படுகிறது.

வைகாசி விசாகத்தன்று முருகனை நினைத்து விரதமுறையை மேற்கொள்வதால் குழந்தைப்பேறு கிடைக்கும். நல்ல மணவாழ்க்கை அமையும். நோயில்லா நீண்ட ஆயுள் கிட்டும்.

 

எமதர்மனின் அவதார தினம்

எமதர்மன்
எமதர்மன்

இந்துக்களின் மரணக்கடவுளான எமதர்மனின் அவாதர தினம் வைகாசி விசாகம் ஆகும். ஆதலால் அன்றைய தினம் எமதர்மனை வழிபாடு செய்ய நோய்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும்.

 

புத்த பூர்ணிமா

கௌதம புத்தர்
கௌதம புத்தர்

பௌத்த மதத்தைத் தோற்றுவித்த கௌதம புத்தரின் அவதார தினம் வைகாசி பௌர்ணமி ஆகும். புத்தர் ஞானம் பெற்றததும், மோட்சம் அடைந்ததும் வைகாசி பௌர்ணமியில்தான். எனவே வைகாசி பௌர்ணமியை பௌத்தர்கள் புத்த பூர்ணிமா என்ற பெயரில் கொண்டாடுகின்றனர்.

 

அர்ச்சுணன் சிவபெருமானிடம் இருந்து பாசுபாத ஆயுதத்தை வைகாசி விசாகத்தன்று பெற்றார்.

வைகாசி விசாகத்தன்று வடலூரில் இராமலிங்க அடிகள் சத்திய ஞான தரும சபையை நிறுவினார்.

 

நரசிம்ம மூர்த்தி திருஅவதாரம்

திருவரங்கம்

தனது பக்தனான பிரகலாதனை கொடியவனான இரணிய கசிபுவிடமிருந்து காக்க திருமால் மனித உடலும், சிங்க தலையும் கொண்டு தூணிலிருந்து வைகாசி வளர்பிறை சதுர்த்தி அன்று அவதரித்தார்.

இரணிய கசிபுவின் வரத்தின்படி மாலை வேளையில் தலைவாசலில் மடியில் இருத்தி நகங்களால் வயிற்றினைக் கீறி இரணிய கசிபுவினைக் கொன்றார் நரசிம்ம மூர்த்தி. எனவே வைகாசி வளர்பிறை சதுர்த்தி அன்று நரசிம்மரை வழிபட, வாழ்வின் கஷ்டங்கள் நொடியில் நீங்கி சுகவாழ்வு பெறலாம்.

 

விநாயகர் வெள்ளிக்கிழமை விரதம்

கன்னிவிநாயகர்

விநாயகர் வெள்ளிக்கிழமை விரதம் என்பது விநாயகப் பெருமானை நினைத்து வைகாசி வளர்பிறை முதல் வெள்ளியன்று தொடங்கி பின்பற்றப்படும் விரதமாகும்.

இவ்விரத முறையில் பகலில் உண்ணாது விநாயகப்பெருமானின் நினைப்பில் இருந்து மாலையில் விநாயகரை வழிபட்டு இரவில் பழம் மற்றும் இட்லியை உண்டு விரதத்தை நிறைவு செய்யலாம். இவ்விரத முறையை மேற்கொள்வதால் கல்வி மேன்மை அடையும்.

 

ரிஷப விரதம்

அம்மையப்பர்
அம்மையப்பர்

ரிஷப விரதம் என்பது வைகாசி வளர்பிறை அஷ்டமியில் இடபத்தில் அமர்ந்த நிலையில் உள்ள அம்மை அப்பரான உமா மகேஸ்வரரை நினைத்து பின்பற்றப்படும் விரதமுறையாகும். இவ்விரதமானது சதாசிவாஷ்டமி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

இவ்விரத முறையில் பச்சை தண்ணீர் படையலாக படைக்கப்படுகிறது. இவ்விரதமுறையை பின்பற்றுபவர்களும் பச்சை தண்ணீரையே அருந்துகின்றனர்.

இவ்விரதமுறையைப் பின்பற்றுவதால் நமது பாவங்கள் நீங்கும். புதிய வாகனங்கள் வாங்கும் பாக்கியம் கிடைக்கும். விபத்தில்லா வாகனப் பயணங்கள் அமையும். இவ்விரதமுறையைப் பின்பற்றியே இந்திரன் ஐராவதத்தையும், குபேரன் புஷ்பக விமானத்தையும் தங்களது வாகனமாகப் பெற்றார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.

 

மோகினி ஏகாதசி

பெருமாள்
பெருமாள்

வைகாசி வளர்பிறை ஏகாதசி மோகினி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இத்தினத்தில் விரதமுறை மேற்கொண்டு திருமாலை வழிபட உடல் சோர்வு நீங்கி உடல் உறுதியாகும். வளர்ச்சிக்கான எண்ணங்களை வெற்றி பெறச் செய்யும்.

 

வரூதினி ஏகாதசி

வைகாசி தேய்பிறை ஏகாதசி வரூதினி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இத்தினத்தில் விரதமுறை மேற்கொண்டு திருமாலை வழிபட வாழ்க்கைக்கு தேவையான அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும். உடலின் ஆரோக்கியத்தை மேம்படச் செய்யும்.

 

வைகாசியை சிறப்பு செய்தவர்கள்

வைகாசி மாதத்தில் 63 நாயன்மார்களில் திருஞானசம்பந்தர், கழற்சிங்கர், சோமாசி மாறன், நமிநந்தி அடிகள், திருநீலநக்கர், முருக நாயனார், திருநீலகண்ட யாழ்பாணர் ஆகியோர் பிறந்தவர்கள் ஆவர்.

12 ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் வைகாசியில் தோன்றியவர் ஆவார்.

நம்மாழ்வார்
நம்மாழ்வார்

நாயன்மார்களின் வாழ்க்கை எடுத்து கூறும் பெரிய புராணத்தை எழுதிய சேக்கிழார் வைகாசியில் பிறந்தவர் ஆவார்.

காஞ்சி பெரியவர் என்றழைக்கப்படும் சந்திரசேகர சுவாமிகள் வைகாசியில் அவதரித்தவர் ஆவார்.

வசந்த வைகாசி மாதத்தில் வழிபாடுகள் மேற்கொண்டு நம் வாழ்வில் வசந்தங்களைப் பெறுவோம்.

  • வ.முனீஸ்வரன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.