வஜ்ராயுதம் கிடைக்க காரணமான ததீசி முனிவர்

வஜ்ராயுதம் என்பது தேவேந்திரனான இந்திரனின் வலிமை மிக்க ஆயுதம் ஆகும்.

வஜ்ராயுதம் இந்திரனுக்கு கிடைக்க காரணமானவர் யார்? என்ற கேள்விக்கு ததீசி முனிவர் என்பதே பதிலாகும். தியாகத்தின் உருவமான ததீசி முனிவர் பற்றியும், வஜ்ராயுதம் இந்திரனுக்கு கிடைக்கப் பெற்ற விதம் பற்றியும் அறிந்து கொள்வோம்.

ததீசி முனிவர் வேத காலத்தைச் சார்ந்தவர். இவர் பெரிய சிவபக்தர். இவருடைய பெற்றோர் அதர்வண முனிவர் சிட்டி தேவி ஆவர். இவருடைய தந்தையே அதர்வண வேதத்தை உருவாக்கியவர் என்று கருதப்படுகிறார். ததீசி முனிவரின் மனைவி சுவர்ச்சா ஆவார்.

இவர் ஒரு சமயம் அரசன் ஒருவனுடன் கருத்து வேறுபாடு கொண்டார். இதனால் முனிவருக்கும், அரசனுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது. சண்டையின் முடிவில் ஏராளமான காயங்கள் முனிவருக்கு உண்டானது.

ததீசி முனிவரும் சுக்ராச்சாரியாரின் உதவியால் காயங்கள் நீங்கப் பெற்றார். பின் சுக்ராசாரியார் ததீசி முனிவருக்கு ம்ருத்யுஞ்ச சஞ்சீனி மந்திரத்தை போதித்தார்.

மந்திர உபதேசத்தின் பலனாக முனிவரின் உடல் மின்னல் போன்று வலிமை மிக்கதாக மாறியது. பின் முனிவர் அரசனுடன் ஏற்பட்ட சண்டைக்காக மனம் வருந்தி சிவனை நோக்கி தவம் இருந்தார்.

இறுதியில் சிவபெருமான் முனிவருக்கு காட்சி தந்தார். பின் முனிவரை எவரும் துன்புறுத்த முடியாது. எவரும் முனிவரைக் கொல்ல முடியாது. முனிவரின் உடல் மற்றும் எலும்புகள் வஜ்ரம் (மின்னல்) போன்று உறுதியானவையாக இருக்கும் என வரங்களை வழங்கினார்.

பின் ததீசி முனிவரும் காட்டில் தவ வாழ்க்கையை மேற்கொண்டார். அப்பொழுது பாற்கடலில் அமுதம் கடைவதற்காக தேவர்களும், அசுரர்களும் முடிவு மேற்கொண்டனர். தேவர்களும் தங்களின் ஆயுதங்கள் தீய சக்திகளிடம் சிக்காமல் இருக்க என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த தேவரிஷி நாரதர் “தேவர்கள் தங்களின் ஆயுதங்களைப் ததீசி முனிவரிடம் கொடுத்து பாதுகாக்க சொல்வதே சிறந்தது” என்று கூறினார்.

தேவர்களும் தங்களின் ஆயுதங்களை ததீசியிடம் கொடுத்து “நாங்கள் திரும்பி வந்து கேட்கும் வரை ஆயுதங்களை பாதுகாக்க வைத்திருங்கள்” என்று கூறினர்.முனிவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து ஆயுதங்களை தன்வசம் வைத்துக் கொண்டார். 

பாற்கடலை கடைந்த பின்பு வந்த அமிர்தத்தை தேவர்கள் பருகி சீரஞ்சீவி ஆயினர். தங்களின் ஆயுதங்கள் குறித்து மறந்து போயினர்.

ததீசி முனிவரும் தேவர்களிடம் அவர்களின் ஆயுதங்களை ஒப்படைப்பதற்காக அவர்களின் வருகைக்காகக் காத்திருந்தார். நாட்கள் நகர்ந்தன. தேவர்கள் திரும்பி வரவில்லை.

ததீசி முனிவரும் தேவர்களின் ஆயுதங்களை பாதுகாக்க முடியாமல் தனது தவ வலிமையால் அவற்றை திரவமாக்கி குடித்து விட்டார். தேவ ஆயுதங்களின் சக்தி முழுவதும் முனிவரின் முதுகெலும்பில் போய் சேர்ந்தது.

இந்நிலையில் விருத்தாசுரன் என்ற அசுரன் பிரம்மாவை நோக்கி தவம் இருந்தான். அவனுடைய தவத்தினைப் பாராட்டி பிரம்மதேவர் அவர் முன் தோன்றினார்.

அவரிடம் இருந்து அசுரன் “எனக்கு உலகின் உலோகம் மற்றும் மரத்தால் ஆன ஆயுதத்தாலோ, பஞ்சபூதத்தாலும், எந்த உயிரிகளாலும் ஆபத்து ஏற்படக் கூடாது” என்ற வரம் வேண்டும் என்று கேட்டான். பிரம்மாவும் அவன் கேட்ட வரத்தை அருளினார்.

வரத்தின் காரணமாக ஆவணம் தலைக்கேற உலக உயிர்களை விருத்தாசுரன் துன்புறுத்தினான். எந்த ஆயுதத்தாலும் அசுரனை கொல்ல இயலாது என்பதை அறிந்த இந்திராதி தேவர்கள் மிகவும் கவலையுற்றனர். அவர்கள் சிவபெருமானிடம் விருத்தாசுரனின் அழிவிற்கு வழிகூறுமாறு வேண்டினர்.

சிவபெருமானும் “உங்களின் பிரச்சினைக்கு ததீசி முனிவர் தீர்வு சொல்வார். நீங்கள் அவரைச் சந்தியுங்கள்” என்றார்.

அதன்படி இந்திராதி தேவர்கள் முனிவரை சந்தித்து விருத்தாசுரன் பற்றியும், அவனுடைய வரத்தினைப் பற்றியும் தெரிவித்தனர்.

அதனைக் கேட்ட முனிவர் “நீங்கள் வருத்தப்படாதீர்கள். நீங்கள் ஏற்கனவே என்னிடம் கொடுத்த ஆயுதங்களின் வலிமை எல்லாம் என்னுடைய முதுகெலும்பில் சேகரமாகி உள்ளது. அதனைக் கொண்டு நீங்கள் விருத்தாசுரனை வதம் செய்யலாம்” என்றார்.அதனைக் கேட்ட இந்திரன் மிகவும் அதிர்ச்சி அடைந்தான்.

இதனைக் கண்ட ததீசி முனிவர் “இந்திரா கவலைப் படாதே. என் உடல் முழுவதும் உப்பினைப் பூச்சிக் கொண்டு தியானத்தில் அமர்கிறேன். நீ ஒரு பசுவினைக் கொண்டு எனது உடலில் உள்ள உப்பினை நாவால் நக்கச் செய். எனது உடலில் உள்ள சதையானது பிரிந்து தனியே வந்து விடும். இறுதியாக உள்ள எலும்பினை எடுத்து ஆயுதமாக தயார் செய்து அதனைக் கொண்டு விருத்தாசுரனை வதம் செய்.” என்றார்.

முனிவரின் கூற்றினைக் கேட்ட இந்திராதி தேவர்கள் முனிவரின் பற்றற்ற தன்மையையும் அவரின் தியாகத்தினையும் எண்ணி வியந்தனர்.

பின்னர் அவர்கள் முனிவரின் கூற்றுப்படி தியானத்தில் அமர்ந்திருந்த ததீசி முனிவரின் உப்பு தடவிய உடலினை பசுவின் நாவால் நக்கச் செய்தனர்.

சதை பிரிந்து எலும்பு மட்டும் கிடைத்தது. அதனை தேவதச்சனிடம் கொடுத்தனர். தேவ தச்சனும் முனிவரின் எலும்பிலிருந்து வஜ்ராயுதத்தை உருவாக்கினார். பின் வஜ்ஜிராயுதத்தைக் கொண்டு இந்திரன் விருத்தாசுரனை வதம் செய்தான். இவ்வாறே வஜ்ராயுதம் இந்திரனுக்கு கிடைத்தது.

வஜ்ராயுதம் இந்திரனின் வலிமை மிக்க ஆயுதமாகவும் விளங்கியது. பலசாலிகளான கருட பகவானும், அனுமனும் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்டனர். கருட பகவான் தனது ஒரு சிறகினை இழந்தும், அனுமன் மூர்ச்சை அடைந்தும் இவ்வாயுதத்தினைப் பெருமைப்படுத்தும் விதமாக நடந்து கொண்டனர்.

தற்போது இந்திய அரசின் உயரிய விருதான பரம் வீர் சக்ராவின் மேல் ததீசி முனிவரின் முதுகெலும்பு படம் வரையப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்துமத நம்பிக்கையின்படி உலகின் முதல் உடல் உறுப்பு தானம் செய்தவர் ததீசி முனிவர் ஆவார். நாமும் அவரைப் பின்பற்றி பிறருக்கு ஆபத்து காலங்களில் நம்மால் ஆன உதவிகளைச் செய்து இறையருள் பெறுவோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.