அழகுச் சிலைபோல் அமர்ந்தினிது
பழகும் மெழுகுப் பதுமையினாள்
கழகத் தமிழ்போல் கவர்ந்துயிரை
விழுங்கி வளர்க்கும் விழுமையினாள்
கொஞ்சும் மிழற்று மொழிகொண்டு
நெஞ்சப் பையை நெகிழ்ப்பவளாம்
அஞ்சி மருளும் விழியொளியால்
மஞ்சள் நிலவைப் பழிப்பவளாம்
இருளில் கூட ஒளிவீசும்
அருமை இவளின் திருமேனி
கருமை நிறமே கடன்வாங்கும்
பெருமைக் கூந்தல் மகராணி
தென்றல் இறைக்கும் நறுமணத்தைக்
குன்றச் செய்யும் குணவதியாள்
முன்றில் மலர்ந்து மனமயக்கும்
அன்றில் நாணும் மலர்முகத்தாள்
தில்லைக் கூத்தன் திருநடந்தான்
முல்லை மலராள் நடைநடந்தால்
கொல்லிப் பாவை உயிர்பிடிக்கும்
அல்லி மலர்க்கை அணைத்துவிட்டால்
துவரச் சிவந்த இதழ்க்குவிவில்
தவமும் உரமும் தளர்த்திடுவாள்
கவணே இன்றிக் கல்லெறியும்
விவரம் பேசும் விழிபடையாள்
செய்யுண் மலர்ந்த செழுமலரோ
நெய்யால் பிசைந்த நெகிழ்பொருளோ
கையைப் புலவர் பிசைகின்ற
ஐயப் பாதம் எதன்வகையோ
திதலை யல்குல் இடைமருங்குல்
சிதையாய் நெஞ்சில் வெடிப்பதையான்
குதலை மொழியால் கவிவடிக்கச்
சிதலை யாகிப் படிக்கின்றேன்
காதற் கலையின் இளந்தளிரைச்
சாதல் வரையில் நயந்திருப்பேன்
கூதல் நிறைந்த பொழுதுகளை
வேதம் போல நினைத்திருப்பேன்
ஆதிகவி(எ) சாமி.சுரேஷ்
ஆவடி, திருவள்ளூர்
பேச 8667043574
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!