வட்ட மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

வட்ட மாங்காய் ஊறுகாய் மாவடு எனப்படும் மாம்பிஞ்சிலிருந்து தயார் செய்யப்படுகிறது. இந்த வகை ஊறுகாய் செய்ய கிளிமூக்கு எனப்படும் ஆராக்காய் மாவடு ஏற்றது.

இந்த ஊறுகாய் தயார் செய்ய மாங்காயில் உள்ளே உள்ள விதையின் ஓடானாது இல்லாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் மாங்காயை குறுக்காக வெட்டும்போது வட்டமாக எளிதாக வெட்ட முடியும்.

இது பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு சுவையிலும் அசத்தும். மாவடு சீசனான மாசி, பங்குனி மாதங்களில் இதனைச் செய்து சுவைக்கலாம்.

இனி எளிதான முறையில் சுவையான வட்ட மாங்காய் ஊறகாய் செய்யும்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கிளிமூக்கு மாவடு – 1 கிலோ

மிளகாய் வற்றல் பொடி – 50 கிராம்

கல் உப்பு – 50 கிராம்

கடுகுப் பொடி – 20 கிராம்

மஞ்சள் பொடி – 10 கிராம்

வெந்தயப் பொடி – 20 கிராம்

காஷ்மீரி மிளகாய் வற்றல் பொடி – 20 கிராம்

மண்டை வெல்லம் – 20 கிராம்

தாளிக்க

நல்ல எண்ணெய் – 50 கிராம்

கடுகு – 2 ஸ்பூன்

கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை

மாவடுக்களை ஈரத்துணியால் நன்கு துடைத்துவிட்டு, காய்ந்த துணியில் போட்டு மேலே ஈரப்பதம் இல்லாதவாறு நன்கு உலர விடவும்.

சுத்தம் செய்யப்பட்ட மாவடுக்கள்

மிளகாய் வற்றல் பொடிக்கு தேவையான மிளகாய் வற்றலை காம்பு நீக்கி, வெயிலில் காய வைத்து மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ளவும்.

கடுகுப் பொடிக்குத் தேவையான கடுகினை வெறும் வாணலியில் சேர்த்து, பொரியும்வரை வறுத்து மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ளவும்.

வெந்தயப் பொடிக்குத் தேவையான வெந்தயத்தை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ளவும்.

மஞ்சள் பொடிக்கு விரலி மஞ்சளைக் காய வைத்து, மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை நன்கு அலசி வெயிலில் ஈரப்பதம் போகும் வரை காய வைத்துக் கொள்ளவும்.

மாவடுகளை குறுவாக்கில் 1/4 இன்ச் தடிமனுக்கு வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.

வட்டத்திற்குள் உள்ளே இருக்கும் விதைகளை வெளியே எடுத்து விடவும்.

வட்டமாக்கப்பட்ட மாவடுக்கள்

ஒருபாத்திரத்தில் வட்டமாக நறுக்கிய மாவடுக்களைச் சேர்க்கவும்.

அதனுடன் கல்உப்பு, மிளகாய் வற்றல் பொடியைச் சேர்க்கவும்.

உப்பு, மிளகாய்ப் பொடி சேர்த்ததும்

பின்னர் அதனுடன் காஷ்மீரி மிளகாய் வற்றல் பொடி, வெந்தயப் பொடி, கடுகுப் பொடி, மஞ்சள் பொடி, மண்டை வெல்லம் சேர்க்கவும்.

காஷ்மீரி மிளகாய் வற்றல் பொடி, வெந்தயப் பொடி, கடுகுப் பொடி, மஞ்சள் பொடி, மண்டை வெல்லம் சேர்த்ததும்

கரண்டியால் எல்லாப் பொடி வகைகளும் மாங்காய் முழுவதும் படுமாறு ஒருசேரக் கிளறி விடவும்.

கிளறியதும்

இந்த மாங்காய் கலவையை மூடியிட்டு 24 மணி நேரம் ஊற வைக்கவும்.

அவ்வப்போது மாங்காயைக் குலுக்கி விடவும்.

ஊறிய மாங்காய்

24 மணி நேரம் கழித்து பார்க்கும்போது, உப்பு முழுவதும் கரைந்து மாங்காயுடன் ஊறி தண்ணீர் வெளியே வந்திருக்கும்.

வாயகன்ற வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.

தாளிதம் செய்யும்போது

அதில் ஊறிய மாங்காயை சேர்க்கவும்.

அடுப்பினை மிதமான தீயில் வைககவும்.

அவ்வப்போது மாங்காயைக் கிளறி விடவும்.

மாங்காய்களைச் சேர்த்ததும்

10-12 நிமிடங்களில் மாங்காய் வெந்து நிறம் மாறிவிடும்.

மாங்காய் வெந்ததும் அடுப்பினை அணைத்து விடவும்.

ஊறுகாய் ஆறியதும் கழுவி துடைத்து, காய்ந்த கண்ணாடி பாட்டிலில் காற்றுப் புகாமல் அடைக்கவும்.

தண்ணீர் படாமல் கவனமாக எடுத்து அவ்வப்போது உபயோகிக்கவும்.

குளிர்பதனப்பெட்டியில் சுமார் 2 மாத காலம்வரை வைத்திருந்து இதனை உபயோகிக்கலாம்.

குறிப்பு

ஊறுகாயை வேக வைக்கும்போது மூடியிட்டால், மூடியில் இருக்கும் நீராவியானது மூடியைத் திறக்கும்போது குளிர்ந்து நீர்த்துளியாக ஊறுகாயில் பட நேரும். எனவே மூடியிட்டு ஊறுகாயை வேக வைக்கும்போது கவனம் தேவை.

ஜான்சிராணி வேலாயுதம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.