வட கறி பருப்பினைக் கொண்டு செய்யப்படும் அருமையான தொட்டுக் கறியாகும். இது ஆப்பம், இட்லி, தோசை, சப்பாத்தி உள்ளிட்டவைகளுடன் உண்ண ஏற்றது.
இனி சுவையான வட கறி செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வடை தயார் செய்ய
வடை பருப்பு – ¼ கிலோ கிராம்
பெருஞ்சீரகம் (சோம்பு) – 2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10 எண்ணம் (மீடியம் சைஸ்)
கறிவேப்பிலை – 4 கீற்று
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
கிரேவி தயார் செய்ய
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)
இஞ்சி – பாதி சுண்டு விரல் அளவு
வெள்ளைப் பூண்டு – 3 பற்கள் (மீடியம் சைஸ்)
தேங்காய் – ¼ மூடி (மீடியம் சைஸ்)
கரம் மசாலாப் பொடி – 1 ஸ்பூன்
மசாலா பொடி – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நல்ல எண்ணெய் – 4 ஸ்பூன்
பட்டை – சுண்டு விரல் அளவு
பெருஞ்சீரகம் – ¼ ஸ்பூன்
ஏலக்காய் – 1 எண்ணம்
பிரின்சி இலை – ½ எண்ணம்
கடுகு – ¼ ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கீற்று
வட கறி செய்முறை
வடை பருப்பை சுமார் 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.
தக்காளியை கழுவி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
இஞ்சி, வெள்ளை பூண்டினை தோல் நீக்கி விழுதாக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
தேங்காய், கரம் மசாலா, மசாலா பொடி, தேவையான தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து மசாலா தயார் செய்யவும்.
ஊறிய வடை பருப்பில் 1/3 பங்கு வடைப் பருப்பினை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
2/3 பங்கு வடைப் பருப்பில் தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் மிக்ஸியில் கொர கொரவென அரைத்துக் கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தில் அரைத்த வடைப் பருப்பு, ஊறிய முழு வடைப் பருப்பு, நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பெருஞ்சீரகம் சேர்த்து ஒரு சேரப் பிசையவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி வடை மாவினை வடைகளாகத் தட்டிப் போட்டு வடையின் மேற்பரப்பு லேசாக வெந்தவுடன் எடுத்து விடவும். இவ்வாறு எல்லா மாவினையும் வடைகளாக பொரித்து எடுக்கவும்.
வடைகள் ஆறியவுடன் சிறிதாகப் பிய்த்துக் கொள்ளவும்.
வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பெருஞ்சீரகம், பட்டை, ஏலக்காய், பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை, கடுகு சேர்த்து தாளிதம் செய்யவும்.
பின் அதனுடன் சதுரமாக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் முக்கால் பாகம் வெந்ததும் தக்காளி விழுதினைச் சேர்த்து வதக்கவும்.
ஓரிரு நிமிடங்களில் இஞ்சி, வெள்ளைப் பூண்டு விழுதினைச் சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதனுடன் அரைத்த மசாலா, தேவையான தண்ணீர், தேவையான உப்பு சேர்க்கவும்.
மசாலாக் கலவை கொதித்தவுடன் அதனுடன் பிய்த்து வைத்துள்ள வடைத்துண்டுகளைச் சேர்க்கவும்.
அடுப்பினை சிம்மில் வைத்து அவ்வப்போது கிளறி விடவும். ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும்.
சுவையான வட கறி தயார்.
குறிப்பு
வட கறிக்கு வடைகளை முழுவதுமாக வேகவிடக் கூடாது.