ஒரு கோப்பை
தேநீருடன்
மஞ்சள் பூவையும்
பூக்கள் குலுங்கும்
நந்தவனத்தையும்
இருவரும்
பரிமாறிக் கொண்டோம்!
தினம் தினம்
மழையில் நனைந்த
பூச்செண்டுகளோடு
இதயங்களும் நிறைகின்றன!
அவ்வப்போது
எவரோ உதிர்த்த
ஆங்கில சொலவடைகளை
அள்ளி வீசினோம்!
சுப தினங்களில்
பல தினங்களில்
பளபளப்புடன்
நட்சத்திரங்கள் ஜொலித்தன!
பசுமையான மலைச்சரிவில்
வானம் மேகம்
இத்யாதிகளுடன்
இன்னபிற கைகோர்த்தல்களை
செவ்வனே செய்த
பல்வேறு புகைப்படங்கள்
பறந்தன!
புலன செய்தியே
பிரதானமென
வேகம் பிடித்து
நேரக்கரைசல் வழியும்!
நேரிலோ
கைபேசியிலோ
பேசுகையில்
இவையேதும்
நினைவுக்கு வராமல்
குசல விசாரணைகளில்
வேறு கதைகளே மொழியப்படும்!
நட்பு ரீதியில்
ஒற்றைத் துரும்பையும் கிள்ளாமல்
வெறுமனே கணக்குக்காக
முடிகிறதாகவே இருந்து
முடிந்தும் போகலாம்
இத்தருணங்களில்
பரபரக்கும் இவை யாவும்!
எஸ்.மகேஷ்
சிட்லப்பாக்கம்
சென்னை – 600064
கைபேசி: 9841708284
மின்னஞ்சல்: mahicen@yahoo.com