வண்ணமில்லா ஓவியங்கள்!

வீட்டு திண்ணையில் பரதேசி போல் அழுக்கு ஆடையும், பரட்டைத் தலையும் மழிக்காத தாடிமீசையுமாய் அமர்ந்திருந்த சின்னானுக்கு உடம்பு ஒரு மாதிரியாய் மதர் மதர்ப்பாய் இருந்தது.

வாய் நமநமத்தது.ஒரு கட்டிங்காவது அடித்தால் தேவலாம் போல் இருந்தது.

‘ஏதோ புதுசாய் வீரன்கிற பேர்ல சரக்கு வந்துருக்காமுல, ப்ளேடு சோமுதா சொன்னான். வாயில ஊத்தினதுமே நறுக்குனு கட்டெறும்பு கடிச்சாப்புல இருக்கு சரக்குனு சொன்னான்ல.

கையில பத்துகாசு இல்ல. இதுல வீரன் சூரன்னு அதுக்கெல்லாம் எங்கிட்டு போறது. நமுநமுக்குற வாயிக்கு ஒரு பீடியாவது பத்த வெச்சு சமாதானம் செய்யிலாமுன்னா, அர பீடி கூடல்ல அம்புடல’ ஒரு நப்பாசையில் அன்னிச்சையாய் கை இரு காது மடல்களின் மேற்புறத்தையும் தடவிப் பார்த்தது.

“ம்கூம்.. துண்டு பீடியேதும் தட்டுப்படவில்லை. ச்சே! என்னா தரித்திரம்டா!” என்று முணு முணுத்தபடி தலை முண்டாசை அவிழ்த்து உதறினான் சின்னான்.

‘தொப்’பென்று விழுந்தது மிகச்சின்ன சைஸ் மெழுகு தீக்குச்சிப் பெட்டி. கீழே விழுந்த தீப்பெட்டியைக் குனிந்து எடுத்தபோது கீழே விழுந்த வேகத்தில் தீப்பெட்டி கால்பாகம் திறந்து கொண்டிருந்தது.

பார்வை திறந்திருந்த தீப்பெட்டியின் இடைவெளியை தரிசித்தபோது சின்னானின் முகம் ஆயிரம் வாட் பல்பு உமிழும் வெளிச்சத்தைப்போல் பளீரிட்டது. பாதிப் பீடித்துண்டு ஒன்று தீப்பெட்டிக்குள்ளிருந்து சின்னானைப் பார்த்துக் கண் சிமிட்டியது.

ஏதோ கேரள லாட்டரியில் ஒரு லட்ச ரூபாய் பரிசு விழுந்தது போன்ற சந்தோஷத்தோடு அவசர அவசரமாய் தீப்பெட்டிக்குள்ளிருந்து அரைபீடியை எடுத்து உதட்டில் வைத்து தீப்பெட்டியிலிருந்து தீக்குச்சியை எடுத்துப் பெட்டியின் சைடில் உரசியபோது தீக்குச்சி வளைந்துபோனதே தவிர பற்றிக் கொள்ளவில்லை.

அடுத்தடுத்து இரண்டு தீக்குச்சிகளும் பற்றிக் கொள்ளாமல் முனை ஒடிந்துபோக “ச்சே!” என்ற வார்த்தையோடு கெட்ட வார்த்தையொன்றையும் சேர்த்து உச்சரித்துவிட்டு தீப்பெட்டியைத் தூக்கி வீசிவிட்டு சாத்தியிருக்கும் வாசக்கதவை ஏக்கத்தோடு பார்த்தான்.

கிட்டத்தட்ட மூணுமாதத்திற்கு மேலிருக்கும் இந்த வீட்டுப் பக்கம் வந்து. காத்தாயி தச்சாம்பூர் வந்து, தன்னையும் சரோஜாவையும் ஒரே வீட்டில் ஒன்றாகப் பார்த்து விட்டுக் காரித்துப்பி விட்டுச் சென்றபிறகு சின்னான் இந்த வீட்டுப்பக்கமே வரவில்லை.

‘மணி எட்டாவப் போவுது இந்தக் காத்தாயி வாசக் கதவக்கூட தொறக்காத இன்னாதாம் பண்ணுது உள்ளாற. வியாவாரத்துக்கு இந்நேரம் கெளம்பிடுமே!’ சின்னான் நினைத்து முடிப்பதற்குள் ‘படக்’கென்று கதவு திறந்தது.

வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த காத்தாயி ரெட்டைத் திண்ணை கொண்ட அந்த வீட்டின் ஒரு திண்ணையில் சின்னான் அமர்ந்திருக்க எதிர்த் திண்ணையில் பெரிய சைஸ் தட்டுக் கூடையொன்றைத் ‘தொப்’பென்று வைத்தாள்.

கூடையில் விதவிதமாய்க் காய்கறிகள். அஞ்சு கிலோ கேரிபேக்குகளில் தனித்தனியாய் போடப்பட்டு அடுத்தடுத்து வரிசையாய் வைக்கப்படிருந்தன.

நடுவில் காய்களை கூறுகட்டி வைப்பதற்காக மினி சைஸ் தார்ப்பாய்யொன்றும் ஏழெட்டு வாழை இலைக் கட்டுகளும் வைக்கப்பட்டிருந்தன. தனியாய் ஒரு ஒயர்க்கூடையில் மதிய சாப்பாட்டுத் தூக்கும் தண்ணீர் பாட்டில் ஒன்றும் இருந்தன.

‘படாரெ’ன்று கதவை வேகமாக இழுத்துத் தாழ்ப்பாள் போட்டு திண்டுக்கல் பூட்டால் பூட்டினாள் காத்தாயி.

இன்னொரு திண்ணையில் சின்னான் அமர்ந்திருப்பதை காத்தாயி கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

தட்டுக் கூடையின் மேலாய் வைத்திருந்த சும்மாட்டை எடுத்து தலைமீது வைத்துக் கொண்டு, கூடையை சும்மாட்டின் மீது அட்ஜஸ் பண்ணி வைத்துக்கொண்டு, வலது கையில் ஒயர்க் கூடையை எடுத்துக் கொண்டு வீட்டுப்படியிலிருந்து தெருவில் கால் வைத்தாள் காத்தாயி.

காத்தாயி தாரை உருக்கி வார்த்தாற்போல் ‘பளபள’வென்ற கடுங்கருப்பு நிறம். ஆறடி ரெண்டங்குல உயரம் நிச்சயமாக இருப்பாள். தாட்டிகமான உடலமைப்பு.

‘பளீரெ’ன்று வெண்மையாய் சோழிசோழியாய்ப் பற்கள். முகத்தில் எப்போதுமே குடியேறியிருக்கும் சிடுசிடுப்பு. கோபமான முகத்தை இன்னும் கொஞ்சம் கோபமாகக் காட்டும் ரத்தநிறத்தில் பெரியசைஸ் ஸ்டிக்கர் பொட்டு. விறைப்பான நடை.

தானாக யாரிடமும் பிரச்சினை செய்ய மாட்டாள். ஆனால் அவளைச் சின்னதாகச் சீண்டினாலும் அவள் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் கூவத்தின் நாற்றத்தை விட பலமடங்கு நாறும்.

புழுத்த நாய்கூட அவள் யாரையாவது திட்ட ஆரம்பித்தால் குறுக்கே போகாது. அதற்கே காத்தாயியின் தணிக்கையற்ற வார்த்தைகள் அதன் புழு வைத்த உடலைக்கூட கூசவைக்குமோ என்னவோ?

ஆண்களே அஞ்சி ஓடும் அளவுக்கு அடுக்கடுக்காய் வாயிலிருந்து பச்சையும் நீலமுமாய் வார்த்தைகளை சரமாரியாய் வெளியே துப்புவாள். ஒருமுறை பிரயோகித்த வார்த்தை மறுமுறை வராது.

ஆனாலும் அவளின் வரம்பற்ற வசவுகளைக் கேட்டு மகிழ்வதற்கென கணிசமான விடலைப் பருவ ரசிக பட்டாளமும் உண்டுதான்.

மெயின் பஜாரில் நடைபாதைக் கடைகளின் அணிவகுப்பில் காத்தாயியின் காய்கறிக் கடையும் ஒன்று.

மினி தார்ப்பாயை விரித்து, காய்கறிகளை தனித்தனியாய் கூறுகட்டி வைத்து, நடக்கும் வியாபாரம் அநேகமாய் எங்கும் உண்டுதானே. வழக்கமாய் காத்தாயி கடை விரிக்கும் இடத்தில் இவள் போவதற்குள் யாராவது தெரிந்தோ தெரியாமலோ கடை விரித்து விட்டால் முடிந்தது அவர்கள் கதை.

ஆனாலும் காத்தாயி தொழில் சுத்தமானவள். காசைக் கூட்டிச் சொல்லி லாபம் பார்க்கும் ஆசை அவளிடம் கிடையாது.

வயசானவர்கள் வந்து காய்கறி வாங்கினால் கொஞ்சம்கூடவே போட்டு நிறுத்துப் போடுவாள். அதேசமயம் காய்களை புரட்டிப் புரட்டிப் பார்ப்ப்பதோ, விரலால் அழுத்திப் பார்ப்பதோ பிடிக்காது.

அப்படி யாராவது செய்தால் “தே! எடு கைய. வந்துட்டியா வாங்க” என ஆரம்பித்து வகை தொகை இல்லாமல் பேச ஆரம்பிப்பாள்.

அவள் பிரயோகிக்கும் வார்த்தைகளின் ஒன்றி ரெண்டை உதாரணத்துக்குச் சொன்னால்கூட அது கட்டாயம் பதிவிலிருந்து நீக்கப்படும்.

பஜாரில் தன்னுடைய வசவு வார்த்தைகளால் அப்பகுதிவாசிகளுக்கு சிம்மசொப்பனமாய் இருந்தாலும் காத்தாயின் கடின மனதுக்குள் ஈரம் இல்லாமல் இல்லை.

கல்லுக்குள் ஈரம் என்பதுபோல் காத்தாயிக்குள்ளும் ஒரு சாஃப்ட் கார்னர் இருந்து அது அவ்வப்போது ஈரத்தைக் கசிய விடும்.

பஜாரில் திடீர் தீடீரென நேரிடும் சின்ன விபத்துக்களோ, பெரிய விபத்துக்களோ அல்லது யாராவது தடுக்கி விழுந்தாலோ மயங்கி விழுந்தாலோ உதவிக்கு ஓடிவரும் கரங்களில் முதலாவதாய் காத்தாயியின் கரங்கள்தான் இருக்கும்.

விபத்து என்றால், அவ்விபத்து ஏற்படக் காரணமான நபர், அது ஆணோ பெண்ணோ காத்தாயியின் வாய்க்குள் வீழ்ந்து எழுந்தால், சத்தியமாய் அந்த நபர் இன்னொருமுறை அவரின் வாழ்க்கை முழுதிற்கும் விபத்து ஏற்படக் காரணமாய் இருந்துவிட மாட்டார்.

பார்வைக்குப் பயத்தைத் தரும் தோற்றம். அரண்டு மிரண்டு ஓடவைக்கும் நாத்தம் பிடித்த வார்த்தைகள். சதா சண்டைக் கோழி போல் சிலுப்பிக் கொண்டு நிற்கும் தோரணை.

ஆனால் பலாவின் சுளைபோலே உள்ளே இரக்கம் சுரக்கும் ஈரமனசு. முரண்பாட்டின் மொத்த உருவம் காத்தாயி.

இப்பேர்ப்பட்டக் காத்தாயி காதலில் விழுந்தது ஓர் தனிக்கதை. அவள் பக்கா பொய்யன் சின்னானின் காதல் வலைக்குள் விழுந்தபோது அவளுக்கு வயது முப்பத்தி ரெண்டு.

காத்தாயியைத் தன் காதல் வலைக்குள் சிக்க வைத்தபோது சின்னானுக்கு வயது முப்பத்தாறு. அப்படியொன்றும் காத்தாயியின் உடல்வாகுக்கு ஏற்ற ஜோடியும் இல்லை அவன்.

ஆனாலும் காத்தாயி சின்னானை ரொம்பவே காதலித்தாள்; நம்பினாள். அந்த காதல் காலங்களில் காத்தாயி இப்படியெல்லாம் தரங்கெட்டுப் பேசுபவளாய் இல்லை. கோபமான முகமோ சண்டைக் கோழி குணமோ இல்லை. ரொம்பவும் அமைதியானாவளாகவே இருந்தாள்.

திரௌபதியம்மன் கோயிலில் வைத்து மாலைமாற்றி சின்னானிடம் தாலி கட்டிக் கொண்டு வாழ ஆரம்பித்த காத்தாயிக்கு வாழ்க்கை சந்தோஷத்தை வாரித்தான் கொடுத்தது. அதிக எதிர்பார்ப்புகள் இல்லையெனில் வாழ்க்கையில் இன்பத்திற்குக் குறைவிருக்காது.

குறைவில்லாத நிறைவான வாழ்க்கையில் காத்தாயிக்கு சின்னான் செய்ததைவிட காத்தாயி சின்னானுக்குச் செய்ததே அதிகம். அவன் மீதிருந்த காதலும் பாசமும் அவனின் சோம்பேறித்தனத்தைக்கூட கண்டு கொள்ளாமல் விடச்செய்தது.

காத்தாயின் அன்பு அரவணைப்பில் சின்னான் உழைப்பை மறந்து சுகபோகமாய் வாழ்ந்தான்.

காலை எட்டுமணிக்கெல்லாம் காய்கறிக்கூடையோ, பூக்கூடையோ, கீரைக்கூடையோ, தேங்காய்க் கூடையோ ஏதோ ஒன்றோடு வீட்டிலிருந்து கிளம்பும் காத்தாயி வீடு திரும்ப இரவு ஏழோ எட்டோ ஆகிவிடும்.

இடைப்பட இந்த நேரத்தில் சின்னான் என்ன செய்கிறான் என்பதை அவன் மீதிருந்த நம்பிக்கையில் தெரிந்து கொள்ளாமலேயே விட்டுவிட்டாள் காத்தாயி.

ஒருநாள் காத்தாயி வீடு திரும்பிய போது சின்னானைக் காணவில்லை.

இவள் வந்து அரைமணி, ஒரு மணிநேரம் கழித்து உழைத்துச் சலித்தவன் போல்
உள்ளே நுழைந்த சின்னான் சட்டைப்பையிலிருந்து முன்னூறு ரூவாயை எடுத்து
நீட்டினான்.

“காத்து (காத்தாயி)! ஆம்பள நானு சம்பாரிச்சு ஒன்னைய சந்தோஷமா வெச்சுக்கனும். அதுபோக நீ கொண்டாற காசுல நானு வூட்டுல ஒக்காந்து துண்றதா? அதா நா லாரி ஆபீஸுக்கு மூட்ட ஏத்துற ஆளா வேலைக்குப் போயிட்டேன். தச்சாம்பூருல தெரியுமில்ல.

அங்கிட்டுதா லாரி ஆபீஸு இருக்கு. அங்க வேல பாக்குற ராமு எனக்குத் தெரிஞ்சவனு. அவ மூலமாதா இந்த வேல கெடச்சிச்சு. வாரம் நாலுநாளு வேல இருக்கும்” என்று அவன் சொன்ன அன்று மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது காத்தாயிக்கு.

இப்படி சின்னான் வாரத்துக்கு நாலுநாள் லாரி ஆபீஸுக்கு வேலைக்குப் போவதாய்ச் சொல்லி வெளியே போவதும் மாலையில் வீடுதிரும்பி முன்னூறு நானூறு என்றும் தருவதும் தான் லேசாய்க் குடித்திருப்பதாயும் அதை காத்தாயியிடமிருந்து மறைக்க விரும்பவில்லை என்றும் சொல்லி நடிக்கும்போது காத்தாயி ‘அடட இவுருதா எப்பேர்ப்பட ஆம்புள. எப்பிடி உண்மையா இருக்காரு நம்மகிட்ட. ஆம்புள குடிக்கிறது அதிசயமா என்ன? குடிக்காத ஆம்புள யாரு? அதும் மூட்ட சொமக்குற இவரு குடிச்சாதானே ஒடம்பு வலிக்காம இருக்கும்’ கணவன் குடிப்பதையும் நியாயப்படுத்தியது காத்தாயியின் மனது.

நான்கு வருடங்கள் சந்தோஷத்தை அறுவடை செய்த வாழ்க்கையில் குழந்தை
இல்லையே என்ற தவிப்பு காத்தாயிக்கு ஏமாற்றத்தையும் ஏக்கத்தையும் தந்திருந்தது. ஆனால் சின்னானின் மீதிருந்த காதல் மட்டும் குறையவே இல்லை அவனைப் பற்றிய உண்மை தெரியவந்த அந்த நாள் வரை.

அந்த நாளான அன்று வெகு மும்முரமாய் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்த காத்தாயியின் முன் வந்து நின்றான் அவன். குடித்திருப்பான் போலிருந்தது அவன் தள்ளாட்டமும் பேச்சும்.

அன்று பழவியாபாரம் செய்து கொண்டிருந்தாள் காத்தாயி.

விதவிதமாய் வைக்கப்பட்டிருந்த பழங்களை ஒவ்வொரு வகையையும் தொட்டுத் தொட்டு மாறிமாறி விலை கேட்டான் அவன்.

அவன் பழம் வாங்க வந்தவனாகத் தோன்றவில்லை காத்தாயிக்கு. வம்பு செய்ய வந்தவனாய்த் தோன்றியது. ஒருகட்டத்தில் விரசமாய்ப் பேசி விலை கேட்டபோது பொங்கி எழுந்து விட்டாள் காத்தாயி.

‘பொளேரெ’ன்று அவன் கன்னத்தில் ஓர் அறைவிட்டாள்.

பக்கத்தில் வியாபாரம் செய்து கொண்டிருந்த மற்ற பெண்களும் காத்தாயியோடு சேர்ந்து கொண்டனர்.

இடுப்பில் செருகி வைத்திருந்த சரக்கு பாட்டிலைத் திறந்து வாயில் ஊற்றிக் கொண்டு ஏற்கனவே குடித்திருந்ததால் ஏறியிருந்த போதையை மேலும் தீவிரப்படுத்திக் கொண்டு கத்த ஆரம்பித்தான் அந்த போதை ஆசாமி.

‘சின்னவீடு’ ‘வப்பாட்டி’ இந்த ரெண்டு வார்த்தையும் சின்னாயியை என்ன செய்ததோ அப்படியே சூலம் ஏந்தா காளியாக மாறிப் போனாள்.

“டேய்! யாரப் பாத்துடா சின்ன வீடு, வப்பாட்டீன்ற. ஒவ்வாயக் கிழிக்காம வுடமாட்டேண்டா. நீ குடிச்சிருந்தா பயந்துபோய் வுட்ருவேனா?” அவன் மீது பாயப் போனாள் காத்தாயி.

இதுவரை காத்தாயியின் இதுபோன்ற ஆவேசத்தைப் பார்த்திராத கூடவே வியாபாரம் செய்யும் பெண்கள் அவளைப் பெரும் பாடுபட்டுத் தடுத்து நிறுத்தினர்.

குடிகாரன் இப்போது அதிக சப்தத்துடன் கத்த ஆரம்பித்தான்.

“ஏ! பொம்பள! ரொம்பத்தா ரோசங் காட்டுற. நீ சின்னானோட சின்னவீடு இல்லாம வேற யாரு? தச்சாம்பூரு சரோசா அவம் பொண்டாட்டி. தொட்டுத் தாலிகட்டுன பொண்டாட்டி.

சின்னான் கூட வாழ்ந்து ரெட்டப் புள்ளையா ரெண்டு புள்ளையப் பெத்தவ. புள்ளைங்க இஸ்கூலுக்குப் போவுதுங்க. நீ நாலு வருஷம் முந்தி வந்தவதானே! அப்ப நீ சின்னானோட சின்ன வூடா? வப்பாட்டியா?

சின்னவூடு, வப்பாட்டி இதுல ஒனக்கு எந்த பேரு புடிச்சிருக்கோ அத வெச்சுக்க. நா சொல்லுறத நம்பாட்டி தச்சனூரு போயி நா சொல்லுற இந்த அட்ரசுல போய் இப்பவே பாரு. சின்னான் சரோசாகூட சரசம் பண்ணிக்கிட்ருப்பான்” கிடுகிடுவென முகவரி சொன்னான்.

போதை தலைக்கேற கீழே சரிந்து மட்டையாகிப் போனான்.

தலையில் இடி இறங்கியது போல் அப்படியே தவிடு பொடியானது காத்தாயியின் மனது. இவளுக்கு உறுதுணையாய் இருந்த மற்ற பெண்கள் தங்களுக்குள் ‘கிசுகிசு’க்க ஆரம்பித்தார்கள்.

சட்டனெ எழுந்தாள் காத்தாயி. விரித்தகடை விரித்தபடி இருக்க, வேகமாக நடக்க ஆரம்பித்தாள். வழியில் தச்சாம்பூர் செல்லும் பேருந்து வர ஏறி தச்சாம்பூரில் இறங்கினாள்.

குடிகாரன் சொன்ன முகவரி. கதவைத் தட்டினாள்.

“யாரு?” கேட்டுக் கொண்டே வந்து கதவைத் திறந்தாள் ஒருபெண்.

“யாரு சரோசா?” என்றபடி அந்தப் பெண்ணின் பின்னால் வந்து நின்றான் சின்னான்.

அதிர்ந்து போனாள் காத்தாயி; ஆடிப்போனான் சின்னான்.

சட்டெனத் திரும்பி நடந்தவளை, “யாரும்மா நீங்க? வந்தீங்க, கதவத் தட்டுனீங்க. என்ன ஏதுன்னு சொல்லாம நீங்க பாட்டுக்குப் போறீங்க?” அதட்டிக் கேட்டாள் கதவைத் திறந்த பெண்.

“ம்.. ஒஞ் சக்காளத்தி. ஒம் புருஷனோட வப்பாட்டி; சின்னவீடு” சொல்லிவிட்டு சின்னானை ஒரு பார்வை பார்த்துவிட்டு வாயில் ஊறியிருந்த மொத்த எச்சிலையும் ஒன்றாய்த் திரட்டி “த்தூ!” என்று துப்பிவிட்டு தெருவில் இறங்கி நடந்தாள்.

அடுத்து வந்த மூன்று மாதங்களில் மொத்தமாய் மாறிப் போனாள் காத்தாயி. ஒருசமயம் சாத்வீகமாக இருப்பதும், தீடீர் திடீரென பெண்களுக்கே உரிய லஜ்ஜை ஏதுமின்றி பச்சை பச்சையாக திட்டுவதும் கத்துவதுமாய் மாறிப் போனாள்.

ஆனால் ஒன்றில் மட்டும் உறுதியாக இருந்தாள். இனி சின்னானைத் தன் வாழ்க்கையிலிருந்து விரட்டுவதில் உறுதியாய் இருந்தாள்.

மூன்று மாதம் கழிந்து இன்று வாசலில் வந்து அமர்ந்திருந்த சின்னான் அவள் பார்வையில் பட்டபோது அடிவயிற்றிலிருந்து நீலமும் பச்சையுமாய் ஆபாச வார்த்தைகள் எம்பி எழுந்து வாய்க்குள் வந்து வெளியேறத் துடித்தன.

அத்தனை ஆபாச வார்த்தைகளையும் எச்சிலாக மாற்றிக் காரித்துப்பி விட்டு நடந்தாள் காத்தாயி.

என்ன தோன்றியதோ சட்டெனப் பாதையை மாற்றி காவல் நிலையம் நோக்கி நடந்தன அவள் கால்கள்.

‘பேரு சின்னான். ஏற்கனவே தாலி கட்டின பொண்டாட்டி இருக்கையிலே, ரெண்டு புள்ளைங்க வேற அதையெல்லாம் மறச்சு ஏமாத்தி ஒங்குளுக்கு கோவில்ல வச்சு தாலி கட்டிருக்காரு இந்தாளு’ விவரமாய் எழுதி காத்தாயியிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டார் காவலதிகாரி.

கையெழுத்துப் போட்டுவிட்டு எழுந்த காத்தாயியை “இருங்க! இருங்க!” என்றார் அதிகாரி.

“நேத்துகூட சின்னான்ங்கிறவர் பேர்ல தச்சாம்பூரச் சேர்ந்த சரோஜாங்கிற பெண்மணி புகார் குடுத்துருக்காங்க. முதல் மனைவி தான் இருக்கும் போது காத்தாயிங்கிற பெண்ண தன் சம்மதமில்லாம ரெண்டாவதா தாலி கட்டி திருமணம் செய்திருக்கிறதா. அந்த காத்தாயி…”

“ரெண்டு பொம்ளைங்க வாழ்க்கையில வெளையாடிருக்கான் பாருய்யா இந்த சின்னான். இவன் சின்னானில்ல பெரியான்” பக்கத்திலிருந்த பணியாளரிடம் சொல்லிச் சிரித்தார் அந்த அதிகாரி.

கடையின் முன் அமர்ந்திருந்த காத்தாயின் மனது பௌர்ணமி கடலலை போல
எழும்புவதும் தாழ்வதுமாய் அலையடித்து ஆர்ப்பரித்தபடி இருந்தது; மனது ஒரு நிலையிலில்லை.

கடையின் முன் வந்து நின்றான் அன்றைக்குக் குடித்து விட்டுவந்து வம்பு செய்து போதையில் உண்மைகளை உளறியவன். இப்போதும் குடிபோதையில்தான்.

“முடிஞ்சிடுச்சி! முடிஞ்சிடிச்சி! எல்லாம் முடிஞ்சிடிச்சி! சின்னான, அதா ஒன்னிய
சின்னவூடா வெச்சிருந்தானே அவுன போலீஸு புடிச்சிக்கினு போய்ட்டு. அந்த தச்சாம்பூரு சரோசா நேத்து ராவு தூக்குல தொங்கிட்டா.

அப்பன் ஜெயிலுக்குப் போய்ட்டான். ஆத்தா செத்துட்டா. புள்ளைங்க ரெண்டும் அனாதையாகி நின்னுகிட்டு ‘அம்மா அம்மா’னு கத்தையிலே வவுறு அள்ளிப் புடுங்குது. சரோசா வாழ்க்கையில பூந்த நீ நல்லாருப்பியா? ஒன்னாலதா சரோசா குடும்பமே நாசமாகி புள்ளைங்க அனாதயா நிக்கிதுங்க. நீல்லாம் ஒரு பொம்பள..” கத்தி விட்டு நகர்ந்தான் அந்தக் குடிகாரன்.

‘பகீரெ’ன்றது காத்தாயிக்கு.

“ஐயோ!” என்றாள் வாய் விட்டு.

‘சரோஜா வாழ்க்கை இப்படியாக நான் காரணமில்ல. அந்தப்பாவி உண்மைய மறச்சு என்னை ஏமாத்தி தாலி கட்டினான். ஆனாலும் தெரிந்தோ தெரியாமலோ சரோஜா வாழ்க்கையில் நான் நுழைந்ததால் தான் அவளின் தற்கொலையும் அவளின் குழந்தைகளின் அனாதை நிலையும் நேர்ந்துள்ளது. ‘நான் பாவி’ என்று நினைத்தவள் அடுத்த அரைமணி நேரத்தில் தச்சாம்பூர் சரோஜா வீட்டு வாசலில் நின்றாள்.

சரோஜாவின் உடல் போஸ்ட் மார்ட்டத்திற்காக ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டுக் கொண்டிருக்க, ஆறு வயதிருக்கும் ஆண் குழந்தையொன்றும் பெண் குழந்தையொன்றும், “அம்மா! அம்மா! முழிசுக்கோம்மா! எழுந்திரும்மா!” என்று அழுது கொண்டிருக்க, காத்தாயி தனது வலது கையால் ஒரு குழந்தையின் கையையும் இடது கையால் ஒரு குழந்தையின் கையையும் பற்றிக் கொண்டாள்.

பௌர்ணமி அலையாய் ஆர்ப்பரித்த காத்தாயின் மனம் அமைதியடைந்து விடும். அவளின் கோபமும் அடாவடிப் பேச்சுக்களும் குழந்தைகளின் முகம் பார்த்துப் பார்த்து மறைந்து விடும்.

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்