வத்தல் குழம்பு

வத்தல் குழம்பு செய்வது எப்படி?

வத்தல் குழம்பு வீட்டு விசேஷங்களில் செய்வது வழக்கம். ஹோட்டல்களிலும் இது கிடைக்கும். நாமும் அசத்தலான சுவையில் எளிமையாக வத்தல் குழம்பு செய்யலாம்.

பொதுவாக வற்றல் குழம்பு என்றாலே சுண்டைக் காய் வற்றலைச் சேர்த்தே குழம்பு செய்வர். இதில் சேர்க்கப்படும் சுண்டைக்காய் வற்றல் மருத்துவக் குணம் வாய்ந்தது.

சுண்ட வற்றலுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பாற்றலை வழங்கும் திறன் அதிகம். ஆதலால் சுண்ட வற்றலை குழம்பு செய்தோ, வறுத்தோ உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளுதல் அவசியம்.

சுவையான சுண்ட வத்தல் குழம்பு செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

சுண்ட வத்தல் – 25 கிராம்

சின்ன வெங்காயம் – 75 கிராம்

பூண்டு – 25 கிராம்

மிளகாய் தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்

பெருங்காயப் பொடி – 4 சிட்டிகை

மிளகாய் வத்தல் – 2 எண்ணம் (பெரியது)

புளி – சிறிய எலுமிச்சை அளவு (தோராயமாக 15 கிராம்)

நாட்டு வெல்லம் – சிறிதளவு

வறுத்து அரைத்த மசாலா பொடி – 4 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மசாலா வறுத்து அரைக்க

கொத்த மல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்

மிளகு ‍ 1/2 டேபிள் ஸ்பூன்

வெந்தயம் ‍ 1/4 டேபிள் ஸ்பூன்

கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

துவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் வற்றல் – 2 எண்ணம் (நடுத்தர அளவு)

தாளிக்க

நல்ல எண்ணெய் – 50 முதல் 100 கிராம் வரை

கடுகு – 1 டீஸ்பூன்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கீற்று

மிளகாய் வற்றல் – 2 எண்ணம் (நடுத்தர அளவு)

வத்தல் குழம்பு செய்முறை

சின்ன வெங்காயம் தோல் நீக்கி நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

வெள்ளைப் பூண்டினை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.

புளியைப் பிய்த்துப் போட்டு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து ஊற வைத்து, கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து வறுத்து அரைக்கத் தேவையான பொருட்களை சேர்த்து, சிறுதீயில் வைத்து, கொத்த மல்லி விதை வாசனை வரும் அளவுக்கு வறுக்க வேண்டும். அதை ஆற வைத்து மிக்ஸியில் நைசாக பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் கடாயை அடுப்பில் வைத்து 40 கிராம் நல்ல எண்ணெய் ஊற்றவும்.

எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் சேர்த்து தாளிதம் செய்யவும்.

பின்னர் சுண்ட வத்தலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம், பூண்டு வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயப் பொடி சேர்த்து வதக்கவும்.

பின்னர் கெட்டியான புளிக்கரைசலைச் சேர்த்துக் கிளறவும்.

அதனுடன் தேவையான தண்ணீர் மற்றும் உப்பைச் சேர்க்கவும்.

கலவை கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பினை சிம்மில் வைக்கவும்.

இரண்டு நிமிடங்கள் கழித்து வறுத்த மசாலாப் பொடி 3 அல்லது 4 டேபிள் ஸ்பூன் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

கலவை கொதித்ததும் நாட்டு வெல்லம் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கழித்து, மீதமுள்ள நல்ல எண்ணெய் சேர்க்கவும்.

பின்னர் அதனுடன் 1/4 டீஸ்பூன் வறுத்து அரைத்த மசாலாப் பொடி சேர்க்கவும்.

ஒரு நிமிடம் கழித்து அடுப்பிலிருந்து குழம்பை இறக்கவும்.

சுவையான சுண்ட வத்தல் குழம்பு தயார்.

குறிப்பு

சுண்ட வத்தலில் உப்பு சேர்த்து காய வைத்திருப்பர். எனவே குழம்புக்கு உப்பினை சேர்க்கும் போது கவனமாகச் சேர்க்கவும்.

அவ்வப்போது சுண்ட வத்தலுக்குத் தேவையான மசாலாப் பொடியை தயார் செய்தால் குழம்பின் வாசனையும் சுவையும் மிகும்.

விருப்பமுள்ளவர்கள் சுண்ட வத்தலுக்குப் பதிலாக மணத்தக்காளி வத்தல், கத்தரி வத்தல் ஆகியவற்றை அப்படியே எண்ணெயில் சேர்த்து வதக்கி குழம்பு தயார் செய்யவும்.

கொத்தவரங்காய் வத்தல் சேர்ப்பதாக இருந்தால் வத்தலை எண்ணெயில் வறுத்து, குழம்பு கொதிக்கையில் சேர்க்க வேண்டும்.

ஜான்சிராணி வேலாயுதம்