அடர்மரக் கூட்டமில்லை பசுமைதரு
படர்கொடி எதுவுமில்லை ஆனால்
வானுயரக் கட்டிடங்கள் உண்டு அதனுள்ளே
மனிதக்கூட்டம் பல உண்டு இருந்தும்
உறவென்று ஒட்டுவது எவருண்டு?
உயிர்தரு நதியுமில்லை அதனால்
அழகுசேர் அருவியுமில்லை
கழிவுநீர் ஓடைகள் ஓடுவதுண்டு அதனினும்
இழிவாய்ப் பலவிடங்கள் இருப்பதுமுண்டு
துள்ளித் திரியும் மான்கள் இல்லை
ஒய்யாரப் பறவைக் கூட்டமில்லை
ஒரழகும் இங்கில்லை அமைதியாய் ரசிப்பதற்கு
தானியங்கி வாகனங்கள் உண்டு
வான்பறக்கும் விமானங்களும் பலவுண்டு
அவசரத்தை தீர்ப்பதற்கு
துரத்திக் கொல்லும் புலிசிங்கமில்லை ஆனாலும்
தரம்தாழ்ந்து மனிதர்பலர் ஆவதுண்டு அவ்விதம்
உணவுக்காகப் பிறவினத்தைக் கொல்லும் அங்கே
பணத்துக்காகத் தன்னினத்தை வதைப்பான் இங்கே
வசதிகளைப் பெருக்கிடவே அறிவு கூட்டி
வகுத்தானே இயந்திரம் பல கூடவே
தானும் ஆனானே இயந்திரமாய் இன்று
மனித னெனும் உணர்வு கழித்து
அழகான ஊர் செழிப்பான வயல்கள்
அன்பான மனிதர்கள் எல்லாம் விட்டு
வாழ்க்கையை விடவும் முக்கியமாய்
வசதிகள் தேடிநகரம் வந்தோம்
இனி வைதாலும் (திட்டினாலும்) அழுதாலும்
வேறுவழியில்லை வனவாசம்தான்
இந்த கான்கிரீட் காட்டில்
– வ.முனீஸ்வரன்