வயலோரம்

வயலோரம் நடைபெறும் காதல் உரையாடல்!
புதுப்பானை ஏத்திவச்சி
புத்தரிசி பொங்கலிட்டு
எதுக்காக பொங்கலு – சொல்லம்மா
ஏக்கத்திலே நான் தவிக்கேன் செல்லம்மா

வயலிலே உழுது வச்சி
வகைவகையா வித விதச்சி
அயராது பாடுபட்டார் எங்கய்யா
அதனால பொங்கலிங்கே பொங்குதய்யா

சொத்தென்று கொஞ்சமிருக்கு
சொந்தபந்தம் ரொம்பயிருக்கு
பித்தானேன் உன்மேல் தான்-நில்லம்மா
பேசிடணும் உன்னோட தான் செல்லம்மா

எங்கய்யா மனசில நீ
ஏத்தவொரு எடம் பிடிச்சி
தங்கத்தாலி ஏந்தி வா- செல்லையா
தாரமாக நான் வருவேன் செல்லையா

உன்வீட்டு படியிலேறி
உங்கய்யா மனசிலேற
தன்னால உயரவேணும் – நானம்மா
தைமாதம் உழுதுவைக்கப் போறேம்மா

ஆடியிலே விதச்சதாலே
ஐப்பசியில் அறுவடைதான்
கூடிடலாம் நாம் இருவர் – தன்னாலே
கொட்டி மேளம் குலவைசத்தம் பின்னாலே

வளர்ந்த பயிர் விளைஞ்ச பின்னே
வாசலுக்கு வந்த பின்னே
மலர்ந்திருக்கும் நம் வாழ்வு செல்லையா
மாமன் வரக் காத்திருக்கேன் செல்லையா

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.