வரகு அரிசி சேமியா உப்புமா என்பது அருமையான சிற்றுண்டி ஆகும்.
வரகு அரிசி சேமியா என்பது வரகு அரிசி எனப்படும் சிறுதானியத்தில் தயார் செய்யப்படும் சேமியா ஆகும். இது எல்லாக் கடைகளிலும் கிடைக்கிறது.
இனி சுவையான வரகு அரிசி சேமியா உப்புமா செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வரகு அரிசி சேமியா – 200 கிராம்
சின்ன வெங்காயம் – 15 எண்ணம் (மீடியம் சைஸ்)
பச்சை மிளகாய் – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)
இஞ்சி – பாதி சுண்டு விரல் அளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்
கடுகு – ¼ ஸ்பூன்
கறிவேப்பிலை – 3 கீற்று
உளுந்தம் பருப்பு – 2 ஸ்பூன்
வரகு அரிசி சேமியா உப்புமா செய்முறை
வரகு அரிசி சேமியாவை அது மூழ்கும் வரை நீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊற விடவும்.
பின் வடிதட்டில் சேமியாவை தட்டி நீர் முழுவதும் வடியுமாறு செய்து சேமியாவை பிரித்து எடுக்கவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சதுரங்களாக வெட்டவும்.
பச்சை மிளகாயை அலசி சிறுதுண்டுகளாக வெட்டவும்.
இஞ்சியைத் தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
நனைய வைத்து வடித்த சேமியாவை இட்லிப் பானையில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.
வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிதம் செய்து கொள்ளவும்.
பின்னர் அதனுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி துருவல் சேர்த்து வதக்கவும்.
சின்ன வெங்காயம் ஓரளவு வதங்கியதும் அதனுடன் தேவையான உப்பு சேர்த்து கிளறவும்.
பின்னர் அதனுடன் அவித்து வைத்துள்ள வரகு அரிசி சேமியாவை சேர்த்து ஒரு சேரக் கிளறி இறக்கவும்.
சுவையான வரகு அரிசி உப்புமா தயார்.
இதனை குழந்தைகளுக்கு இடைவேளை உணவாகவும் செய்து கொடுத்து அனுப்பலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் தக்காளியைச் சேர்த்தும் உப்புமா தயார் செய்யலாம்.
சேமியாவை 10 நிமிடத்திற்கு மேல் ஊற வைத்தால் சேமியா குழைந்து விடும். ஆதலால் 10 நிமிடங்களில் தண்ணீரை வடித்து விடவேண்டும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!