வரகு வெண் பொங்கல் சிறுதானியமான வரகரிசியில் செய்யப்படும் அருமையான உணவாகும். இதனுடைய மணமும், சுவையும் உண்போரைக் கவர்ந்திழுக்கும்.
இனி சுவையான வரகு வெண் பொங்கல் செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வரகு அரிசி – 1 டம்ளர் (200 கிராம்)
பாசிப் பருப்பு – ¼ டம்ளர்
கேரட் – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
முந்திரிப் பருப்பு – 1 தேக்கரண்டி
இஞ்சி – சுண்டு விரல் அளவு
தண்ணீர் – 3 டம்ளர் (தோராயமாக 2¼ பங்கு)
நெய் – 5 டீஸ்பூன்
வறுத்து பொடிக்க
மிளகு – 2 தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
தாளிக்க
நல்ல எண்ணெய் – 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 3 கீற்று
கடுகு – ¼ தேக்கரண்டி
செய்முறை
முதலில் வரகு அரிசியையும், பாசிப் பருப்பையும் ஒன்றாக களைந்து தண்ணீரை வடித்து 10 நிமிடங்கள் வைக்கவும்.
கேரட்டை தோல் சீவி சதுரங்களாக நறுக்கவும்.
பச்சை மிளகாயை காம்பு நீக்கி சதுரங்களாக நறுக்கவும்.
இஞ்சியை தோல் நீக்கி சதுரங்களாக நறுக்கவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
வறுத்து பொடிக்க கொடுத்துள்ள மிளகு, சீரகம் ஆகியவற்றை வெறும் வாணலியில் சூடு ஏற வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, சீரகம், மிளகு, முந்திரிப் பருப்பு, பச்சை மிளகாய் சேர்த்து தாளிதம் செய்து கொள்ளவும்.
பின் அதனுடன் சதுரமாக நறுக்கிய கேரட், இஞ்சி சேர்த்து வதக்கவும். கேரட் ஓரளவு வதங்கியதும் அளந்து வைத்துள்ள தண்ணீரைச் சேர்க்கவும்.
பின் அதில் களைந்து வைத்துள்ள வரகு அரிசி, பாசிப்பருப்பு, தேவையான உப்பு, பொடித்துள்ள உள்ள மிளகு, சீரகப்பொடி, நெய் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
பின் கலவையை நன்கு கிளறி மூடி ஒரு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து இரண்டு நிமிடங்கள் கழித்து அணைத்து விடவும்.
குக்கரின் ஆவி அடங்கியதும் திறந்து கலவையை கிளறி விடவும். சுவையான வரகு வெண் பொங்கல் தயார்.
இதனுடன் சாம்பார், தேங்காய் சட்னி சேர்த்து உண்ணலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் நெய்யினை முதலில் சேர்க்காமல் குக்கரை இறக்கிய பின் பொங்கலில் சேர்க்கலாம்.