வரலட்சுமி விரதம் என்பது தென்னிந்தியாவில் இந்துக்களால் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கும் விரத முறையாகும். இலட்சுமி தேவியை நினைத்து விரத முறையினைப் பின்பற்றி வரங்களை (விருப்பங்களை) பெறுவதால் இவ்விரதம் வரலட்சுமி விரதம் என்றழைக்கப்படுகிறது.
செல்வம், வீரம், வெற்றி, குழந்தைப்பேறு, தானியங்கள், வேலைவாய்ப்பு, கல்வி, தைரியம் ஆகிய வரங்கள் இவ்விரதமுறையை பின்பற்றுவதால் பெறப்படுவதாகக் கருதப்படுகிறது.
வரலட்சுமி விரதம் ஒவ்வொரு வருடமும் ஆடி அல்லது ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. ஆவணி மாதப் பௌர்ணமியைப் பொறுத்தே இவ்விரதம் ஆடி மாதத்திலோ அல்லது ஆவணி மாதத்திலோ கடைப்பிடிக்கப்படுகிறது.
இவ்விரதம் பெரும்பாலும் பெண்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரதத்தின் முடிவில் வழிபாட்டில் ஈடுபடும் பெண்கள் தங்கள் கைகளில் வழிபாட்டில் இடம்பெற்ற மஞ்சள் நூல் கயிற்றினை கட்டிக்கொள்கின்றனர்.
இவ்விரத வழிபாட்டின் போது இனிப்புகள், பழங்கள், அன்னம், கொழுக்கட்டை, பாயசம், உளுந்த வடை பலவித பூக்கள் ஆகியவை படைக்கப்படுகின்றன.
திருமணமான பெண்கள் தங்கள் குடும்ப நன்மை, குழந்தைகளின் நலம், ஆரோக்கியம், கல்வி, கணவரின் ஆயுள், தொழில் விருத்தி ஆகியவற்றிற்காகவும், கன்னிப்பெண்கள் நல்ல கணவன் மற்றும் வளமான குடும்ப வாழ்வு வேண்டியும் இவ்விரத்தினை கடைப்பிடிக்கின்றனர்.
விரதம் கடைப்பிடிக்க காரணம்
முன்னொரு காலத்தில் மகத நாட்டில் வசித்த சாருமதியின் தெய்வ பக்தி, சேவை மனம் ஆகியவைகளால் மனம் மகிழ்ந்த லட்சுமி தேவி சாருமதியின் கனவில் தோன்றி வரலட்சுமி விரதமுறைகளைக் கூறி அதைக் கடைப்பிடிப்பதால் கிடைக்கும் நன்மைகளையும் விளக்கி மற்ற எல்லாப் பெண்களையும் இவ்விரத முறையை கடைப்பிடித்து நன்மை பெறுமாறு கூறினார்.
சாருமதியும் கனவில் கண்டதை தனது நாட்டுப் பெண்களிடம் விளக்கி இவ்விரத்தினை பின்பற்றி நன்மைகள் பெற்றார் எனவும் அதுமுதல் இவ்விரதம் பெரும்பாலான பெண்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.
விரதம் கடைப்பிடிக்கும் முறை
இவ்விரத்தின் போது விரதத்திற்கு முதல் நாள் வீடுகள் சுத்தம் செய்யப்படுகின்றன. வழிபாட்டிற்கு தேவைப்படும் பொருள்கள் வாங்கப்படுகின்றன.விரத நாள் அன்று அதிகாலை எழுந்து குளிர்ந்த நீரில் நீராடிவிட்டு வழிபாடு தொடங்கப்படுகிறது.
வீட்டின் பூஜை அறையிலோ அல்லது வழிபாட்டிற்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்திலோ ஒரு தட்டு நிறைய பச்சரிசி கொண்டு நிரப்பப்படுகிறது.
அத்தட்டின் நடுவே வெள்ளி அல்லது தாமிரத்தினாலான கலசம் வைக்கப்படுகிறது. கலசம் நீரினைக் கொண்டோ அல்லது அரிசி கொண்டோ நிரப்பப்படுகிறது.
கலசத்தினுள் மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, காசு ஆகியவை இடப்படுகின்றன. பின் கலசத்தின் மேலே தேங்காய் வைக்கப்படுகிறது. தேங்காயைச் சுற்றிலும் மாவிலைகள் வைத்து அலங்காரம் செய்யப்படுகின்றது.
தேங்காயின் குடுமியில் வெள்ளி அல்லது ஐம்பொன்னினாலான அம்மன் முகம் வைத்து கட்டப்படுகிறது. அம்மன் முகத்திற்கு கீழ் உள்ள கலசப்பகுதி துணிகளால் மூடி அம்மன் உருவம் செய்யப்படுகிறது. பின் அம்மன் நகைகள் மற்றும் பூக்களால் அலங்காரம் செய்யப்படுகிறாள்.
அம்மனுக்கு முன்னே நுனி வெட்டாத வாழையிலை போடப்படுகிறது. அதில் அம்மனுக்கான படையல்களான இனிப்புகள், பழங்கள், அன்னம், கொழுக்கட்டை, பாயசம், உளுந்த வடை, அப்பம் ஆகியவை இடம் பெறுகின்றன.
மஞ்சளில் சிறிது தண்ணீர் விட்டு பிள்ளையார் செய்து வெற்றிலையில் வைக்கப்படுகிறார். மஞ்சளில் தோய்த்த நூல்கயிறுகள் அம்மன் பாதத்தில் வைக்கப்படுகின்றன.
முதலில் விளக்கினை ஏற்றி விநாயகருக்கு தீபதூப ஆராதனை செய்து வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. பின் அம்மனுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது.
லட்சுமி அஷ்டோத்ரம், லலிதா சகஸ்ரநாமம், லட்சுமி சதாநமாவளி உள்ளிட்ட லட்சுமி குறித்த பாடல்கள் பாடப்படுகின்றன. நாள் முழுவதும் இறைசிந்தனையுடன் இருக்கின்றனர்.
மாலைப் பொழுதின் போது நண்பர்கள், உறவினர் மற்றும் சுற்றுப்புறத்திலுள்ளோர்களை அழைத்து வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
வழிபாட்டு முடிந்ததும் பெண்கள் மஞ்சள் கயிற்றினை தங்கள் கைகளில் அணிந்து கொள்கின்றனர். வழிபாட்டில் இடம்பெற்ற படையல்கள் எல்லோருக்கும் வழங்கப்படுகிறது.
மறுநாள் காலையில் அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. பின் அம்மனை வீட்டில் உள்ள அரிசி பாத்திரத்தில் வைத்துவிடுகின்றனர். இவ்வாறு செய்வதால் அம்மன் வீட்டிலேயே தங்கிவிடுவதாக கருதப்படுகிறது.
நாமும் வரலட்சுமி நோன்பிருந்து வளம் பெறுவோம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!