வரிக் குதிரைக்கு விக்கல்

வரிக் குதிரைக்கு விக்கல் வந்தது. அருகில் இருந்த ஏரியில் தண்ணீர் குடித்தது. ஆனாலும் விக்கல் நிற்கவில்லை. விக்கிக் கொண்டே வந்தது.

தூங்கிக் கொண்டிருந்த கரடி விக்கல் சத்தம் கேட்டு விழித்தது. “என்ன? விக்கலா? மூன்று முறை குட்டிக் கரணம் போடு. விக்கல் நின்று விடும்” என்றது.

வரிக்குதிரையும் குட்டிக் கரணம் போட்டது. ஆனால் விக்கல் நிற்கவில்லை.

மரத்திலிருந்த குரங்கு இதைப் பார்த்துக் கொண்டிருந்தது. அது வரிக்குதிரையை நோக்கி, “பின்னங்கால்களில் நின்று கொண்டே நூறிலிருந்து ஒன்று வரை விரைவாக எண்களைச் சொல். விக்கல் நின்று விடும்” என்றது.

“நூறு… தொண்ணூற்று ஒன்பது…, தொண்ணூற்று ஏழு… ஐயோ தப்புத் தப்பாக வருகிறதே” வரிக்குதிரை மீண்டும் எண்களைச் சொல்ல ஆரம்பித்தது.

அப்போது முள்ளம்பன்றி ஒன்று அங்கு வந்தது. “விக்கல் நிற்க நான் ஒரு வழி சொல்லட்டுமா? இந்த ஏரியைச் சுற்றி இரண்டு முறை ஓடு. விக்கல் நின்று விடும்” என்றது.

வரிக்குதிரையும் ஏரியைச் சுற்றி ஓடியது. ஓடி ஓடி மூச்சுத்தான் வாங்கியது. விக்கல் நிற்கவில்லை.

அப்போது அங்கு வந்த யானை வரிக்குதிரையைப் பார்த்து வியந்தது. “உன் உடலில் ஏதோ மாற்றம் தெரிகிறதே” என்று கேட்டது.

வரிக்குதிரை தன் உடலைப் பார்த்தது. திகைத்து நின்றது. “ஐயோ அழகான என் வரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டனவே”.

யானை அருகிலிருந்த ஆற்றை நோக்கி ஓடியது. துதிக்கையால் தண்ணீரை உறிஞ்சி வந்தது. வரிக்குதிரையின் முகத்தில் முழுவேகத்தில் தண்ணீரை பீச்சி அடித்தது. வரிக்குதிரை அதிர்ச்சி அடைந்தது.

என்ன அதிசயம் விக்கல் நின்றுவிட்டது.
“ஆனால் என் அழகிய வரிகள்….?” என்றது வரிக்குதிரை.

நீரில் நனைந்ததால் அது குளிரால் நடுங்கியது. “அச் அச்” என்று தும்மியது. உடல் குலுங்கியது. ஒன்றாகச் சேர்ந்த வரிகள் பிரிந்தன.

“ஆகா அழகிய வரிகள் வந்து விட்டனவே” மகிழ்ந்தது வரிக்குதிரை.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.