மலம் கலந்த பின்னும்
சலனமேதுமின்றி
கர்வத்தோடு கர்சித்து நிற்கிறது
நீர்த்தேக்க தொட்டி ஒன்று
நிமிர்ந்தபடியே…
வருணத்தின் வல்லமைகளை
வாய்மையின்றிக் கிழிக்கும்
வீர வாய்களுக்கு
வக்கிரச் செயலென
சுட்டிய விரல்களையே
வெட்டி வீழ்த்துதல்
சுகம் என்கின்றன
சுத்தமில்லா அவைகள்
மூத்திரத்தை குடிக்கச் செய்தும்
அடங்காத அவல ஆட்டம்
ஆத்திரத்தை அரங்கேற்றி
அகிம்சையின் அஸ்திவாரங்களை
பெரும் அவஸ்தையாய்
ஆட்டிப் பார்க்கிறது
அனாயாசமாய் …
கல்வெட்டுகளும் செப்பேடுகளும்
செப்பாததை வித்தியாசமெனும்
விஞ்ஞான விதானங்களாய்
அநாகரிக அவலம்
அங்காங்கே அரங்கேற்றிடும்
வளர்ச்சி எனும் தலைப்பினூடே
விபரீதமாய் …!
கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250