வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்

வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் மதுரையின் மேல் வருணன் ஏவிய கடலை சொக்கநாதர் தன்முடிமீதுள்ள மேகங்களைக் கொண்டு உறிஞ்சச் செய்து மதுரையை காப்பாற்றியதைக் கூறுவதாகும்.

சித்திரையில் வரும் பௌர்ணமியில் சொக்காநாதரை வழிபடுவதன் பலனை இந்திரன் எடுத்துரைப்பது, வருணன் சோமசுந்தரரை சோதிக்க எண்ணியது ஆகியவை இப்படலத்தில் விளக்கப்பட்டுள்ளன.

மதுரையை அழிக்க வந்த கடலினை சோமசுந்தரர் வற்றச் செய்தது, சொக்கநாதரின் பெருமைகள் முதலியவை பற்றியும் இப்படலம் எடுத்து உரைக்கிறது.

வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரை காண்டத்தில் பதினெட்டாவது படலம் ஆகும். இப்படலத்தோடு மதுரை காண்டம் நிறைவு பெறுகிறது.

இந்திரனின் சோகம்

சொக்கநாதரின் கருணையினால் ஆட்சியில் அமர்ந்த அபிடேகப்பாண்டியன் மதுரையை சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான்.

அப்போது சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி அன்று மதுரையில் குடிகொண்டிருக்கும் சொக்கநாதரை போகத்தையும் வீடு பேற்றினையும் வழங்கும் வழிபாட்டினை முறைப்படி நடத்தத் தொடங்கினான்.

இதனால் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் சொக்கநாதரை வழிபாடு நடத்திவரும் தேவர்களின் தலைவனான இந்திரன் பாண்டியனின் வழிபாடு முடியும்வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.  இதனால் இந்திரன் பெரும் சோகத்தில் முகம் வாடி தன் இருப்பிடத்திற்குத் திரும்பினான்.

வருணனும், இந்திரனும்

இந்திரனின் இருப்பிடத்திற்கு வந்த வருணன் இந்திரனின் வாடிய முகத்தைக் கண்டான். பின் அவன் இந்திரனிடம் “தேவர்களின் தலைவனே, உன்னுடைய முகம் வாடியிருப்பதற்கான காரணம் என்ன?” என்று கேட்டான்.

அதற்கு இந்திரன் “மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதரை நான் ஆண்டுதோறும் சித்திரை பௌர்ணமி அன்று வழிபாடு நடந்துவேன்.

இந்த வருடம் அபிடேகப்பாண்டியனின் வழிபாட்டால் நான் வழிபாடு நடத்த சற்று காலம் தாழ்ந்தது. சாதாரண மனிதனால் என்னுடைய வழிபாடு காலம் தாழ்ந்து நிகழ்ந்தது. அதனாலேயே என்னுடைய மனம் துன்பம் அடைந்துள்ளது” என்று கூறினான்.

“யார் முதலில் வழிபாடு நடத்தினால் என்ன? முதன் முதலாக வழிபாடு செய்வதற்கு அந்த சொக்கநாதர் என்ன அவ்வளவு சக்தி வாய்ந்தவரா?” என்று கேள்வி கேட்டான்.

அதற்கு இந்திரன் “என்னுடைய பழியையும், வெள்ளை யானையின் சாபத்தையும் இறைவனான சொக்கநாதர் நீக்கினார். மேலும் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் சொக்கநாதரை வழிபாடு நடத்தினால் ஆண்டு தோறும் வழிபட்ட பலன் கிடைக்கும். தங்களின் துன்பங்கள் நீங்கப் பெறுவர். இச்செய்தி உனக்கு தெரியாதா?” என்ற கேட்டான்.

அதற்கு கடல்களின் அரசனான வருணன் “தேவலோகத்தில் இருக்கும் மருத்துவர்களாலும் தீர்க்க முடியாத எனக்கு ஏற்பட்டிருக்கும் தீராத வயிற்று வலியை சொக்கநாதர் தீர்த்து வைப்பாரா?” என்று கேட்டான்.

“மக்களின் பிறவியாகிய பெருங்கடலை தீர்த்து வைக்கும் சொக்கநாதர் உன்னுடைய வயிற்று வலியை கட்டாயம் தீர்த்து வைப்பார். நீ இறைவனின் திருவிளையாடலை இப்பொழுதே சோதிப்பாயாக” என்று கூறினான்.

வருணன் சென்று வெள்ளியம்பலத்துள் ஆடும் பெருமானின் திருவிளையாடலைக் கண்டு வயிற்று வலியை நீக்கிக் கொள்ளக் கருதி ஒலிக்கின்ற கடலை விரைந்து அழைத்தான். பின் “நீ மதுரையை அழிப்பாயாக” என்று வருணன் கட்டளை இட்டான்.

கடல் வெள்ளம் மதுரையை அழிக்க வருதல்

வருணனின் ஆணையை ஏற்ற கடலானது பொங்கி மேலே எழுந்து மதுரை அழிக்க வந்தது. கடல் பொங்கி வருதை அறிந்த மதுரை மக்கள் மற்றும் அபிடேகப்பாண்டியன் சொக்கநாதரை சரண் அடைந்தனர்.

சொக்கநாதரிடம் அபிடேகப்பாண்டியன் “பொங்கி மதுரையை அழிக்க வரும் கடலிடமிருந்து எங்களை விரைந்து காப்பாற்றுங்கள் இறைவா” என்று கதறி அழுதான்.

சிவபெருமானின் கருணை

அபிடேகப்பாண்டியன் மற்றும் மதுரை மக்களின் வேண்டுதலை சொக்கநாதர் ஏற்றுக் கொண்டார். தன்னுடைய சடையில் சூடியிருந்த மேகங்களிடம் “பொங்கி வரும் கடலினைக் குடித்து அதனை வற்றும்படி செய்யுங்கள்” என்று கூறினார்.

இறைவனின் ஆணையின்படி நான்கு மேகங்களும் உயர்ந்து எழுந்து பொங்கிய கடலின் நீரினைக் குடித்தன. மதுரை நகரானது கடலின் துன்பத்திலிருந்து தப்பியது.

அபிடேகப்பாண்டியனும், மதுரை மக்களும் தங்களைக் காத்த சொக்கநாதரை பலவாறுப் போற்றி வழிபாடுகள் நடத்தினர்.

இப்படலம் கூறும் கருத்து

இறைவனின் திருவடிகளைச் சரணடைந்தால் பிறவியாகிய பெருங்கடலை கடக்கலாம் என்பதே இப்படலம் கூறும் கருத்தாகும்.

வ.முனீஸ்வரன்

 

முந்தைய படலம் மாணிக்கம் விற்ற படலம்

அடுத்த படலம் நான்மாடக் கூடலான படலம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: