வறட்சி

வறட்சி என்றால் என்ன‌

வறட்சி என்பது ஓர் இடத்தில் ஒரு பருவத்தில் பெய்யும் சராசரி மழை அளவானது குறையும் போது ஏற்படுகிறது. இது மாதக்கணக்கிலோ, வருடக் கணக்கிலோ நீடிக்கலாம்.

வறட்சியை நீக்குவதற்கு தேவையான மழைப் பொழிவு ஒன்றே தீர்வு என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் வறட்சியை வெல்லலாம். வறட்சியின் காரணமாக நாட்டின் வேளாண்மை, பொருளாதாரம், மக்களின் வாழ்க்கை முறை, சுற்றுப்புற சூழ்நிலை ஆகியவை பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

சிலி நாட்டில் உள்ள அடகாமா பாலைவனத்தில் 400 வருடங்களாக நீடித்த வறட்சி ஏற்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

வறட்சியை அதன் பாதிப்பு மற்றும் கால அளவினைப் பொறுத்து நான்காகப் பிரிக்கலாம். அவை

1. வானிலை சார் வறட்சி

2. விவசாய வறட்சி

3. நீரியியல் சார் வறட்சி

4. சமூக பொருளாதார வறட்சி ஆகும்.

 

வழக்கமான மழைக் காலத்தில் பெய்யும் மழை அளவானது, சராசரி மழை அளவை விடக்குறையும் போது வானிலை சார் வறட்சி ஏற்படுகிறது. இதுவே மற்ற வறட்சிகளுக்கும் முக்கிய காரணியாகும்.

விவசாய வறட்சியில் பயிர் வளர்ச்சி குறைந்துவிடும். அதாவது மண்ணிலுள்ள நீரின் அளவு குறைந்து பயிர் பாதிப்படைந்து விவசாய உற்பத்தி குறைந்து விடும்.

மழையின் அளவானது குறைந்து விடுவதால், வறட்சியான கால நிலை தொடர்ந்து ஆறுகள், குளங்கள், ஓடைகள், ஏரிகள் முதலிய நீர்நிலைகள் வற்றிப் போவது நீரியியல் சார் வறட்சி ஆகும்.

தொடர்ந்த வறட்சியால் உற்பத்தி பாதிக்கப்பட்டு பொருளாதார பின்னடைவு ஏற்படுதலே சமூக பொருளாதார வறட்சி ஆகும்.

வறட்சியின் விளைவால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. விவசாயம் குறைவதால் பஞ்சம் ஏற்படும். இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம் பெயர்வது ஏற்படும்.

வறட்சியின் காரணமாக வெப்பநிலை அதிகரித்து உயிரினங்களுக்கு வெப்பத்தினால் ஏற்படும் நோய்கள் உண்டாகும். நீர் மற்றும் நிலவாழ் விலங்குகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உயிர் சூழ்நிலையில் மாற்றங்கள் உருவாகும்.

குறைந்த மழைப்பொழிவினால் நீர்மின் உற்பத்தி பாதிக்கப்படும். வறட்சியினால் தொழிற் உற்பத்தி பாதிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும். உணவு மற்றும் தண்ணீருக்குச் சண்டையிடும் சூழ்நிலை உருவாகும். மழை குறைவதால் மண்வளம் குறையும்.

இந்தியாவைப் பொறுத்தவரை மானாவாரி விவசாயமும், பாசன விவசாயமும் மழையை நம்பியே உள்ளன. எனவே மழைப் பொழிவானது ஒரு பருவத்தில் குறையும் போது இந்தியா வறட்சியின் பிடியில் சிக்கிக் கொள்கிறது.

2050ஆம் ஆண்டினை நெருங்கும் போது வறட்சியின் பாதிப்பால் மட்டுமே தெற்காசிய நாடுகளின் விளைச்சல் 30% வரை பாதிக்கப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவில், 11 மாநிலங்களில் 278 மாவட்டங்கள் அடிக்கடி வறட்சியால் பாதிக்கப்படுகின்றன. நம்நாட்டில் மொத்த விவசாயப் பரப்பில் மூன்றில் ஒரு பங்கு விவசாயப் பரப்பு வறட்சியால் பாதிப்படைகிறது. அதோடு நம்நாட்டில் உள்ள மொத்த விளை நிலங்களில் 52% மானாவாரி நிலங்களாகும். நமது மொத்த விவசாய உற்பத்தியில் இவற்றின் பங்களிப்பு 44% ஆகும்.

 

இந்தியாவில் வறட்சி

இந்தியாவில் 2002ஆம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியின் காரணமாக உணவு தானிய உற்பத்தி பாதிக்கப்பட்டது. 2001ஆம் ஆண்டு 212 மில்லியன் டன்னாக இருந்த உணவு உற்பத்தி 2002ல் 183 மில்லியன் டன்னாகக் குறைந்தது. 29 மில்லியன் டன் உணவு உற்பத்தி இழப்பு ஏற்பட்டது.

அரிசியில் 17.36% எண்ணெய் வித்துகளில் 13.7% பருத்தியில் 7.7%, கரும்பில் 7.2% உற்பத்தி இழப்பு ஏற்பட்டது. 2002ல் வறட்சியின் காரணமாக நீர்மின் உற்பத்தி 13.9% குறைந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.1 % குறைவு ஏற்பட்டது.

ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு குஜராத், போன்ற மாநிலங்களில் லட்சக்கணக்கான குறுசிறு விவசாயிகள் விவசாய வேலையாட்கள் தங்கள் சொந்த ஊரைவிட்டு வேலை தேடி வெளியிடங்களுக்கு இடம் பெயர வேண்டிய சூழ்நிலை உருவானது. குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது.

இப்படியாக வறட்சி விவசாயத்தைப் பாதித்து அதன் தொடர் விளைவாக ஒரு நாட்டின் ஒட்டு மொத்த சமூக பொருளாதார ஸ்திரத் தன்மையை சீர்குலைத்து விடுகிறது. வறட்சி மற்றும் பருவநிலை பாதிப்பால் 2 முதல் 2.5 கோடி சிறுகுறு விவசாயிகள் மற்றும் விவசாய கூலியாட்கள் கிராமங்களை விட்டு நிரந்தரமாக நகரப் பகுதிகளுக்கு குடிபெயர்வார்கள் என்றும், இதில் பெரும்பான்மையான குடிபெயர்வு இந்தியாவில்தான் நடக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

இதனால் நகரங்களில் குடிசைப் பகுதிகள் பெருகி பொது சுகாதாரக்குறைபாடு ஏற்படுவதுடன் சத்துணவு பற்றாக்குறையால் இம்மக்கள் பாதிப்படைவார்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் வறட்சி

தமிழகத்தில் வறட்சி பழங்காலம் தொட்டே நிலவி வந்துள்ளது. பாண்டிய மன்னர் காலத்தில் தொடர்ந்து 12 வருடங்கள் வறட்சி நிலவியதற்கான குறிப்புக்களை தமிழ் இலக்கியங்கள் மூலம் அறியலாம். தமிழ்நாட்டில் வறட்சியை நான்கு முக்கிய காரணிகள் நிர்ணயிக்கின்றன. அவை

1. மழையளவு

2. நிலத்தடி நீர்

3. நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அளவு மற்றும்

4. பயிர்களின் நிலை.

தமிழ்நாட்டில் உள்ள மொத்த மாவட்டங்களில் பாதிக்கு மேல் உள்ள மாவட்டங்கள் பெரும்பாலும் வறட்சியைச் சந்திக்கின்றன. தென்மேற்கு பருவ மழை இயல்பான அளவிற்கு பெய்யாமல் குறையும் போது தென்மேற்கு பருவ மழை காலத்திலும் கோடை காலத்திலும் வறட்சி ஏற்படுகின்றது.

தமிழ்நாட்டின் ஆண்டு சராசரி மழையளவு 930 மில்லி மீட்டர் ஆகும். சராசரியாக இந்த மழை அளவானது 45 மழை நாட்களில் பெய்கிறது. இதில் பாதியளவு 15 நாட்களில் பெய்துவிடும்.

 

வறட்சிக்கான காரணங்கள்

மழை பொய்த்துப் போவது, நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி காலியாக்குவது, நீர்த்தேக்கங்களில் நீரின்மை, தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களை சாகுபடி செய்வது போன்றவையே தமிழ்நாட்டில் வறட்சி ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாகும்.

இவைமட்டுமின்றி, நீர்ப்பிடிப்புத் தன்மை குறைந்த மண் வகைகளும் வறட்சியை அதிகரிக்கின்றன. தமிழ் நாட்டில் செம்மண், கரிசல் மற்றும் வண்டல் மண் வகைகளே அதிகம். மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மணல்சாரி மண்வகை நிலங்கள் தொடர் வறட்சிக்கு இலக்காகின்றன. பல மாவட்டங்களில் பரவலாகக் காணப்படும் செம்மண் நிலங்களின் நீர்ப்பிடிப்புத் திறனும் குறைவுதான். இப்படியாக மண்வகையும் தமிழ்நாட்டின் வறட்சிக்கு முக்கிய காரணமாகும்.

 

வறட்சியின் விளைவுகள்

1980ல் வடகிழக்குப் பருவ மழை பொய்த்துவிட்டதால், கடுமையான வறட்சியால் சுமார் 2.50 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் சேதமடைந்தன. குடிதண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டதுடன் விவசாயமும், நெசவுத் தொழிலும் பாதிப்படைந்தன.

1982ல் ஏற்பட்ட கடும் வறட்சியால் நெல் மற்றும் நிலக்கடலை விளைச்சல் பாதிக்கப்பட்டது. மழை வளம் மிகுந்த நீலகிரிப் பகுதியில் 15000 ஏக்கர் தேயிலைத் தோட்டங்கள் காய்ந்து போயின.

1983ல் ஏற்பட்ட வறட்சியால் நெல், பயறுவகை மற்றும் சிறுதானியப் பயிர் விளைச்சல் பாதிப்படைந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்ததால், மின் உற்பத்தி பாதிப்படைந்தது.

1985ல் ஏற்பட்ட வறட்சியால் கோவை, திருச்சி, சேலம், தர்மபுரி, மதுரை மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை பூதாகரமானது. இந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் இரண்டு மீட்டர் அளவு குறைந்து போனது.

1987, 1989ல் ஏற்பட்ட வறட்சியால் மாநிலத்தின் நிலத்தடி நீர்மட்டம் இயல்பான அளவைவிட 11 மீட்டர் குறைந்தது.

 

வறட்சியை வெல்வது எப்படி?

வறட்சியால் நமது மாநிலம் அடிக்கடி பாதிக்கப்படுவதால் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்வது அவசியமாகிறது. வறட்சியானது ஓர் இயற்கை இன்னல் என்பதால் அதனை தடுக்க முடியாது. ஆனால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் பாதிப்பிலிருந்து தப்பலாம்.

வறட்சியானது விவசாயிகளைத் தான் அதிகம் பாதிக்கும். எனவே வறட்சி பாதிப்பிலிருந்து காத்துக் கொள்வதற்கு சரியான வழி, வறட்சியைத் தாங்கும் பயிர்களை சாகுபடி செய்வது தான்.
வறட்சியைத் தாங்கும் நெல் ரகங்களைத் தேர்வு செய்து பயிர் செய்யலாம்.

கம்பு, துவரை, ஆமணக்கு, கொத்தவரை, மாதுளை, சீத்தா, வில்வம், பனை, கறிவேப்பிலை போன்றவை வறட்சியைத் தாங்கி வளரக்கூடியவை. எனவே வறட்சியான பகுதிகளுக்கு ஏற்றவாறு பயிர் செய்து லாபம் ஈட்டலாம்.

நீர்நிலைகளை சீர்செய்து மழைநீரைத் தேக்குதல், நிலத்தடி நீரை செறிவூட்டுதல், பயிர் சுழற்சி முறையில் விவசாயம் செய்தல், பயன்படுத்திய நீரினை மறு சுழற்சி செய்து பயன்படுத்துதல், உள்நாட்டில் உள்ள அதிக நீர்வளமுள்ள நதியினை நீர்வளம் குறைவாக உள்ள நதியுடன் இணைத்தல் வறட்சியைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் வறட்சியை வெல்லலாம்.

 


Comments

“வறட்சி என்றால் என்ன‌” அதற்கு 3 மறுமொழிகள்