இறவையில் சாகுபடி செய்யப்படும் தானியப் பயிர்களில் கம்பு ஓரளவிற்கு வறட்சியைத் தாக்குப் பிடிக்கக் கூடிய பயிர். இந்தியா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் பரவலாக பயிரிடப்படும் சிறுதானிய வகையாகும்.
ஆப்பிரிக்காவில் தோன்றி இன்று உலகம் முழுவதும் பயிர் செய்யப்படுகிறது. வர்த்தக ரீதியாக இன்று இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பயிர் வளர்வதற்கு குறைந்த நீர்வளம் போதுமானது. மேலும் ஊட்டச்சத்து குறைந்த நிலங்களிலும் இது நன்றாக வளரும்.
இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிக அளவு பயிர் செய்யப்படுகிறது. இப்பயிரினை சித்திரை, மாசி, ஆடி, புரட்டாசி மாதங்களில் பயிர் செய்யலாம். விதைத்து இரண்டரை முதல் மூன்று மாதங்களில் அறுவடை செய்யலாம். மானாவாரியில் ஏக்கருக்கு சராசரியாக 1000 கிலோவும், பாசனப்பயிரில் ஏக்கருக்கு 1500 கிலோவும் மகசூலாகும்.
விதைப்பு
ஒரு ஏக்கருக்கு தேவையான 1.5 கிலோ விதைகளை மேட்டுப்பாத்தி நாற்றங்கால் அமைத்து நாற்று விடலாம். விதைகளுடன் தலா ஒரு பொட்டலம் அஸோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா கலந்து விதைத்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும்.
விதைத்து 15 முதல் 18 நாட்களில் நாற்றுகளை வயலில் நடவு செய்ய வேண்டும். நாற்றுவிடாமல் நேரடியாகவும் விதைக்கலாம்.
அடியுரம்
ஒரு ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் தலா 4 பொட்டலம் அஸோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவும் இடலாம். மண்பரிசோதனை முடிவுப்படி ரசாயன உரங்களை இட வேண்டும். சிறுதானிய நுண்ணூட்டம் 5 கிலோ இடலாம்.
நடவு
பாசன நீரை சிக்கனமாகப் பயன்படுத்த 1 ½ அடி இடைவெளியில் பார் பிடித்து அதில் 1 ½ அடி இடைவெளியில் நாற்றுகளை நட வேண்டும். பாசன நீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் ஒரு பார்விட்டு ஒரு பாரில் பாசனம் செய்தால் போதும்.
வறட்சியைத் தாக்கு பிடிக்க
கம்பு விதைகளை 3% சாப்பாட்டு உப்புக் கரைசலில் ( 1 லிட்டர் தண்ணீருக்கு 30 கிராம் உப்பு) 16 மணி நேரம் ஊற வைத்த பிறகு 5 மணிநேரம் நிழலில் உலர்த்தி விதைக்கலாம். இப்படிச் செய்வதால் முளைப்புத் திறன் அதிகரிப்பதுடன் வளரும் இளம் பயிருக்கு வறட்சியைத் தாங்கும் சக்தியும் கிடைக்கும்.
பாசனம்
முக்கிய பயிர் பருவங்களான பூக்கும் மற்றும் கதிர் முற்றும் பருவத்தில் தவறாமல் பாசனம் செய்தால் நல்ல விளைச்சலைப் பெறலாம்.
நீல நிற அட்டை அல்லது வெள்ளை நிற அட்டை பொருத்தப்பட்ட காலாவதி ஆகாத சான்று பெற்ற விதைகளைப் பயன்படுத்த வேண்டும்.
பயன்கள்
கம்பு சிறுதானியத்தில் புரதம் சத்து மிகுந்துள்ளது. 100 கிராம் இத்தானியத்தில் 328 கிலோ கலோரி உள்ளது. இது இந்தியாவில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே பயிர் செய்யப்பட்டுள்ளது.
கம்பிலிருந்து பொதுவாக தோசை மற்றும் கூழ் செய்து உண்ணப்படுகிறது. கம்பு தானியத்தில் ஸ்டார்ச், புரதம், தாதுக்கள், நார்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன.
வைட்டமின் “பி” யைச் சார்ந்த நியாசின் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை உடையது. எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் கம்பினை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இதில் உள்ள பாஸ்பரஸ் சத்து உடல், எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது.
கம்பானது உடலின் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது.
மேலும் கம்பினை தொடர்ந்து உட்கொள்வதின் மூலம் புற்று நோய் வராமல் தடுக்கலாம். மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தும்
பாதுகாக்கும் முறை
கம்பினை ஈரப் பதமில்லாத உலர்த்த ஒளி குறைவான இடத்தில் வைக்க வேண்டும். 4 முதல் 6 மாதங்களுக்கு ஒரு முறை இதனை எடுத்து காய வைக்க வேண்டும்.
வறட்சி மற்றும் வளமற்ற நிலத்திலும் வளரும் தன்மையுடைய கம்பினை பயிர் செய்து பயன் பெறலாம்.
Comments
“வறட்சி நிவாரணி – கம்பு” மீது ஒரு மறுமொழி