மாதுளை மரம் வறட்சியைத் தாங்கிக் கொண்டு வளர்ந்து பலன்தரவல்ல ஒரு சில பழமரங்களில் ஒன்று. அதிக லாபத்தையும் சாகுபடியாளருக்கு இது பெற்றுத் தரும்.
அதிக பாசனமும், உழைப்பும் இல்லாமல், முதலீடு அதிகம் செய்யாமலும் விளையும் ஒரு மாதுளம் பழம் சராசரியாக முப்பது ரூபாய்க்கு மேல் விற்பனை ஆகிறது. இதுவே மாதுளையின் தனிச் சிறப்பு.
ஒரு குறிப்பிட்ட மண்வகை தான் என்றில்லாமல் களரி மற்றும் உவர் மண்ட உட்பட எல்லா வகையான மண்ணிலும் செழித்து வளரும் இயல்புடையது இது. இதற்கான தண்ணீர் தேவையும் குறைவு.
சமவெளிப் பகுதிகளில் மட்டுமில்லாமல் 5900 அடி வரை உயரமுள்ள மலைப்பகுதிகளிலும் இது வளரும். இந்த அளவிற்கு மாறுபட்ட தட்ப வெப்பநிலைகளை தாங்கிக் கொண்டு வளர்ந்து பலன்தரக் கூடியது.
குளிர் மிகுந்த பனிக்காலமும், வறண்ட கோடையும் மாதுளை செழித்து வளர்ந்து பலன் தர ஏற்ற சூழ்நிலையாகும். ஆப்கானிஸ்தானில் இப்படிப்பட்ட கால நிலை நிலவுவதால் தான் காபூல் மாதுளையை மற்ற பகுதிகளில் விளையும் மாதுளை ரகங்களால் இன்று வரை வெல்ல முடியவில்லை. வறண்ட கோடையும் குளிர் மிகுந்த பனிகாலமும் பழத்தின் சுவையை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
மாதுளஞ்செடிகள் நடவு செய்து நான்கு ஆண்டுகளில் பலன் தரத் தொடங்கும் எனினும் முழுப்பலனும் நடவு செய்து ஏழு ஆண்டுகள் கழித்துத்தான் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு வருடத்திற்கு 8000 கிலோ முதல் 10000 கிலோ வரை பழ விளைச்சல் கிடைக்கும். தற்பொழுது மாதுளை பழம் விற்கும் விலையுடன் ஒப்பிட்டால் விளைச்சல் விலை மதிப்பு மிகவும் அதிகம் ஆகும்.
நடவு முறை
ஜுன் முதல் டிசம்பர் வரை மாதுளைச் செடிகளை நடவு செய்ய ஏற்ற பருவமாகும். கோடை மழைப் பருவத்தில் நடவு குழிகளை வரிசையாக பத்து அடி இடைவெளியிலும், ஒவ்வொரு வரிசைக்கு இடையிலும் பத்து அடி இடைவெளியிலும் அமைக்கலாம்.
ஒவ்வொரு குழியும் 2’ X 2’ X 2’ அளவில் இருக்க வேண்டும். குழிகளை எடுத்தபின் அவற்றில் சருகுகள், காய்ந்த இலைகள் போன்ற பயிர் கழிவுகளைப் போட்டு எரித்து அப்படியே ஒரு மாதம் ஆறப்போட வேண்டும். அவ்வப்பொழுது பெய்யும் கோடை மழை நீரினாலோ அல்லது நீரை ஊற்றியே குழிகளை ஈரப்படுத்த வேண்டும்.
செடிகளை நடவு செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன் மேல் மண்ணுடன் தொழு உரம் கலந்து குழிகளில் முக்கால் பங்கு உயரத்திற்கு நிரப்பிவிடவும். பின் ஒரு வாரம் கழித்து வேர் விட்ட குச்சிகள் அல்லது ஒன்று முதல் ஒன்றரை வயதுடைய பதியன்களை தேர்வு செய்து நட வேண்டும். மூன்று நாள் கழித்து தண்ணீர் விட்டு, பின் தேவைக்கு ஏற்றவாறு தண்ணீர் பாய்ச்சலாம்.
பொதுவாக மழைகாலங்களில் பாசனம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. மழையற்ற பருவங்களில் 10-12 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விடலாம். சொட்டுநீர் பாசனம் அமைத்து, மிகக்குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு நிறைவான மகசூல் எடுக்கலாம். பழங்கள் உருவாகும் போது வாரம் ஒருமுறை பாசனம் செய்வதன் மூலம் அதிக விளைச்சல் எடுக்க முடியும்.
மாதுளச் செடி நட்டு ஒரு வருடம் ஆனதும் ஊட்டச்சத்து அளிக்க வேண்டும். இதனால் செடிகள் வேகமாகவும் ஊக்கமுடனும் வளரும். தொழு உரம் இடுவது சிறந்தது. உரமிட்டவுடன் பாசனம் செய்ய வேண்டும். அல்லது மழை காலத்தில் உரமிட வேண்டும்.
முதல் வருடம் சென்ற பின் ஒவ்வொரு செடிக்கும் 10 கிலோ தொழு உரம், 440 கிராம் யூரியா, 625 கிராம் சூப்பர் பாஸ்பேட், 640 கிராம் பொட்டாஷ் ஆகியவற்றை கலந்து உரமிட வேண்டும். இரண்டு முதல் 5 வருடச் செடிகளுக்கு ஒவ்வொரு வருடமும் செடிக்கு 20 கிலோ தொழு உரம், 880 கிலோ யூரியா, 1560 கிராம் சூப்பர் பாஸ்போர்ட் 1280 கிராம் பொட்டாஷ் கலந்து உரமிட வேண்டும்.
ஆறாவது வருடம் முதல் ஒவ்வொரு செடிக்கும் 30 கிலோ தொழு உரம், 1320 கிலோ யூரியா, 3125 கிலோ சூப்பர் பாஸ்பேட், 1920கிலோ பொட்டாஷ் கலந்து உரமிட வேண்டும். இதனால் செடிகள் செழித்து வளர்ந்து நல்ல விளைச்சலைத் தரும்.
கவாத்து செய்தல்
குளிர்காலம் முடியும் தருவாயில் அதாவது பிப்ரவரி மார்ச் மாதங்களில் மாதுளை மரம் பூக்கத் தோன்றும். நான்கு, ஐந்து மாதங்கள் கழித்து, ஜுலை – ஆகஸ்டு மாதங்களில் பழங்கள் அறுவடைக்கு தயாராகும். இந்த கால கட்டங்களை அனுசரித்து டிசம்பர் மாதத்தில் மாதுளஞ்செடிகளை கவாத்து செய்து விட வேண்டும்.
மாதுளையின் முதிர்ந்த கிளைகளில் இருந்து உருவாகும் பக்கக் கிளைகளின் நுனியில் பழங்கள் தோன்றும். எனவே செடிகளை கவாத்து செய்து நிறைய புதிய பக்கக் கிளைகளை உருவாக்க வேண்டும். இதற்கு ஏற்கனவே பழங்களை விளைவித்த பக்கக் கிளைகளை நுனியில் இருந்து மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு கவாத்து (வெட்டி) செய்ய வேண்டும்.
இத்துடன் காய்ந்து போன நோய் தாக்கிய கிளைகளையும் வெட்டி அப்புறப் படுத்தலாம். மேலும் செடிகளின் அடிப்பக்கத்தில் இருந்து தோன்றும் இளம் கிளைகளையும் வெட்டி விட வேண்டும். செடியில் நடுத்தண்டு இரண்டு அடி உயரம் இருக்குமாறும், அதில் 3 முதல் 4 முக்கிய கிளைகள் இருக்கும்படியும் கவாத்து செய்ய வேண்டும்.
பழவெடிப்பை தவிர்த்தல்
தட்பவெப்பநிலை மாறுபாட்டில் பிஞ்சுகளிலும், முதிர்ந்த பழங்களிலும் வெடிப்புகள் ஏற்படக் கூடும். இந்த வெடிப்புகளில் பூச்சி மற்றும் நோய் தாக்கி பழங்களின் தரத்தைக் குறைத்துவிடும். இதனைத் தடுக்க ஜுன் மாதம் காய்கள் முற்றும் தருவாயில், ஒரு சதவீத திரவ மெழுகு கரைசலை செடிகளின் மேல் காய்களில் படுமாறு தெளிக்க வேண்டும.
இதற்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் திரவ மெழுகு (திரவ பாராபின் மெழுகு) என்ற விகிதத்தில் கலக்கலாம். இது போல இரண்டு முறை இருவார இடைவெளியில் தெளித்தால் பழ வெடிப்பு முழுமையாக கட்டுக்குள் வந்துவிடும்.
பழ புழுக்களை கட்டுப்படுத்துதல்
தாய்ப்பட்டாம் பூச்சிகள் பூவிலும், சிறிய காய்களின் நுனியிலும் இடும் முட்டைகளில் இருந்து பழங்களைத் தாக்கி துளையிட்டு சேதப்படுத்தும் புழுக்கள் உருவாகும். இவற்றைத் தவிர்க்க சிறிய காய்களின் பூ, முனைப்பகுதியை நீக்கிவிட வேண்டும். சிறிய பிஞ்சுகளையும் பழங்களையும், பாலிதீன் அல்லது துணிப்பைகளால் மறைத்துக் கட்டியும் புழுக்களின் தாக்குதலைத் தவிர்க்கலாம்.
காய்கள் கோலிக்குண்டு சைஸில் இருக்கும் பொழுதே டிரைகோ கிரம்மாகைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணிப் பூச்சிகளை ஏக்கருக்கு நாற்பதாயிரம் என்ற எண்ணிக்கையில் விட்டும் பழப்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
ஐந்து சதவீத வேப்பங்கொட்டைக் கரைசல் (பத்து லிட்டர் தண்ணீருக்கு அரைக்கிலோ வேப்பங்கொட்டைத்தூள்) தெளித்தாலும் புழுக்கள் கட்டுப்படும். இரண்டு வார இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.
மாதுளையில் நாட்டுரகம் மற்றும் ஒட்டு ரகம் என இருவகைகள் உள்ளன. கடினமான விதைகள் கொண்ட நாட்டு ரகங்கள் துவர்ப்புச் சுவையுடன் இருந்தாலும் மருத்துவ குணங்கள் மிகுந்தவை. ஆனால் மென்மையான விதைகள் கொண்ட இனிப்புசுவை மிகுந்த ஒட்டு ரகங்கள் உபயோகிப்பாளரைக் கவர்ந்துவிட்டன. இவை நாட்டு ரகத்தைவிட விளைச்சல் அதிகம் கிடைப்பதுடன் பழங்களின் அளவு பெரிதாகவும், முத்துக்கள் கவர்ச்சியான நிறத்திலும் அளவில் பெருத்தும் இருக்கும்.
அறுவடை வரை மட்டுமில்ல, அறுவடைக்குப் பின்னும் விவசாயிக்கு தொல்லை தராதது மாதுளம்பழம். மற்ற பழங்களைவிட நீண்டநாள் சேமித்து வைக்க முடியும். பேக்கிங் செய்யும் பொழுதும், போக்குவரத்திலும் அதிகமாக சேதம் அடைவதில்லை. கடினமான தோலைப் பெற்றிருப்பதால், நீண்ட தூரங்களுக்கு பாதிப்பில்லாமல் அனுப்பி விற்பனை செய்யலாம்.
மாதுளம்பழம் தன் தனித்தன்மை வாய்ந்த சுவை, நிறம், மணம் ஆகியவற்றால் மட்டுமில்லாமல் தன்னுடைய மருத்துவ குணத்திற்காகவும் பயன்படுத்துவோரால் விரும்பப்படுகிறது.
மாதுளை ஜுஸ் மன அழுத்தத்தை குறைக்கும் தன்மை உடையது. எவ்வளவு பிரச்சனையில் உழன்று கொண்டிருந்தாலும் ஒரு டம்ளர் மாதுளை ஜுஸ் கொண்டு மன பாரத்தை எளிதில் விரட்டி அடிக்கலாம்.
அல்சர் தொந்தரவு உள்ளவர்கள் தொடர்ந்து மாதுளம் பழத்தினை உண்ண வேண்டும். சீதபேதியைக் குணப்படுத்துவதில் மாதுளம்பழத்திற்கு நிகர் வேறு ஏதும் இல்லை. புற்றுநோயைத் தடுக்கும் சக்தி இதில் உள்ளது. எனவே தான் இதன் தேவை உலகில் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
மகாராஷ்ரா மாநிலத்தின் வறட்சிப் பகுதிகளில் விவசாயிகளின் வாழ்வதாரமாக விளங்குவது மாதுளை மரம் தான். எனவே தமிழ்நாட்டின் வறட்சியான பகுதிகளிலும் மாதுளையைச் சாகுபடி செய்யலாம்.
பலதரப்பட்ட மண் வகைகளிலும், உப்பையும் களரையும் தாங்கி, குறைவான பராமரிப்பிலும் குறைந்த பாசனத்திலும் வளர்ந்து மிகப் பெரிய லாபத்தை அள்ளிக் கொடுக்கும் மாதுளை மரம் வறட்சிப் பகுதி விவசாயிகள் சாகுபடி செய்ய ஏற்றது.