வறுத்த அரிசிக் கொழுக்கட்டை வையானது, மணமிக்கது. இதனை எளிதில் தயார் செய்யலாம்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இடைவேளை நொறுக்குத் தீனியாகவும், மாலை நேரச் சிற்றுண்டியாகவும் இதனைச் செய்து கொடுக்கலாம்.
இனி எளிய வகையில் வறுத்த அரிசி கொழுக்கட்டை செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி – 100 கிராம்
நாட்டுச் சர்க்கரை – 50 கிராம்
தேங்காய் – ½ மூடி (நடுத்தர அளவு)
தண்ணீர் – 50 மில்லி லிட்டர்
வறுத்த அரிசி கொழுக்கட்டை செய்முறை
முதலில் இட்லி அரிசியை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த அரிசி சூடு ஆறியதும் அதனை மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக்கிக் கொள்ளவும்.
அரிசிப் பொடியிலிருந்து இரண்டு கிண்ணம் (இரண்டு பங்கு) எடுத்துக் கொள்ளவும்.
நாட்டுச் சர்க்கரையை நன்கு பொடியாகத் தட்டிக் கொள்ளவும். இதிலிருந்து 1 கிண்ணம் அளவு (1 பங்கு) சர்க்கரையை எடுத்துக் கொள்ளவும்.
1 கிண்ணம் அளவு (1 பங்கு) தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்.
சர்க்கரையை தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.
பின்னர் சர்க்கரைக் கரைசலை அடுப்பில் வைக்கவும்.
சர்க்கரைத் தண்ணீர் கொதித்ததும் இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.
தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தில் அரிசிப் பொடியைப் போட்டு தேங்காய் துருவலைச் சேர்க்கவும். இக்கலவையை ஒரு சேரக் கிளறிக் கொள்ளவும்.
இப்பொழுது வடிகட்டிய சர்க்கரைக் கரைசலை சிறிது சிறிதாக அரிசிக் கலவையுடன் சேர்த்து ஒரு சேரக் கிளறி உருண்டையாகத் திரட்டவும்.
திரட்டிய மாவிலிருந்து தேவையான அளவு மாவினை எடுத்து கொழுக்கட்டைகளாகப் பிடிக்கவும்.
சுவையான வறுத்த அரிசிக் கொழுக்கட்டை தயார்.
இக்கொழுக்கட்டை பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்பர்.
இதனை ஒரே நாளில் உண்பது நலம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் நாட்டுச் சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டி கொண்டு கொழுக்கட்டை தயார் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் தேங்காயை வறுத்துப் போட்டு கொழுக்கட்டை தயார் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் சுக்கு சேர்த்து கொழுக்கட்டை தயார் செய்யலாம்.