வாழ்வில் வேண்டும் வலிமையடி
வருங்காலம் உன் அடிமையடி
வஞ்சனை நிறைந்த உலகத்திலே
வலிமை வேண்டும் நெஞ்சினிலே
விதியைப் பந்தாய் விளையாடு
விண்ணை நோக்கி நடைபோடு
வலிமை நெஞ்சம் உடையாது
வாழ்வில் தோல்வி கிடையாது
கண்ணீர்த் துளிகளைத் துடைத்தெறிவாய்
கண்மணியே நீ விழித்திடுவாய்
வலிமை நிறைந்த நெஞ்சின்முன்
வாள்கள் ஆயிரம் வீழ்ந்திடுமே
உள்ளத்தில் வலிமை இல்லையெனில்
உலகில் நீதான் ஏழையடி
உடையா உள்ளம் உனக்கிருந்தால்
உலகம் பொன்னுடைப் பேழையடி
கண்மணியே நீ கலங்காதே
காலத்தை நினைத்து நடுங்காதே
நெஞ்சில் வலிமை உனக்கிருந்தால்
நீதான் தெய்வம் எழில்மாதே
தடைகளைத் தாண்டி நடைபோடு
தரணியும் உனக்கோர் பூக்காடு
வாழ்க்கை என்பது மரமன்றோ?
வலிமை தான்அதன் உரமன்றோ?
உடலின் வலிமை எதற்காகும்
உள்ளம் தான்நம் அரணாகும்
வளையல் அணியும் வடிவழகே
வலிமை தானுன் திரவியமே!
த . கிருத்திகா
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!