வலியார்முன் தன்னை நினைக்காதாள்

பகல் முழுக்க வெளுத்து வாங்கிக் களைத்துப் போன கதிரவன், ஓய்வெடுக்கச் சென்று மூன்று மணி நேரத்திற்குமேலாகியும் அவனது தாக்கம் சற்றும் குறையவே இல்லை.

‘பங்குனி வெயில் பிளக்கிறது!’ என்பதற்கிணங்க அந்தப் பகுதி பாலை நிலத்தைப்போல் வெப்பத்தின் உச்சிக்கே சென்றிருந்தது.

அங்கிருந்த மரங்கள் தெருவோரத்தில் நிற்கும் யாசகரைப்போல் இலைகள் என்னும் ஆடைகளைப் பாதி உதிர்த்துவிட்டு, முற்றிலும் அரை நிர்வாணமாகத் துடித்துக் கொண்டிருந்தன.

அவை சற்றும் அசையாமல் நின்று கொண்டிருந்த அந்தக் காட்சி, புனையா ஓவியங்களைப் போல் இருந்தன.

திடீரென ஒரு மாற்றம். அரை நிர்வாணமாய் அசையாமல் நின்று கொண்டிருந்த மரங்கள் மெல்ல மெல்ல அசையத் தொடங்கின அதே அரை நிர்வாணக் கோலத்துடன்.

அவ்விடத்தில் நிலவிய வெம்மையும் மெல்ல மெல்ல விலகிக் கொண்டிருந்தது. ஆம்! குளிர்ந்த காற்றின் வருகை மழையின் வருகையை உறுதிப்படுத்திற்று.

திடீரெனத் திரண்ட கார்மேகங்கள் அந்த மாலைப் பொழுதுக்கு இன்னும் கொஞ்சம் கருமை நிறம் தீட்டிக் கூடுதல் அழகைச் சேர்த்துக் கொண்டிருந்தன.

அந்த ரயில் நிலையத்திலிருந்த பயணிகளுக்கும் பிறருக்கும் ‘இது மாலைப் பொழுதுதானா? அல்லது நள்ளிரவா?’ என்ற ஐயம் எழத் தொடங்கிற்று.

“ட்ரீங்… ட்ரீங்….” எனத் தொடங்கி, “பயணிகளின் கனிவான கவனத்திற்கு! வண்டி எண் 20692, நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதையா விரைவுவண்டி.

நாகர்கோவிலிலிருந்து மதுரை, திருச்சிராப்பள்ளி, சிதம்பரம் வழியாகத் தாம்பரம் வரை செல்லும் அந்தியோதையா விரைவுவண்டி இன்னும் சற்று நேரத்தில் மூன்றாவது நடைமேடைக்கு வந்து சேருமென எதிர்பார்க்கப்படுகிறது” என பெண்ணின் மெல்லிய குரலில் ஒலித்துக்கொண்டிருந்தன அந்த ரயில்நிலையத்திலிருந்த ஒலிபெருக்கிகள்.

வெயிலின் மிகுதியால் காய்ந்துபோய் அதிக நீரைக் குடித்துவிட்ட மேகங்கள் ஓரளவிற்குமேல் எடையைத் தாங்க முடியாததால் மழையாய் மாறின.

அம்மழை, பெய்யத் தொடங்கும் போதே சிறுசிறு கற்கள் விழுந்தாற்போலச் ‘சடசட’வெனப் பெரிய பெரிய துளிகளாய் விழத் தொடங்கிற்று.

அவ்வப்போது “அடடா…. அடடா….” என்ற இடி முழக்கங்களோடு ஒருவழியாக அங்கிருந்தோரது சோர்வென்னும் பசிக்குத் தீர்வென்னும் உணவானது அம்மழை.

ரயில் நிலையத்திலிருந்த பயணியருள் அந்தியோதையா விரைவு வண்டிக்காகக் காத்திருந்தோரே மிகுதியானோர். மற்றுமிருந்த சிலரோ வெவ்வேறு ரயில்களுக்காகக் காத்திருந்தோராவர்.

“ட்ரீங்…. ட்ரீங்….” என மீண்டும் ஒலிக்கத் தொடங்கின அந்த ஒலிபெருக்கிகள்.

“பயணிகளின் கனிவான கவனத்திற்கு, வண்டி எண் 20692 நாகர்கோவில், தாம்பரம் அந்தியோதையா விரைவு வண்டி நாகர்கோவிலிலிருந்து மதுரை, திருச்சிராப்பள்ளி, சிதம்பரம் வழியாகத் தாம்பரம் வரை செல்லும் அந்தியோதையா விரைவுவண்டி மூன்றாவது நடைமேடைக்கு வந்துகொண்டிருக்கிறது!” என மீண்டும் அதேபோல் பெண்ணின் மெல்லிய குரலில் அறிவித்தன ஒலிபெருக்கிகள்.

அந்த ரயில் மூன்றாவது நடைமேடைக்கு வந்து நின்றதும் பயணியர் ஓடிச் சென்று இருக்கைகளைப் பிடிக்கத் தொடங்கினர்.

சாளரங்களில் பைகளைத் திணித்தும், துண்டுகளைப் போட்டும் ஏற்கனவே உள்ளே அமர்ந்திருப்போரிடம் “அந்த எடத்தப் புடிச்சு வெய்யுங்க!” என்று சொல்லியும் எனப் பலவாறு இருக்கைகளைப் பிடித்துக் கொண்டிருந்தனர்.

ஐந்து நிமிடங்கள் அந்த ரயில் நிலையத்தில் நின்ற அந்தியோதையா விரைவு வண்டி மீண்டும் புறப்படத் தொடங்கியது.

மழையும் இடியும் குறையாதபோதும் அதைவிடப் பயணியரது ஒலியே மிகுந்திருந்தது.

குடும்பத்தோடு பயணிப்போர், தனியாகப் பயணிப்போர், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர், இளையோர் எனப் பலரும் அந்த ரயிலில் குழுமியிருந்தனர். எனவே அவர்களது பேச்சொலிகளே மழையோசையைவிட மிகுந்திருந்தது.

சற்று நேரத்தில் ரயிலோசையும் இணைந்து விட்டது மக்களது பேச்சொலிகளோடு. சலசலப்பான பேச்சொலிகளோடு “டடக் டடக்…. டடக் டடக்….” என ரயிலோசையும் கலந்திருந்தது.

சற்று நேரத்தில் சலசலப்பு சண்டையாக மாறியது. ரயில் பயணத்தின்போது அப்படி என்ன சண்டை?

உட்கார இடம் கொடுக்காததால் ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் வாக்குவாதம்.

“நாலு பேர் உக்காரவேண்டிய சீட்ல மூனு பேர்தான உக்காந்திருக்கீங்க. அந்த அம்மா படுத்துட்டே வருது. எழுந்து உக்காந்தா எங்க அம்மாவும் உக்காருவாங்கல்ல.

எப்பக் கேட்டாலும் ‘ஆளு வருவாங்க ஆளு வருவாங்கன்னு’ சொல்றீங்க. அரமணி நேரமா எந்த ஆளையும் காணும்.

நீங்க மட்டும் படுத்துத் தூங்கீட்டு வர்றீங்க. இங்க எத்தனபேர் நிக்க எடமில்லாமக் கஷ்டப்படுறோம்?

நா என்ன எனக்கா சீட் கேக்குறேன்; எங்க அம்மாவுக்குத்தானே சீட் கேக்குறேன்?” என்றார் அந்த ஆண்.

அந்த வாக்குவாதத்தைச் சற்று நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிற பயணியரும் ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணிடம் பேசத் தொடங்கிவிட்டனர்.

“ஏம்மா இப்படிப் பண்ற? நீயும் ஒரு பொம்பளதான? ஆளு வந்தா அந்தப் பாட்டி எழுந்துக்கட்டும்; அதுவரைக்கும் உக்காரட்டும். நீதான் கொஞ்சம் எழுந்து உக்காறேன்!” என்றனர்.

“நீங்க உங்க வேலையப் பாருங்க. நாங்க கஷ்டப்பட்டு சீட் புடிச்சு வெப்போம்; நைசா வந்து உக்காந்துக்குவாங்களாக்கும்? அவ்வளவு பரிதாபப்பட்டா நீங்களே ஒரு சீட் புடிச்சுத் தர வேண்டியதுதானே!” என அந்தப் பெண் படுத்துக்கொண்டே சற்றுத் திமிராகப் பதிலளித்தார்.

“இந்தப் பொம்பள எப்புடிப் பேசுது பாருங்களேன். இந்தாம்மா! எனக்கே சீட்டுக் கெடைக்காமத்தா நானும் நின்னுட்டு வர்றேன்.

எனக்கு மட்டும் சீட் கெடச்சிருந்தா அந்தப் பாட்டிக்குக் குடுத்துட்டு நா நின்னுட்டுத்தா வந்திருப்பேன். உன்னப்போல நா இல்ல!” என்று பதிலடி கொடுத்துவிட்டு அவரும் அமைதியானார்.

உடன் நின்றுகொண்டிருந்த பிற பயணியரும் “இனி இந்த லம்பாடிப் பொம்பளகிட்ட யாரு பேசுறது?” என்றபடி தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையில் இருக்கையில் அமர்ந்திருந்த மற்றோர் ஆண் “பாட்டி நீங்க இந்த சீட்ல உக்காருங்க!” என்று கட்டாயப்படுத்தி அந்த முதிய பெண்மணியை அமரச்செய்துவிட்டு, அவர் நின்றபடி பயணித்தார்.

“ண்ணா…. நன்றி ண்ணா” இது அந்தப் பாட்டியின் மகன்.

‘சேறு இருக்குற எடத்துலதா செந்தாமரையும் இருக்குமுன்னு சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன்; ஆனா இன்னைக்குத்தா உணர்றேன்!’ என மனத்திற்குள் நினைத்தபடி வருகிறார் அந்த ஆண்.

சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு மதுரையை வந்தடைந்தது அந்த ரயில்.

மதுரையில் அரைமணி நேரம் நிற்குமாம்.

ரயிலிலிருந்து இறங்கி ஏதேனும் வாங்கிவரலாமென்றால் பொருட்களை வாங்கிவருவதற்குள் வேறு யாராவது வந்துவிட்டால் நிற்கக்கூட இடமில்லாமல் போய்விடும் என்ற அச்சம் அப்பயணியருக்கு.

அது மட்டுமின்றிப் படியில் அமர்ந்திருப்போரை எழுப்பி, வெளியில் சென்று, பொருட்களை வாங்கி, மீண்டும் அவ்வாறே உள்ளே வந்தாலும் வாங்கி வந்த பொருட்களை உண்ண முடியுமா?

கூட்டத்தில் அது சாத்தியமே இல்லை என்பதால் பசியோடும் மயக்கத்தோடும் நின்றிருப்போர் நின்றபடி, அமர்ந்திருப்போர் அமர்ந்தபடி இருந்தனர்.

வாக்குவாதம் செய்துவிட்டுப் படுத்துக்கொண்டு பயணித்த அந்தப் பெண்ணும் அப்படியே படுத்தபடியே இருந்தார்.

ஆனால் அவர் மட்டும் நன்றாக உறங்கிவிட்டார். அவரோடு உடன் அமர்ந்து பயணிந்த மற்ற இரு பெண்களும் அமர்ந்தபடி உறங்கிவிட்டனர்.

திடீரென யாரோ இருவர் சாளரங்களின் வழியாக அவரை அழைக்கின்றனர்.

அவர் உறக்கத்திலிருந்து எழும்பாததால் தம்மிடமிருந்த குச்சியால் தட்டி எழுப்பினர். கோபத்தோடு சண்டையிட வேகமாக எழுந்தார் அந்தப் பெண்.

ஆனால் நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த வாகனம் திடீரென எதிர்ப்பட்ட வேகத் தடையால் சட்டென வேகம் குறைந்ததைப் போல் அந்தப் பெண்ணின் கோபமும் சட்டெனக் குறைந்தது.

அந்தப் பெண்ணால் எழுப்பியோரிடம் கோபத்தை வெளிப்படுத்த இயலவில்லை.

எப்படி வெளிப்படுத்த இயலும்?

எழுப்பியது ரயில் நிலையத்திலிருந்த பெண் காவலர்களாயிற்றே!

கோபத்தை வெளிப்படுத்தியிருந்தால் கம்பி எண்ண வேண்டியதுதான்.

இரு பெண் காவலர்களுள் ஒருவர் “என்னம்மா? நீ மட்டும் படுத்துத் தூங்கீட்டு வர்ற?

எத்தன பேரு நிக்க எடமில்லாமப் படியில தொங்கீட்டு வர்றாங்க?

அவங்களயெல்லாம் பாத்தா மனுசங்ளாத் தெரியலயா உனக்கு?” என்று உரத்த குரலில் கேள்விகளை அடுக்கினார்.

அதைக் கேட்டதும் “எனக்கு ஒடம்பு சரியில்ல மேடம்; நா உக்காந்துட்டுத்தா வந்தே பக்கத்துல இருக்குறவங்கதா என்னப் பாத்துப் பரிதாபப்பட்டுப் படுக்கச் சொன்னாங்க!” என்று நாடகமாடினார்.

எதிரில் அமர்ந்திருந்த வயதான மூதாட்டி நடந்த நிகழ்வுகளை விவரமாகச் சொல்ல அந்த இரு பெண் காவலர்களும் கடும் கோபமடைந்தனர்.

“இந்தாம்மா! உனக்கு ஒடம்பு சரியில்லன்னா பஸ்ஸுல போ! இல்ல தனியாக் காரெடுத்துட்டுப் போ!

இது அன்ரிஸ்ஸர்வேஷன் ட்ரெயின். உக்காந்துட்டுத்தா ட்ராவல் பண்ணனும்.

மரியாதையா அஜ்ஜஸ் பண்ணி உக்காரு. தேவையில்லாம மத்தவங்களத் தொந்தரவு பண்ணின அப்டீன்னாக் கேஸப்போட்டு உள்ள தள்ளீருவேன்!” என்றவுடன் மற்றொரு பெண்ணுக்கு அமர இடம்கொடுத்தார் அந்தப் பெண்.

சற்று நேரத்திற்குப் பிறகு ரயில் மதுரையிலிருந்து புறப்படுகிறது.

அந்த வயதான மூதாட்டியைக் கடும் கோபத்தோடு, கடித்துத் தின்பதுபோல் பார்த்தபடியே அமர்ந்திருந்தார் அந்தச் சண்டைக்காரப் பெண்.

ஆனால் மூதாட்டிக்கோ எந்தக் குற்ற உணர்வும் இல்லை. அந்த மூதாட்டியின் மனத்திற்குள் ஒன்று மட்டும் ஓடிக் கொண்டிருந்தது.

‘அடிமேல அடி வெச்சா அம்மியும் நகருமுன்னு கேள்விப்பட்டிருக்கேன். இங்க அடி வெய்க்கிறதுக்கு முன்னாடியே இந்தம்மா நகந்துருச்சே!’ என்பதுதான் அது.

அந்தச் சண்டைக்காரப் பெண் வலியார்முன் தன்னை நினைக்காதாள்.

ரா.பரத்குமார்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை,
விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி,
வீராச்சிபாளையம்,
சங்ககிரி மேற்கு,
சேலம் மாவட்டம் – 637 303
கைபேசி: 9843433034
மின்னஞ்சல்: drtamilbarath@gmail.com

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.