அடுத்த தலைமுறை உருவாக்கத்திற்கு பொறுப்பேற்றுள்ள அன்பு நிறைந்த என் மாணவ கண்மணிகளுக்கு..
நலம்! நாடுவதும் அதுவே.!
தினசரி வகுப்புகளுக்கு தவறாமல் வரும் எனது மாணவன், மூன்று மாத கால இடைவெளிக்கு பின்பு மீண்டும் எனது வகுப்பிலிருந்தான்.
டேய்! நீ நாள் தவறாமல் வகுப்பிறகு வருவாயே, ஏன் மூன்று மாதம் வரவில்லை என்று கேட்டேன்.
அதற்கு அவன், சார்! எனக்கு முதுகு வலி! முதுகு தண்டில் உள்ள ஜவ்வில் பிரச்சனை என்பதால் மருத்துவர்கள் ஒய்வு எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் என்னால் வகுப்பிற்கு மூன்று மாதங்கள் வர இயலவில்லை என்று அவன் சொன்னான்.
அவன் மிகவும் நல்ல மாணவன்; அமைதியான மாணவன். அவனுடைய மூன்று மாத கால வலியை கேட்கும்போது என் கண்களிலும் கண்ணீர் கசிந்திருந்தது.
அந்த வலியோடு இந்த கட்டுரையை எழுதத் துவங்குகிறேன்
1990 களுக்கு பின் சமூக உருவாக்கத்தில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டது. பெரும்பாலும் இன்றைய மாணவர்களாகிய நீங்கள் எல்லாம் 2000 ஆண்டிற்க்கு பின் பிறந்திருப்பீர்கள் என்பதால், இதற்கு முன் உள்ள வாழ்க்கையை திரைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் பார்த்திருப்பீர்கள்; கேட்டிருப்பீர்கள்.
21ம் நூற்றாண்டின் துவக்கத்தில் உருவான உங்கள் தலைமுறை ஒரு வித்தியாசமான அணுகுமுறையோடும் அமைப்போடும் வளர்ந்திருக்கிறீர்கள்.
ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய சொத்து என்பது திடகாத்திரமான உடல் அமைப்பு. அந்த திடகாத்திரமான உடல் அமைப்பை நீங்கள் தவற விட்டு விட்டீர்களோ என்பதை உங்கள் நடைமுறை வாழ்க்கை பயணத்திலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
சராசரியாக 25 வயதை கடந்த இளைஞர்களிடம், என் உடலில் எந்த நோயும் இல்லை என்பவர்கள், ஆம்! என்று சொல்லுங்கள் என்றால், மிகவும் குறைவானவர்கள் தான் ‘ஆம்’ என்று சொல்வீர்கள்.
வயிற்று வலியும் தலைவலியும் இன்று அநேக இளைஞர்களுக்கு உண்டு.
நீங்கள் ஆடி, ஓடி சுற்றுவதால் அந்த தாக்கம் பள்ளி, கல்லூரி படிக்கின்ற காலங்களில் தெரியாமல் இருக்கலாம்.
நகர்ப்புறங்களில் வாழும் பெரும்பாலான மாணவர்கள் கல்லூரிகளுக்கு வரும்போது காலை உணவு உண்ணாமல் தான் வருகிறார்கள். 11.30 மணிக்கு இடைவேளையில் கடைக்கு சென்று ஒரு சமோசா அல்லது ஏதேனும் பலகாரங்களை சாப்பிடுகிறார்கள்.
காலையில் ராஜாவைப் போல், மதியம் சேவகனைப் போல், இரவில் யாசகனைப் போல் சாப்பிட வேண்டும் என்று பழமொழி ஒன்று உண்டு.
நமது உணவு முறை இடைவெளி நேரங்களை கணக்கிட்டு பாருங்கள்.
காலை 9 மணிக்கு காலை உணவு.
மதியம் 2 மணிக்கு மதிய உணவு.
இரவு 9 மணிக்கு இரவு சாப்பாடு சாப்பிடுகிறோம். இந்த நேரங்களில் கொஞ்சம் முன்பின் இருக்கலாம்.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இருக்கின்ற கால இடைவெளி 5 மணி நேரம்.
மதிய உணவிற்கும் இரவு உணவிருக்குமான கால இடைவெளி 7 மணி நேரம்.
இரவு உணவிற்கும் காலை உணவுக்குமான கால இடைவெளி 12 மணி நேரம்.
பகலில் தண்ணீர் ஜூஸ், டீ, வடை போன்ற பலகாரங்களை சாப்பிடுகிறோம். இரவு படுக்கும் போது வெறும் வயிற்றோடு படுத்து வெறும் வயிற்றோடு காலை எழுந்திருக்கிறோம்.
நீங்கள் காலை உணவை தவிர்ப்பதால் கிட்டத்தட்ட 16 மணி நேரம் வயிறு காலியாக இருக்கிறது.
இதில் வாய்வு சம்பந்தமான உணவு வகைகளை நாம் உட்கொள்ளும் போது, அதன் பாதிப்பை ஐந்து முதல் ஆறு வருடங்களில் எதிர்கொள்ள நேரிடுகிறது.
சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது வயிற்று வலிக்கான அடிப்படை காரணம் என்பதைத் தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அதுபோல் நாகரீகம் என்ற பெயரில் தலைக்கு எண்ணெய் தேய்க்காமல் சுற்றுவது இன்றைய இளைய தலைமுறைகளிடம் அதிகம் அதிகரித்திருக்கிறது.
நமது முன்னோர்கள் தலைக்கு ஏன் எண்ணெய் தேய்க்க சொன்னார்கள் தெரியுமா?
நாம் தொடர்ந்து ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது நாக்கு வறண்டு விடும். தண்ணீர் குடிப்போம். தண்ணீர் குடித்தவுடன் நா வறட்சி சரியாகிவிடும் தொடர்ந்து பேசுவோம்.
மின்விசிறி சுற்றிக் கொண்டே இருக்கிறது. துருப் பிடித்தால் அதற்கு எண்ணெய் ஊற்றுவோம். வீடுகளில் பூட்டு தாழ்பாள்கள் சரியாக திறக்கவில்லை என்றால் எண்ணெய் போடுவோம்.
இதே போன்று தான் நம்முடைய ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் மூளை இயக்கிக் கொண்டிருக்கிறது. காலில் முள் குத்தியது என்றால் இந்த செயல் மூளைக்கு சென்று இந்த இடத்தில் வலி ஏற்பட்டிருக்கிறது என்பதை உணர்த்தும் என்று சிறுவயதில் படித்திருப்போம்.
மூளை 24 மணி நேரமும் சுழன்று கொண்டே இருக்கிறது.
தொடர்ந்து நாம் எண்ணெய் தேய்ப்பது மூளையின் செயல்பாடுகளை அதிகரிக்க செய்கிறது.
நாம் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதற்கு தவற விடும்போது, அதிக பயன்பாட்டை சுமந்த ஒரு வண்டி தேய்மானம் ஏற்பட்டதற்கு பின் அதில் கரகர என்று சப்தம் வருவதைப் போல் நாம் அதிகம் யோசித்து யோசித்து நம்முடைய மூளையின் செயல்கள் அதிகமாகி கரகர என்ற சத்தம் தலைவலியாக மாறுகிறது.
அதன் விளைவு?
அடுத்த வாரம் தொடரும்…
முனைவர் மு. பக்கீர் இஸ்மாயில்
இணை பேராசிரியர், பொருளாதார துறை
புதுக்கல்லூரி, சென்னை – 600 014
கைபேசி: +91 9600094408