வலியோடு எழுதுகிறேன் - II

வலியோடு எழுதுகிறேன் – 2

என் அன்பு நிறைந்த மாணவர்களுக்கு,

உங்கள் இளம் வயதில் உங்கள் உடலையும் உள்ளத்தையும் சரியாகப் பேணாததின் விளைவு என்ன தெரியுமா?

உங்களுக்கு வயது சுமார் 30ஐ தாண்டும்போது தலைவலி, வயிற்றுவலி போன்ற நோய்களால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்பதை நீங்களே ஏற்றுக் கொள்ளத்தான் செய்வீர்கள்.

சுமார் 60 வயதுடைய உங்கள் தந்தை செய்கின்ற‌ வேலையை உங்களால் செய்ய‌ இயலவில்லை.

உங்களைவிட சுமார் 30 வயதுடைய பெரியவர்கள் செய்கின்ற பணிகளை உங்களால் செய்ய இயலவில்லை.

மூன்று மாடி ஏறுவதற்குள் “அப்பா! என்ன இப்படி மூச்சு வாங்குவது” என்று மூச்சை இழுத்துக் கொண்டே வார்த்தைகளை வெளியிடுகிறீர்கள்.

ஆக்கபூர்வமான சிந்தனைகளை செயல்படுத்த துடிக்கின்ற நீங்கள், உங்கள் உடல் வலிமையையும், உழைப்பையையும் உங்கள் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் தேசத்திற்கும் கொடுக்கத்தானே வேண்டும்.

உங்களின் ஆற்றலே உங்கள் அறிவும் உடல் உழைப்பும்தான்.

தற்போது நீங்கள் கடைப்பிடிக்கின்ற உங்களது உணவு முறையும் தூக்கமுறைகளும் உங்களுடைய முன்னேற்றத்திற்கான தடைகள் என்பதை எப்போது உணரப் போகிறீர்கள்?

தலைவலி வந்தால் இஞ்சி கசாயமும், வரட்டு இருமல் வந்தால் நான்கு மிளகு, கொஞ்சம் அரிசியை இரவில் தூங்குவதற்கு முன் மென்று விழுங்குவதும் மூலிகைகளை உணவாகக் கொண்ட ரசம், கருவேப்பிலை, உளுந்து என நமது சமையல் முறையின் அடிப்படையே மருத்துவம் தான்.

வயிற்று வலி (அல்சர்) வந்தால் மாதுளம் பழத்தை அதன் தோலோடு சேர்த்து அரைத்து கொஞ்சம் துவர்ப்போடு அருந்தி வந்தால் வயிற்று வலி காணாமல் போகும் என்ற யதார்த்தம் இன்றைய இளைஞர்களின் புரிதல்களுக்கு அப்பாற்பட்டதாய் இருக்கிறது.

நமது உடல் அமைப்பின் அடிப்படையான பாங்கும் அதன் அமைப்பும் தெரியாமல் விரைவுக் கலாச்சாரத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறோம்.

உடல் சார்ந்த பொறுப்புகளும் உள்ளத்தை பக்குவப்படுத்துவதற்கான தெளிவும் இல்லாதவர்களாய் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று.

கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் என் அன்பு நிறைந்த மாணவ கண்மணிகளே!

உங்கள் வயதைவிட, மூன்று அல்லது நான்கு வயது அதிகமான உங்கள் நண்பர்கள் உறவினர்களிடம் அவர்கள் உடல் சார்ந்த பிரச்சனைகளை கேட்டுப் பாருங்கள். கதை கதையாய் சொல்வார்கள்.

உனது தாத்தா, உடன் பிறந்தவர்கள், உனது அப்பா, அம்மா, உடன் பிறந்தவர்கள், உனது சகோதர சகோதரிகள், குழந்தைகளின் எண்ணிக்கையை கணக்கிட்டு பார்த்தால் உடலையும் உள்ளத்தையும் பக்குவப்படுத்துவதற்கான அவசியத்தை தெரிந்து கொள்ள முடியும்.

இன்றைக்கு ‘குழந்தை பெறுதல்’ என்பதற்கான அர்த்தம் என்னவென்று தெரியவில்லை?

ஆனால் நமது முன்னோர்களின் அகராதியில் ‘குழந்தை பெறுதல்’ என்பது அவர்களுக்கான தவம்.

எனது குழந்தை என்பது ‘எனது வாழ்வியலை நாளை வாழப்போகும் எனது வரலாறு’.

ஒருகணவன் மனைவிக்கு எட்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தும் அனைத்து குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து பேரன், பேத்திகளோடு ஒரே கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்த மகத்தான மண் இது.

ஒரு காலகட்டத்தில் பல குழந்தைகள் இருந்து தற்பொழுது இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறுவது என்பது சாத்தியமில்லாதது என்ற‌ சூழலில் குழந்தை பெறுதல் என்பதை உடல்ரீதியாக சிந்திப்பதை விட உறவுரீதியாக சிந்தித்துப் பாருங்கள்.

உங்கள் தந்தையுடன் பிறந்தவர்கள் மூன்று பேர் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு அண்ணன், ஒரு தம்பி, ஒரு தங்கை.

அப்பா உடன்பிறந்தவர்களை பெரியப்பா, சித்தப்பா, மாமி, அத்தை என்று அழைப்போம்.

இன்றைய கால சூழலில் ஒருவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் மட்டும் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த ஆண் குழந்தைகளில் ஒருவருக்கு திருமணமாகி அவருடைய குழந்தைக்கு பெரியப்பா இருக்கும். சித்தப்பா இருக்காது. அத்தை, மாமி என்ற உறவு முறையே இல்லாமல் போய்விடும்.

அம்மா, அப்பா, தம்பி, தங்கை, அண்ணன், அக்கா, மாமா, அத்தை, மச்சான், மச்சினன், மாப்பிள்ளை, பெரியம்மா, சின்னம்மா, பெரியப்பா, சித்தப்பா, சகலை, அண்ணி, கொழுந்தியா, கொழுந்தனார், நங்கியா, நாத்தனார், மாமனார், மாமியார், அம்மாயி, அப்புச்சி, பாட்டன், பாட்டி, கணவன், மனைவி, ஓரகத்தி என்ற உறவுகள்.

பேரன், மகன், அப்பன், பாட்டன், பூட்டன், ஓட்டன் என்று ஆறு தலைமுறைக்கான பெயர்களும் அதற்கான காரணங்களை புரிந்து கொள்வதற்கான அம்சங்களும் இப்பொழுது குறைந்து வருகின்றன.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இதே மண்ணில் பேசப்பட்ட எத்தனையோ உறவு முறைகள் இன்று காணாமல் போனதற்கும் நமது உடலமைப்பை பேணாததற்குமான தொடர்பு ஆய்வு செய்யப்பட வேண்டும்.

உங்கள் உடல் என்பது உங்களுக்கான சொத்து மட்டுமல்ல; அது உங்கள் குடும்பத்திற்கான உங்கள் தலைமுறைக்கான சொத்து என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

கல்லூரியில் படிக்கின்ற மூன்றாண்டு ஆட்டங்களுக்கு பின்னால் உங்கள் உடல் உங்களுக்கு ஒத்துழைப்பதில்லை என்ற இளைய தலைமுறைகளின் மனக்குமுறல்கள் வேதனையை ஏற்படுத்திய வலியோடு இந்த கட்டுரையை எழுதும் சூழலுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறேன்.

‘மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும்; பின்னர் இனிக்கும்’ என்ற பழமொழிக்கேற்ப உங்கள் உடலை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறினால்,

‘இதோ பெருசு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிருச்சு!

போங்க சார், உங்க வேலைய போய் பாருங்க சார்!

எங்க உணர்வுகள் எல்லாம் உங்களுக்கு புரியாது’ என்று சொல்கின்றீர்கள்.

அவசரமாக அனைத்தையும் அனுபவித்துவிட வேண்டும் என்று நினைக்காதீர்கள்!

நீண்ட வாழ்வை நிதானமாக வாழ வேண்டும் என்பதை உணருங்கள்!

ஆரோக்கியமான உடலே இன்ப வாழ்வின் அடிப்படை என்பதை உணருங்கள்!

பெரியவர்களின் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ள தயங்குகின்ற சூழலில் வலியோடும் வழியின்றியும் இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

முனைவர் மு. பக்கீர் இஸ்மாயில்
இணை பேராசிரியர், பொருளாதார துறை
புதுக்கல்லூரி, சென்னை – 600 014
கைபேசி: +91 9600094408