வலி தாங்கு! வழி பிறக்கும்!!

சமூகப் பொறுப்பை சிறப்பாகச் செய்வதின் மூலம் நாளைய தலைவர்களாக மாற இருக்கின்ற என் அன்பு நிறைந்த இளைய தலைமுறைனயிருக்கு வாழ்த்துக்களும் வரவேற்பும்!

மாணவர்களோடும் இளைஞர்களோடும் மனம் நிறைந்து பேசும் பழக்கம் உடையவன் நான். எனது குணத்தைக் கூர்தீட்ட வாய்ப்புகள் வழங்கிய இனிது இணைய இதழ் ஆசிரியர் அவர்களுக்கு நன்றிகள் பல.

ஏதோ உங்களுக்கு சில அறிவுரைகளை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உதித்தவை அல்ல இந்த வார்த்தைகள்.

ஒரு கிராமத்தில் சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு படித்து, இன்று உயர்ந்த பொறுப்பில் இருக்கும் மனநிறைவிற்குப் பின்பு, என் நன்றியைச் சொல்லும் உணர்வு கலந்த வார்த்தைகள் தான் இவைகள்.

சரி ! விஷயத்திற்கு வருவோம்.

கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் எனது மாணவர்களிடம்,

எதிர்காலத்தில் நீங்கள் என்னவாகப் போகிறீர்கள்?

என்று கேட்பேன்.

ஒவ்வொருவரும் நான் இந்த துறை சார்ந்த வல்லுநர்களாக மாறுவேன்; பேராசிரியராக வருவேன்; அரசு உத்யோகத்தில் இருப்பேன் என்று சொல்வார்கள்.

அதே கேள்வியை வேறு ஒரு கோணத்தில் அதாவது,

“நீ எவ்வளவு பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறாய்?”

என்று மூன்றாம் ஆண்டு நிறைவு செய்கின்ற மாணவர்களிடம் கேட்பேன்.

அப்படிக் கேட்பதற்கு இரண்டு மிக முக்கியமான காரணங்கள் உண்டு.

காரணம் 1

2020-ல் இந்தியா வல்லரசாகும் என்று கனவு கண்ட விண்வெளி நாயகன் அப்துல் கலாம் ஐயா அவர்கள் சொன்னதற்கான அர்த்தம் என்ன என்று கேட்கும் போது, நேர்மறை மற்றும் எதிர்மறை சிந்தனைகள் வந்து போகும். அதை அப்படியே தள்ளி வைத்து விடுங்கள்.

ஒரு ஆண் ஒரு பெண்ணிற்கான பக்குவ வயது 20. தன்னைப் பற்றியும் தனது குடும்ப சூழல்களையும் யோசிக்கின்ற வயது.

கல்லூரி முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு படிக்கின்ற போது இருக்கும் சண்டை சச்சரவுகள், ரூட் தல, கேங் லீடர், வழக்குகள், போலீஸ் போன்ற ஆட்டங்கள் எல்லாம் மூன்றாம் ஆண்டு நுழைந்த பின் சற்று குறைந்துவிடும்.

அப்பா, அம்மா திட்டும்போதெல்லாம் அதற்கான எதிர்வினையை அவர்களிடம் காண்பிக்காமல் செல்பவர்கள், 20 வயதை தொட்டவுடன் அந்த திட்டலில் வெளிப்படும் கோபத்தை, கதவை சட்டென்று சாத்துவதில் அப்பட்டமாய் அப்படியே தெரிவிப்பார்கள்.

“டேய்! அப்பாவுக்கு உடம்பு சரியில்ல. இனிமேல் நீதான் வீட்டை காப்பாத்தணும். அக்காவிற்கு கல்யாணம் முடிக்கனும்” என்ற தாயின் பழைய சொல்லாடல்கள் அவனின் மனக்கதவுகளை குத்தி விட்டு செல்லும்.

எனவே ஒரு ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணாக இருந்தாலும், 20 வயதில் தன்னைப் பற்றி, தன் குடும்பத்தைப் பற்றி, நினைத்து யோசிக்கின்ற பக்குவமும் மனோபாவமும் வந்துவிடும் என்பது யதார்த்தம்.

தன்னை பற்றி யோசித்து சமூக பொறுப்பிற்கான அடித்தளத்தில் இருந்து  2020-ல் இந்தியா வல்லரசாகிவிடும் என்ற கருத்தை இப்படியும் புரியத் தோன்றுகிறது.

‘நீ எவ்வளவு பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறாய்?’ என்ற கேள்வியின் பின்னணியில், தன்னைப் பற்றி யோசிக்கின்ற சமூக பொறுப்பு அவனுக்குள் வந்து விட்டதா என்றும் சோதித்துப் பார்ப்பேன்.

காரணம் 2

‘எதற்கு படிக்க வைக்கிறார்கள்?

எதற்கு படிக்கிறோம்?’

என்ற கேள்வியின் பின்னணியில் பணம் என்பது மையப் பொருளாய் மறைந்திருக்கும்.

கல்வியின் நோக்கமும் அதன் மூலம் வெளிப்படுகின்ற பயணத்தின் பாதையும் மாறிப் போனதால், இன்றைய சூழலில் பணத்தை அடிப்படையாக வைத்து பல விஷயங்கள் தீர்மானிக்கப்படுகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.

திரையில், தொலைக்காட்சியில், சமூக வலைத்தளங்களில் வாழ்க்கையை பார்த்த, நிஜ வாழ்க்கைக்கு அடியெடுத்து வைக்க போகும் எதிர்கால குடும்பஸ்தர்களிடம், “நீ எவ்வளவு பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறாய்?” என்ற கேள்விக்கு, “சார் 1 லட்சம், சார் 50,000” என்று பதில் வரும்.

“உன்னால் இவ்வளவு சம்பாதிக்க முடியுமா?”

என்று திருப்பி கேட்டால், திரும்பவும் அவன் சொல்லுவான்

“நிச்சயமாக முடியும் சார்”

நான் பணி புரியும் இடம் சென்னை என்பதால் பகுதி நேர வேலைக்கு செல்லும் மாணவர்களும் உண்டு. அதில் இரண்டு மூன்று மாணவர்களை எழுப்பி, பகுதி நேர வேலைக்கான சம்பளம் எவ்வளவு என்று கேட்டால், 5,000 ரூபாய், 10,000 ரூபாய், 15,000 ரூபாய் என்று அடுக்குவார்கள்.

பகுதி நேர வேலையில் அதிகபட்சமா௧ 15 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் மாணவனிடம் மீண்டும் கேட்பேன்.

“15,000 சம்பாதிப்பது என்பது இன்றைய சூழலில் ஈஸியா? கஷ்டமா?” என்று கேட்டால்,

தயங்கி தயங்கி கண் கலங்கி, “சார்! ரொம்ப கஷ்டம் சார்” என்று சொல்லுவான்.

அந்த தயக்கத்திற்குப் பின்னால் அவன் சந்திக்கின்ற வலிகளும் அவமானங்களும் அசிங்கங்களும் வார்த்தைகளில் விவரித்து விட முடியாது.

கற்பனை உலகில் நான் 1,00,000 சம்பாதிப்பேன் என்ற தைரியமாகப் பேசிய மாணவனின் மனமும் கற்பனையும், பகுதி நேர வேலை பார்க்கும் ஒரு மாணவனின் வார்த்தைகள் கேட்டு நொறுங்கிப் போய்விடும்.

‘அப்படியானால் கல்லூரி படிப்பை நிறைவு செய்கின்ற மாணவர்களால் 100,000 ரூபாய் சம்பாதிக்க முடியாதா?’ என்ற எதிர் கேள்வி உங்களுக்குள் எழுகிறது என்பதை நான் அறிவேன்.

ஆம்! நீங்கள் நினைப்பது உண்மை தான்.

இன்றும் கூட கல்லூரிபடிப்பை நிறைவு செய்ததும் மாதம் ஒரு லட்சம் இரண்டு லட்சம் சம்பளம் வாங்கும் மாணவர்களும் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.

உங்கள் வயதில் இருக்கும் ஒரு மாணவன் மாதம் 1,00,000 ரூபாய் சம்பாதிப்பதின் பின்னணியில் உள்ள அவனது கடுமையான உழைப்பு, நேர மேலாண்மை, விடாமுயற்சி, லட்சிய வெறி, சாதித்து காட்ட வேண்டும் என்ற வெறி போன்ற அனைத்து காரணிகளையும் உங்களால் செய்ய முடியுமா? என்று பொதுவாக கேள்வி கேட்டால், அமைதி தான் அந்த அறையை ஆளும்.

என்று ஆசைப்படுகின்ற உங்களுக்கு அதற்கான வழிகளும் வாய்ப்புகளும் இன்றைய சூழலில் அதிகம்.

நிஜ வாழ்க்கைக்குள் நுழையும் போது முட்களின் மீது நடந்தால் தான் ரோஜா போன்ற மன(ண)ம் நிறைந்த வாழ்க்கையை உங்களால் வாழ முடியும்.

நீங்கள் உங்கள் பொறுப்பை உணர்ந்து, நான் இன்னும் 5 – 6 ஆண்டுகளில் எல்லோரும் பாராட்டும் வண்ணம் உயர்ந்தே ஆக வேண்டும் என்ற உத்வேகத்தோடு புறப்படுங்கள்!

உங்களை அணைக்கவும் அரவணைக்கவும் ஆயிரம் கைகள் வரவேற்று நிற்கும்!

வாழ்த்துக்களுடன்
முனைவர் மு. பக்கீர் இஸ்மாயில்
இணை பேராசிரியர்
பொருளாதாரத் துறை
புதுக்கல்லூரி
சென்னை – 600014
கைபேசி: +91 96000 94408

2 Replies to “வலி தாங்கு! வழி பிறக்கும்!!”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.