வலை வீசிய படலம்

வலை வீசிய படலம் இறைவனான சொக்கநாதர் சுறாமீனாகத் திரிந்த திருநந்தி தேவரை வலை வீசிப் பிடித்து மீனவப் பெண்ணான உமையம்மையை மணந்ததைக் குறிப்பிடுகிறது.

சொக்கநாதரிடம் அன்பு கொண்டிருந்த மீனவத் தலைவனின் விருப்பத்தை நிறைவேற்றியும், கவனச்சிதறலாக இருந்த உமையம்மை, திருநந்தி தேவருக்கு தண்டனை அளிக்கவும் இத்திருவிளையாடல் நிகழ்த்தப்பட்டதாகக் கருதப்படுகிறது.

உமையம்மையின் கவனக்குறைவு, விநாயகர், முருகப்பெருமானின் செயல்கள், நந்திதேவரும், உமையம்மையும் சாபம் பெற்றது, மீனவத் தலைவனின் வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது, உமையம்மைக்கும், நந்திதேவருக்கும் சாபம் நீங்கியது ஆகியவை இப்படலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

வலை வீசிய படலம் திருவிளையாடல் புராணத்தின் ஆலவாய்க் காண்டத்தில் ஐம்பத்தி எட்டாவது படலமாக அமைந்துள்ளது.

உமையம்மை, திருநந்தி தேவரின் சாபம்

ஒருசமயம் கையாலத்தில் சிவபெருமான் உமையம்மைக்கு வேதத்தின் உட்பொருளை விவரித்துக் கொண்டிருந்தார். இறைவனாரின் பாடத்தைக் கவனிக்காமல் உமையம்மை கனவக்குறைவாக இருந்தார்.

இதனை அறிந்ததும் சிவபெருமான் கோபம் கொண்டு “உமையே, நான் சொல்லிக் கொண்டிருக்கும் வேதத்தினை தெரிந்து கொள்ள ஆர்வமின்றி கவனக்குறைவாக இருந்ததால் நீ படிப்பறிவு இல்லாத மீனவப் பெண்ணாக மாறக் கடவாய்” என்று சாபமிட்டார்.

இதனைக் கேட்டதும் “ஐயனே, தாங்கள் என்னுடைய பிழையைப் பொருந்தருளுங்கள். சாபத்திலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்” என்று வேண்டினாள்.

இறைவனாரும் “என்னுடைய பக்தனான மீனவத்தலைவனின் விருப்பத்தை நிறைவேற்ற இத்திருவிளையாடலை நிகழ்த்தினோம். இறுதியில் உன்னை வந்து யாம் மணம் செய்து கொள்வோம். அஞ்சற்க” என்று திருவாய் மலர்ந்தருளினார்.

உமையம்மையின் சாபத்தினை அறிந்த கணபதியும், கந்தனும் கையிலாயத்திற்கு விரைந்தனர். நந்திதேவர் தடுத்தும் இருவரும் கேளாது சிவபெருமானைக் கண்டு அங்கிருந்த வேதநூல்களை தூக்கி கடலில் வீசினர்.

இதனைக் கண்டதும் இறைவனார் நந்திதேவரிடம் “நீ கணபதியையும், கந்தனையும் முறையாகத் தடுக்காமல் கையிலாத்திற்குள் அனுமதித்தால் சுறாமீனாக மாறி கடலில் திரிவாய்” என்றார்.

இதனைக் கேட்டதும் நந்திதேவர் “ஐயனே, உங்களையும், கையிலாயத்தையும் பிரிந்து என்னால் இருக்க இயலாது. தயவுகூர்ந்து என்னைக் காப்பாற்றி அருளுங்கள்” என்றார்.

இறைவனார் நந்திதேவரிடம் “மீனவப் பெண்ணான உமையம்மையை திருமணம் செய்ய யாம் வரும்போது உன்னுடைய சாபம் நீங்கும்” என்று அருளினார்.

மீனவத் தலைவனின் அறிவிப்பு

இறைவனாரின் சாபப்படி உமையம்மை மதுரைக்கு கீழ்த்திசையில் இருந்த பாக்கம் என்னும் மீனவஊரில் புன்னைமரத்துக்கு அடியில் குழந்தையாகக் கிடந்து அழுதார்.

அம்மையின் அழுகுரல் குழந்தைப் பாக்கியம் இல்லாத மீனவத் தலைவனின் காதில் விழுந்தது.

மீனவத் தலைவன் அழுகுரலின் திசையில் சென்று குழந்தையைப் பார்த்ததும் ‘இக்குழந்தை எனக்கு சொக்கநாதர் தந்த பரிசு’ என்று எண்ணி குழந்தையை எடுத்துக் கொண்டு தன்னுடைய மனைவியிடம் கொடுத்து வளர்த்தான்.

நந்திதேவரும் சுறாமீனாகப் பிறந்து கடலில் வீசி எறியப்பட்ட வேதங்களை மீட்டு இறைவனாரிடம் தந்து விட்டு கடலில் திரிந்து கொண்டிருந்தார்.

அம்மையும் நாளடைவில் திருமணப் பருவத்தை எட்டிய குமரிப் பெண்ணானாள். கடலில் இருந்த சுறாவானது அங்கு மீன்பிடிக்க வரும் மீனவர்களின் வலையைக் கிழித்து, படகுகளைக் கவிழ்த்து தொந்தரவு செய்து வந்தது.

நாளுக்கு நாள் சுறாவின் தொந்தரவு அதிகமாகவே மீனவத் தலைவன் சுறாவினை அடங்கும் வீரனுக்கு தன்னுடைய பெண்ணை திருமணம் செய்து தருவதாக முரசு அறிவித்தான். தங்களுடைய உயிருக்குப் பயந்து யாரும் சுறாமீனை அடக்க முன்வரவில்லை.

சாபம் நீங்கப் பெறுதல்

இந்நிலையில் இறைவனார் அழகான மீனவ இளைஞனாகத் தோன்றினார். மீனவத் தலைவன் முன் சென்று “ஐயா, நான் வலை வீசி மீன்பிடிப்பதில் வல்லவன். என்னுடைய ஊர் மதுரையாகும். நான் சுறாவினை அடக்கி தங்களுடைய மகளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.” என்றார்.

இதனைக் கேட்டதும் மீனவத் தலைவன் “தம்பி நீங்கள் கூறுவது போல் அது ஒன்றும் சாதாரண மீன் இல்லை. பல வலைகளைக் கிழித்தும், கலன்களைக் ( படகுகளைக்) கவிழ்த்தும் உள்ளது அது. ஆதலால் அதனைப் பிடிப்பது அத்தனை சுலபம் இல்லை” என்றார்.

இதனைக் கேட்ட இறைவனார் “அது என்னுடைய பிரச்சினை. நீங்கள் வாக்களித்தபடி சுறாமீனை வெற்றி கொண்டால் நீங்கள் உங்களுடைய பெண்ணை எனக்கு திருமணம் செய்து தாருங்கள்” என்று கூறி சுறாமீனைப் பிடிக்கச் சென்றார்.

இறைவனார் தன்னுடைய உடலினைத் திருக்கி வலையை வீசி சுறாமீனைப் பிடித்தார். பின்னர் கரைக்கு அதனை இழுத்து வந்து மீவனத் தலைவனிடம் காண்பித்தார். மீனவத் தலைவனும் ஒப்பந்தம் செய்தபடி தன்னுடைய பெண்ணை மீனவனான இறைவனாருக்கு திருமணம் செய்வித்தார்.

பின்னர் மணமக்கள் பார்வதி பரமேஸ்வராக மீனவர்களுக்குக் காட்சியளித்தனர். சுறாமீனாக இருந்த நந்திதேவரும் சுயரூபம் பெற்று கையிலையை அடைந்தார். இறைவனார் சொக்கநாதராக மாறி அங்கையற்கண் அம்மையுடன் மதுரையம்பதியில் இனிது வீற்றிருந்தார்.

இப்படலம் கூறும் கருத்து

நாம் செய்யும் செயலில் கவனக் குறைவாக இருந்தால் அது துன்பத்தை விளைவிக்கும் என்பதே வலை வீசிய படலம் கூறும் கருத்தாகும்.

வ.முனீஸ்வரன்

 

முந்தைய படலம் இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம்

அடுத்த படலம் வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்

 

Comments are closed.