வல்லாரை

வல்லாரை – மருத்துவ பயன்கள்

வல்லாரை சிறுநீர் பெருக்கும்; மாதவிலக்கைத் தூண்டும்; உடல் ஆரோக்கியத்திற்கான மருந்தாகும். வாய்ப்புண், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு, விரை வீக்கம், காயம் படை ஆகியவற்றையும் வல்லாரை குணமாக்கும்.

வல்லாரை முழுத்தாவரமும் துவர்ப்பு, கைப்பு, இனிப்புச் சுவைகள் கொண்டது; குளிர்ச்சித் தன்மையானது. வல்லாரை ஞாபக சக்தியைப் பெருக்கும்; நோய் நீக்கி உடலைத் தேற்றும்; வியர்வையை அதிகமாக்கும்.

வல்லாரை சிறுசெடி ஆகும். சிறுநீரக வடிவமான இலைகள், அவற்றின் நுனியில் காணப்படும் வெட்டுப்பற்கள் போன்ற அமைப்பு, கை வடிவாக விரிந்துள்ள இலை நரம்புகள், நீண்ட இலைக்காம்பு மற்றும் கணுவில் வேர்களைக் கொண்டு தரையில் படரும் வளரியல்பைக் கொண்டு வல்லாரையை இனம் காணலாம்.

வல்லாரை வேர்த் தண்டுகள் பல்லாண்டுகள் வரை உயிர்வாழ்பவை. வல்லாரை பூக்கள், மிகச் சிறியவை, இளஞ்சிவப்பு நிறமானவை. ஒரு கொத்தில் தொகுப்பாக 3 முதல் 6 பூக்கள் வரை காணப்படும்.வல்லாரை பழங்கள், சிறியவை, 7-9 விளிம்புக் கோடுகளுடன் காணப்படும்.

ஈரமான பகுதிகளான ஆற்றங்கரைகள், ஓடைகள், ஏரி, குளக்கரைகள், வயல் வரப்புகள் மற்றும் களிமண் பாங்கான நிலங்களில் வல்லாரை பசுமையாக அடர்ந்து வளர்ந்திருக்கும். வல்லாரைக் கீரை நாம் அனைவரும் நன்கு அறிந்து உபயோகிப்படுத்த வேண்டிய மூலிகையாகும்.

மருந்துச்செடி வகைகளில் வல்லாரை முக்கிய இடம் வகிக்கின்றது. பிரம்பி, சரஸ்வதி, சண்டகி, யோசனவல்லி போன்ற தமிழ்ப்பெயர்களாலும் வல்லாரை பொதுவாக அழைக்கப்படுகின்றது.

வல்லாரை முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படும். வல்லாரை தாவரத்தின் சமஸ்கிருதப் பெயரான மண்டூகபரணி என்பது இதன் இலைகள் தவளையின் பாதம் போன்ற அமைப்புடையவை என்பதைக் குறிக்கின்றது.

வல்லாரை வளர்ப்பது மிகவும் எளிதானது. வேருடன் உள்ள ஒரு வல்லாரைக் கொத்தை நம் வீட்டுத் தோட்டத்தில் அல்லது தொட்டியில் நட்டால் சில தினங்களில் படர்ந்து வளரத் தொடங்கும். சாதாரணமாகக் கீரை வியாபாரம் செய்யும் நபர்களிடமும் வல்லாரை கிடைக்கும்.

எச்சரிக்கை: வலிப்பு நோய் உள்ள குழந்தைகளுக்கு வல்லாரையை உள்ளுக்குள்; சாப்பிடும் மருந்தாகக் கொடுக்கக் கூடாது. மேலும், இதை அளவுக்கு மீறி சாப்பிட்டால் தலைச்சுற்றல், தலைவலி ஆகிய உபாதைகளைத் தோற்றுவிக்கும்.

குழந்தைகளுக்கு ஞாபக சக்தி, அறிவுக் கூர்மை, சிந்தனைத் திறன் அதிகமாக, மூளை பலப்பட வல்லாரை இலைகளை நிழலில் உலர்த்தி, தூள் செய்து கொள்ள வேண்டும். 1 முதல் 2 கிராம் அளவு, தினமும், காலை, மாலை வேளைகள், ½ டம்ளர் பாலில் கலந்து உள்ளுக்குக் கொடுத்துவர வேண்டும் அல்லது பசுமையான 2 இலைகள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கொடுக்கலாம்.

வல்லாரைக் கீரையை நன்கு சுத்தம் செய்து, சாதாரணமாகக் கீரைச் சாம்பார் செய்யும் முறையில் சாம்பார் செய்து, வாரம் இரண்டு முறைகள் சாப்பிட நரம்புகள் பலமடையும்.

வீக்கம், கட்டிகள் மறைய வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி, தொடர்ந்து வீக்கம், கட்டி ஆகியவற்றின் மீது கட்டிவர விரைவில் குணம் ஏற்படும்.

வல்லாரை இலைச்சாற்றைப் பிழிந்து, சம அளவு நெய் சேர்த்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வர அடிபட்ட காயம், கொப்புளங்கள் குணமாகும்.

தலைமுடி அடர்த்தியாக வளர வல்லாரைச் சாறு ஒரு பங்கு, சுத்தமான நல்லெண்ணெய் ஒரு பங்கு, இரண்டையும் ஒன்றாகக் கலந்து, பக்குவமாகக் காய்ச்சி, நீர் சுண்டிய பின்னர் இறக்கி வைத்து, ஆறிய பின்னர் வடிகட்டி, கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்த வேண்டும். இதனை, கூந்தல் தைலமாகத் தினமும் தலையில் தடவிவர வேண்டும்.

தொழுநோய்க்கு மருந்து ஒரு பிடி வல்லாரை முழுத்தாவரம் அல்லது இலைகளை ½ லிட்டர் நீரில் கொதிக்க வைத்து, 100 மி.லி.யாக சுண்டக்காய்ச்சி, அதில் வேளைக்கு 50 மி.லி. அளவு உள்ளுக்குள் சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் இவ்வாறு சாப்பிடலாம். 2 மாதங்கள் வரை சிகிச்சையைத் தொடரலாம்.

தாவரத்தில் உள்ள ஆசியாட்டிகோசைடு எனப்படும் செயல்படும் மருந்துப் பொருள் தொழுநோயைக் குணப்படுத்துவதற்குக் காரணமாக உள்ளது. இவை, தோல், முடி, நகங்களின் வளர்ச்சியைத் தூண்டுவது ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.