வளையல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி

நாங்க பத்து பேரும் கம்மல் வாங்கியது பெரிய சந்தோசமா இருந்துச்சு. கனிக்கு தேர்க்கம்மல் வாங்க நான் கொடுத்த இரண்டு பைசாவ அவ எனக்கு திருப்பிக் கொடுத்தா.

இப்ப என்கிட்ட மொத்தம் ஐந்து பைசா மீதி இருந்தது.

‘காசு வச்சிருக்கவுக வளையல் வேண்னா, வாங்கிக்கலாம்’ன்னு சொர்ணம் சொன்னா.

கனிகிட்ட காசு இல்ல. அதனால அவ அமைதியா இருந்தா. நான் கனிகிட்ட ‘நான் வளையல் வாங்க உனக்கு காசு தர்றேன் கவலைப்படாதே’ன்னு சொன்னேன்.

கனி லேசா சிரிச்சா. உடனே ரெண்டு பேரும் சொர்ணத்தக் கூட்டிக்கிட்டு வளையல் கடைக்குப் போனோம். அங்க கண்ணாடி வளையல் இருந்துச்சு.

எனக்கு ரொம்ப நாளா கண்ணாடி வளையல் போடனும்முன்னு ஆசை. ஆனா எங்கம்மா எப்பவுமே ரப்பர் வளையல்தான் வாங்கிக் கொடுப்பா.

ரப்பர் வளையல் லேசுல உடையாது. அப்படியே உடைஞ்சாலும் காயத்த உண்டாக்காது. க‌ண்ணாடி வளையல் சட்டுன்னு உடைஞ்சி காயத்த உண்டாக்கிடும்.

நாம பார்க்கிற கரடுமுரடான காட்டு வேலைக்கு கண்ணாடி வளையல் சரிப்படாது. எனக்கு இது நல்லாத் தெரியும். இருந்தாலும் கண்ணாடி வளையல் வாங்கிப் போட்டுக்கனும்முன்னு ஆசை மட்டும் எனக்கு விடலை.

இன்னிக்கு எப்படியும் என் ஆசையை நிறைவேத்திக்கணும்முன்னு நினைச்சேன். கடைகாரர்கிட்ட என் கையோட அளவுக்கு கண்ணாடி வளையல் இருக்கான்னு கேட்டேன்.

அவரும் ஒருவளையல எடுத்துக் கொடுத்து போட்டுப் பார்க்கச் சொன்னாரு. கையில போட்டேன். வழக்கமா போடுற வளையல் அளவுல சரியா இருந்துச்சு.

உடனே சொர்ணம் ‘மங்கம்மா, நல்லா யோசிச்சு கண்ணாடி வளையல வாங்கு. இத வாங்கிட்டுப் போயி உங்கம்மாகிட்ட அடி வாங்காத’ன்னு சொன்னா.

‘இல்ல இல்ல எங்கம்மாவ சமாளிச்சிருவேன்னு’ நான் சொன்னேன்.

‘இப்ப நீ கையில போட்டுருக்குற அளவவிட கொஞ்சம் சின்னதா எடு. அதாவது கைக்கும் வளையலுக்கும் இடையேயான இடைவெளி குறைச்சலா இருந்தா கண்ணாடி வளையல் சீக்கிரமா உடையாது.’ன்னு சொன்னாள் சொர்ணம்.

கடைக்காரரும் சொர்ணம் சொன்ன அளவுல வளையல எடுத்துக் கொடுத்தாரு. கையில போட்டு சரி பார்த்ததும் எனக்கு ஒரு டசன் பச்சைக்கலர் கண்ணாடி வளையல்களும் கனிக்கு ஒரு டசனும் சிவப்பு கலர் கண்ணாடி வளையல்களும் வாங்கினோம்.

‘ரெண்டு கலர் வளையல்களில் ஆளுக்கு ஆறு வளையல்களை எடுத்துக்குங்க. ரெண்டு கலரையும் மாத்தி மாத்திப் போட்டுக்கலாம்.’ன்னு சொர்ணம் சொன்னா.

‘அதுவும் சரி’தான்னு ரெண்டு கலர்லையும் ஆளக்குப் பாதி வளையல்களை எடுத்துக்கிட்டோம்.

அதுக்கப்புறம் அந்தக் கடையிலேயே மஞ்சள், பச்சை, சிவப்புன்னு மூணு கலர்ல ஆளக்கு மூணு ரிப்பன் வாங்கினோம்.

ரெண்டு பேருக்கும் வளையல், ரிப்பன் வாங்கினது போக மீதி ரெண்டு பைசா என்கிட்ட இருந்தது. எங்ககூட வந்த மத்தவங்களும் வளையலும், ரிப்பனும் வாங்கினாங்க.

நாங்க அதுக்கப்புறம் பக்கத்திலிருந்து மிட்டாய் கடைக்கு போனோம். திருவிழாவுக்கு போயிட்டு திருவிழாக்கடையில கருப்பட்டி மிட்டாய் வாங்கிறது வழக்கம். அதனால திருவிழாவுக்கு வர்ற எல்லோரும் கட்டாயம் மிட்டாய் வாங்குவாக.

அதனால நாங்களும் மிட்டாய் கடைக்குப் போனோம். நான் ஒரு பைசாவுக்கு கருப்பட்டி மிட்டாய் வாங்கினேன். கருப்பட்டி மிட்டாய்யை ஓலைப் பெட்டியில போட்டுக் கொடுத்தாக. கருப்பட்டி மிட்டாய் வாசன ஆளத் தூக்குச்சு. மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு.

பொழுது சாய ஆரம்பிச்சிச்சு. ‘சாமிய இப்ப தேர்ல இருந்த இறக்கி மண்டபபடிக்கு கொண்டு வந்திருப்பாக. அங்க போவோம்.’ன்னு சொர்ணம் சொன்னா.

நாங்கள் மண்டபப்படிக்கு போனோம். சாமிய உள்ளே வச்சிருந்தாக. சாமியக் கும்பிட்டு வெளியே வந்தோம்.

சொர்ணம் ‘இப்ப கம்மல போடுவோம். நான் முதல போடுறேன்னு’ சொன்னா. அவ கம்மல போட்டதுக்கு அப்புறம் ஒவ்வொருத்தருக்கா போட்டுவிட்டா.

காது ஓட்டையில இருந்த காய்ஞ்ச வேப்பங்குச்சிய எடுத்திட்டு தேர்க்கம்மலப் போட்டா. லேசா வலி இருந்தது. காது குத்தினப்போ இருந்த வலியவிட வலி குறைவாகவே இருந்தது. கம்மலோட திருகாணிய போட்டுட்டு கம்மல லேசா சுத்தி விட்டா.

முதன்முதலா கம்மல் போட்டது எங்க பத்து பேருக்கும் ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. மறுபடியும் சாமியக் கும்பிட்டிட்டு வீட்டுக் கிளம்பினோம்.

பாதித் தூரம் வந்ததும் மழை கொட்ட ஆரம்பிச்சிருச்சு. மழையில சந்தோசமா நனைச்சிக்கிட்டு நடந்தோம்.

கனி சொன்னா ‘நாம எல்லோரும் இன்னைக்குதான முதன் முதலா கம்மல் போட்டிருக்கோம். அதான் இப்ப மழை பெய்யுது.’

எல்லோரும் கைதட்டிச் சிரிச்சோம்.

( பாட்டி கதை தொடரும்)

வ.முனீஸ்வரன்

One Reply to “வளையல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி”

  1. கிராமத்தின் சின்ன சின்ன ஆசைகள்; அவையே வாழ்க்கையின் தேவைகள்.

    பெண்களுக்கான அலங்கரிப்பு பொருள்கள் வாங்குவதில் நடக்கும் சம்பாஷனைகள் மற்றும் உணர்வுகள், அதை மீறிய எண்ண ஓட்டங்கள் அத்தனையும் இக்கதைக்குள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

    ஆசிரியரின் இளமைக் கால ரசித்தல்கள், உலகைக் கண்ட விதம் அனைத்தையும் அவர் பேனா இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கிறது.

    உணர்வை எந்த இலக்கியம் பேசுகிறதோ அந்த இலக்கியமே மேலான இலக்கியம் என்று அறிஞர்கள் கூறுவார்கள். அந்த வகையில் உணர்வு பூர்வமான கிராமத்தின் மைய நிலையாக இருக்கிற பெண்களின் வாழ்க்கை சித்தரிப்புகள் அழகுற கதையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

    ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.