வள்ளுவ,
உன் வாய்மையின் முரசினூடே
இந்தச் சின்னவனின் பெரு வணக்கம்
உன்மேல் எனக்கொரு சிறு சுணக்கம்!
நீ ஏன் மக்கட் பண்பிலா மானுடரை
மரம் போல்வர் என்றுரைத்தாய்?
மரமே!, மனிதர்க்கும் வரம் தரும் பரமே!
மனிதர்க்கும் மூத்தவனே
நீ தரும் வரமோ அளப்பரிது
நீயில்லையேல் நாங்களில்லை!
நீ பறவைக்கும் பரணமைத்தாய்
விலங்கிற்கும் வீடானாய்
சிறு பூச்சிக்கும் புகலிடமாய்
எமக்கும் வாழ்வளித்தாய்
அத்துணைக்கும் உணவளித்தாய்
நாங்கள் நச்சை (கரியமில வாயு) உமிழ்ந்தாலும்
நீ பசுமையாய் இருக்கின்றாய்
நாங்கள் சுவாசிக்க நல் (பிராண) வாயு தந்தாய்
நேசமுடன் வாசித்த புத்தகமு மாகிப் போனாய்
பயிர் செழிக்க மழையும் தந்தாய்
பஞ்ச பூதங்களையும் காக்கின்றாய்
இன்னா செய் தார்க்கும் இனியவையே செய்கின்றாய்
நீயே மர உடல் சுமந்த மனிதமுமானாய்
உனையேன் பண்பிலா மானிடர்க்கு ஒப்பினாரோ?
பொய்யாமொழியார்!
த.மாரிமுத்து
மன்னார்குடி