மனிதனுக்குப் பயனளிக்கும் பொருட்கள் வள ஆதாரங்கள் என்று அழைக்கப்படுகிகின்றன. அவை அனைத்தையும் நாம் நிலக்கோளம், நீர்க்கோளம் மற்றும் புவிக்கோளத்தின் மூலம் பெறுகின்றோம்.
வள ஆதாரங்கள்தான் ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வள ஆதாரங்களை அவற்றின் பயன்பாட்டினைக் கொண்டு பல பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
வளர்ச்சியின் அடிப்படையில் இவற்றை இயலாற்றல் வள ஆதாரங்கள் மற்றும் வளர்ச்சியுற்ற வள ஆதாரங்கள் என இரண்டாகப் பிரிக்கலாம்.
மக்களால் பயன்படுத்தப்பட முடியாத சூழலில் உள்ளவை இயலாற்றல் வள ஆதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக சைபீரியா, அண்டார்ட்டிகா போன்ற இடங்களில் காணப்படும் வள ஆதாரங்களை கூறலாம்.
மனிதர்களால் பயன்படுத்தக் கூடியவை வளர்ச்சியுற்றவை என்று அழைக்கப்படுகின்றன. நிலக்கரி, இரும்புத்தாது போன்றவற்றை எடுத்துக்காட்டாக கூறலாம்.
புதுப்பித்தல் அடிப்படையில் வள ஆதாரங்களை புதுப்பிக்க இயலாத அல்லது இருப்பு வளங்கள் என்றும் புதுப்பிக்கக் கூடிய அல்லது வற்றா வளங்கள் என்றும் இரண்டாகப் பிரிக்கலாம்.
புதுப்பிக்க இயலாத வளங்கள்
இவை தீர்ந்து போகக்கூடிய வளங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. ஏனெனில் இவற்றின் இருப்பு நிர்ணயிக்கப்பட்டவை ஆகும். இயற்கையில் இவ்வளங்கள் உருவாக எடுத்துக்கொள்ளும் கால அளவைக் காட்டிலும் வேகமாக நுகரப்படுகின்றன.
புவியின் கனிம சுரங்கங்களிலிருந்து ஒருமுறை எடுக்கப்பட்ட கனிம வளங்கள் எடுக்கப்பட்டவையே. அவற்றை மீண்டும் நம்மால் உருவாக்கவோ அல்லது திரும்பப் பெறவோ இயலாது. உலோக கனிமங்கள், உலோகமற்ற கனிமங்கள், எரி பொருள் கனிமங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
புதுப்பிக்கக்கூடிய வளங்கள்
இவை அதிகமாகக் காணப்படுவதுடன் தொடர்ந்து இயற்கையாகவே புதுப்பிக்கப்படுகிறது. இந்த வளங்களை நாம் பயன்படுத்திக்கொண்டே இருந்தாலும் அவை நமக்கு தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. எடுத்துக்காட்டு: காற்று நீர் மின்சக்தி, சூரிய ஆற்றல் உயிரி ஆற்றல். புதுப்பிக்கக் கூடிய வளங்கள் இன்று மிக முக்கிய வளங்களாகக் கருதப்படுகின்றன.
வள ஆதாரங்களின் பாதுகாப்பு
மனிதர்களின் வாழ்வு மற்றும் முன்னேற்றம் ஆகியவை புவியின் இயற்கை வள ஆதாரங்களைச் சார்ந்து இருக்கின்றன. எனவே அவற்றை பயன்படுத்துதல் அவசியம்.
மனிதர்கள் தங்களது வாழ்க்கைக்கு வள ஆதாரங்களையே சார்ந்து உள்ளனர். ஓர் இடத்தில் கிடைக்கப்பெறும் வள ஆதாரங்களைப் பொறுத்தே மனிதர்களின் தொழில்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. மனிதர்களின் பொருளாதார நடவடிக்கைகள் வள ஆதாரங்களுக்கு ஏற்ப இடத்திற்கு இடம் மாறுபடுகின்றன.
மனிதர்களால் புதுப்பிக்க இயலாத வள ஆதாரங்களை மிக கவனத்துடன் கையாள வேண்டும். ஏனெனில் அவற்றை திரும்பப் பெற இயலாது.
புதுப்பிக்கக் கூடிய வளங்களை முழுமையாகப் பயன்படுத்த சிறந்த ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அவசியமாகிறது.