வழிகாட்டி – சிறுகதை

வழிகாட்டி - சிறுகதை

அப்பள்ளியின் ஆசிரியர்களுக்கான அறையில் அமர்ந்து மும்மரமாகக் கட்டுரை நோட்டுகளைத் திருத்திக் கொண்டிருந்த காயத்ரி டீச்சர் அறைவாசலில் நிழலாடுவதைக் கவனித்து நிமிர்ந்து பார்த்த போது, பத்தாம் வகுப்பு ‘ஆ’ பிரிவின் மாணவன் சுரேஷ் தயங்கியபடி நின்று கொண்டிருந்தான்.

“என்ன சுரேஷ்? உள்ளே வா” என்ற டீச்சரின் உத்தரவைத் தொடர்ந்து, மெதுவாக அக்கம் பக்கம் பார்த்தபடி பவ்யமாகப் போய் நின்றான் சுரேஷ்.

அவன் ஏதோ சொல்ல வந்திருப்பதை அறிந்த காயத்ரி டீச்சர், “என்ன விஷயம் சுரேஷ்?” எனக் கேட்டார்.

“மேடம், தியாகுவோட அட்டகாசம் நாளுக்கு நாள் ரொம்பவும் அதிகமாயிக்கிட்டே இருக்கு. நேற்று நீங்க அவனைக் கூப்பிட்டுக் கண்டிச்சு வெளியே அனுப்பினீங்கல்லே? அதுக்காக அவன் என்ன செஞ்சுக்கிட்டிருக்கான் தெரியுமா டீச்சர்?” என்றவன் மேற்கொண்டு சொல்ல முடியாமல் தயங்கினான்.

“சும்மா சொல்லு சுரேஷ். தியாகு என்ன செஞ்சுக்கிட்டிருக்கான்?”

காயத்ரி டீச்சர் மீண்டும் கேட்டதும் சுரேஷ் சற்று நெருங்கிச் சென்று டீச்சரின் காதில் ஏதோ கிசுகிசுத்தான்.

சுரேஷ் சொன்னதைக் கேட்டு காயத்ரி டீச்சர் கொதித்தெழுந்து “நீ வகுப்புக்குச் செல். நான் இப்போதே எச்.எம்.மைப் பார்த்து அவனோட செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.” என்றவாறே எச்.எம். அறைக்குச் சென்று சுரேஷ் கூறியவற்றை விவரித்தாள்.

அடுத்த அரைமணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கபட்டது. பத்தாம் வகுப்பு ‘ஆ’ பிரிவு மாணவன் தியாகு ஒழுங்கு நடவடிக்கையின் பேரில் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டான்.

தியாகு பெயருக்காகப் பள்ளி வந்து கொண்டிருப்பவன். படிப்பில் ஆர்வமில்லாதவன். தான் சீரழிவது போதாதென்று சக மாணவர்களையும் கெடுக்க முயற்சிப்பவன். எந்த ஒரு ஆசிரியர், ஆசிரியையும் விட்டு வைக்காமல் ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டப்பெயர் வைத்திருப்பவன்.

விதவிதமான கேலிப்பெயருடன் ஆசிரிய ஆசிரியைகளை ஏளனம் செய்வான். வகுப்பு நடக்கும்போது பாடத்தைக் கவனிக்காமல் காகிதத்தில் ராக்கெட் செய்து ஆசிரியர் கரும்பலகை பக்கம் திரும்புகையில் அவரை நோக்கிக் குறிவைப்பான்.

அவனைப் பற்றி பல ஆசிரியர்கள் பலமுறை தலைமையாசிரியரிடம் புகார் செய்திருக்கிறார்கள்.

நேற்று காயத்ரி டீச்சர் வகுப்பில் பாடத்தைக் கவனிக்காமல் சக மாணவன் ஒருவனிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கையில் காயத்ரி டீச்சர் அவனை வகுப்பைவிட்டு வெளியேற்றியதைத் தொடர்ந்து, காயத்ரி டீச்சர் விந்தி விந்தி நடப்பதை சக மாணவர்கள் மத்தியில் தியாகு செய்து காட்டி கிண்டல் செய்ததைத்தான் சுரேஷ் காயத்ரி டீச்சரிடம் சென்று புகார் செய்திருந்தான்.

இரு தினங்களுக்குப் பிறகு ஓர் காலைவேளையில் காயத்ரி டீச்சர் வீட்டிலிருந்து பள்ளிக்குக் கிளம்பிவந்து கொண்டிருக்கும் சமயம் தியாகு வீட்டினருகே கும்பலாய் பலர் நின்று கொண்டிருந்தனர்.

ஆள் ஆளுக்குச் சப்தமாகக் கத்திப் பேசிக் கொண்டிருந்தனர்கள். காயத்ரி டீச்சர், அருகில் சென்று கவனித்தபோது தியாகு யாரோ ஒருபெண்மணியுடன் தகராறு செய்து கொண்டிருந்தான்.

“யாரைப் பார்த்து என்ன சொல்றே? எங்கம்மாவைப் பார்த்தா உனக்கு அவ்வளவு இளக்காரமா? உன்னை என்ன செய்கிறேன் பார்” என்றவன் கையில் ஏதாவது கிடைக்கிறதா என சுற்றும்முற்றும் பார்க்க இருவர் அவனைப் பிடித்து இழுத்துச் சென்றனர்.

அங்கு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவரிடம் காயத்ரி டீச்சர் என்ன என விசாரிக்கையில் அவர் கூறினார்.

“டீச்சர், தியாகுவோட அம்மா காய் வாங்கப் போய்க்கிட்டிருந்தாங்க. குட்டி யானை காய் வாங்கப்போகுது. நீ கிளம்பலீயாம்மா?ன்னு இவங்க மகன் கேட்டிருக்கிறான். அதுதான் தகராறு.”

தன் தாயைக் கேலி செய்ததும் தியாகுவுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்திருப்பதை அறிந்து கொண்ட காயத்ரி டீச்சர், தியாகுவின் அருகே சென்று அவனை சமாதானபபடுத்தி அந்த இடத்தைவிட்டு அகலச் செய்தார்.

தியாகுவின் தோளைத் தொட்டு, “தியாகு, உங்கம்மாவை இந்தப் பையன் கேலி செஞ்சான்னதுமே உனக்கு இவ்வளவு ஆத்திரம் வருதே. நீ எவ்வளவு பேரைக் கேலி செஞ்சிருக்கே? என்னையும் விட்டு வைக்கவில்லை. நீ கேலி செய்த அத்தனைபேரும் உன்னைப் போலவே, உங்கிட்ட பாய்ஞ்சு வந்தா உன் நிலைமை என்னவாகும்னு யோசிச்சுப் பார்த்தாயா?

மத்தவங்களை விமர்சிக்கிறது ரொம்ப சுலபம். அல்வா சாப்பிடற மாதிரிதான் இருக்கும். அதே சமயம் நாமே விமர்சிக்கப் படறப்போ, சாப்பிட்ட அல்வா ஜீரணிக்கப்படாமல் தர்ற அவஸ்தையை உணர வேண்டியிருக்கும். இனிமேலாவது ஒரு படிக்கிற மாணவனாய், லட்சணமாய், நாகரீகமாய் நடத்துக்கிற வழியைப் பாரு” என்றவர்

தியாகுவின் தாயையும், அந்தப் பெண்மணியையும் நோக்கி,

“பிள்ளைங்களை நல்லவிதமாய் வளர்த்து ஆளாக்கிறதுங்கிறது ஒரு கலை. உங்க பிள்ளைங்க பள்ளியில் எப்படி படிக்கிறாங்க, எப்படி நடந்துக்கிறாங்கன்னு பெத்தவங்களான நீங்க அப்பப்போ வந்து விசாரித்து தெரிஞ்சுக்கணும்.

இல்லேன்னா, வளர வளர மத்தவங்களுக்கு அவங்க வழிகாட்டியாக இருக்க மாட்டாங்க. மாறாகக் கெட்டுச் சீரழிந்து மத்தவங்களையும் வெட்டிச் சாய்கிற மண்வெட்டியாத்தான் இருப்பாங்க.

மாணவர்கள் சமுதாயத்தை சீர் செய்கிற வழிகாட்டியாய் இருக்கணுமே தவிர, வெட்டிச் சாய்க்கிற மண் வெட்டியாய் இருக்கக்கூடாது. போங்கம்மா… பிள்ளைங்களை இனிமேலாவது நல்ல விதமாய் வளர்த்து ஆளாக்கப்பாருங்க” என்றார் காயத்ரி டீச்சர்.

காயத்ரி டீச்சர் அறிவுரைகளைக் கேட்டு முதன்முறையாக தியாகு தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினான்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

Comments

“வழிகாட்டி – சிறுகதை” அதற்கு 2 மறுமொழிகள்

  1. V.chakrapani

    தலைவலியும் திருகு வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்!

  2. Premalatha.M

    அருமை

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.