அன்று காலை.
மரக்கிளையில் அமர்ந்தபடி அப்பகுதியை சுற்றும் முற்றும் வாக்டெய்ல் பார்த்துக் கொண்டிருந்தது.
அங்கு மரங்களும் செடி கொடிகளும் நிறைந்திருந்தன. ஆங்காங்கே விதவிதமான பறவைகள் கீச்சிட்டபடியே திரிந்து கொண்டிருந்தன.
அப்பொழுது ஆடலரசு அங்கு வந்து நின்றது.
வாக்டெய்லுக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் பொங்கியது.
அப்பொழுது,
“வாக்டெய்ல், இந்தாங்க உங்களோட பை?”
“ரொம்ப நன்றி ஆடலரசு. என்னோட பைய கூட காப்பாத்தியிருகீங்க. ரொம்ப நன்றி” முகமலர்ச்சியுடன் வாக்டெய்ல் கூறியது.
“இந்த பையினால தான் நீங்க மரக்கிளையில மாட்டிக்கிட்டு இருந்தீங்க. உங்கள தூக்கிட்டு வரும்போது இதையும் நம்ம நண்பர்கள் எடுத்துகிட்டு வந்தாங்க. இதுல என்ன இருக்கு?”
“நீங்க பைய பிரிச்சு பார்க்கலையா?”
“இல்ல வாக்டெய்ல்… இது உங்களோடைய பை. நாங்க எப்படி பிரிச்சு பாக்க முடியும்.”
ஆடலரசுவின் ஒழுக்கத்தை எண்ணி பெருமை கொண்டது வாக்டெய்ல்.
“இங்க நா கத்துக்க வேண்டிய பண்புகள் நிறைய இருக்கு ஆடலரசு.”
“சரி வாக்டெய்ல். இந்த பையில என்ன இருக்கு? நீங்களே சொல்லுங்க”
“நோட்டு புத்தகம்.”
“என்னது புத்தகமா?”
“ஆமாம்ப்பா… இந்த புத்தகத்துல எங்களோட பயண குறிப்புகள எழுதி வச்சுருக்கேன். இது எனக்கு ரொம்ப முக்கியம். என்னோட உயிரையும், புத்தகத்தையும் நீங்க காப்பாத்தியிருகீங்க. எப்படி நன்றி சொல்லறதுன்னே தெரியல.”
“சரிப்பா. உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கணும்.”
“என்னான்னு சொல்லுப்பா?”
“நீங்க எப்படி இவ்வளவு தூரம் சரியா வழிய கண்டுபிடிச்சு வறீங்க”
“சொல்றேன். நாங்க சரியா வழிய கண்டுபிடிக்க காரணம் ஒரு வகை புரதம் தான்.”
“புரதமா?”
“ஆமா ஆரடலரசு. எங்கள மாதிரி வலசை போகும் பறவைகளோட அலகு, மூளை அல்லது கண் பகுதியில கிரிப்டோகுரோம் (cryptochrome) –ன்னு ஒரு புரதம் இருக்கு. இந்த புரதம் தான் பூமியோட காந்த புலத்தை எங்களுக்கு உணர வச்சு செல்ல வேண்டிய திசைய எங்களுக்கு உணர்த்துது.”
“அப்படியா! ஆச்சரியமா இருக்கு…. இதுக்கெல்லாம் இயற்கைக்கு தான் நீங்க நன்றி சொல்லனும்.”
“இயற்கைக்கு நன்றி சொல்லனுமா?”
“ஆமா வாக்டெய்ல். இயற்கையோட அபார சக்தியினால தானே இந்த புரதம் உங்களுக்கு கிடைச்சுருக்கு, அப்ப அதற்கு தானே நன்றி சொல்லனும்.”
“ஆமா ஆடலரசு. நீங்க சொல்றது தான் சரி, இனி நானும் இயற்கைக்கு நன்றி சொல்லுவேன்.”
“நல்லது வாக்டெய்ல்.”
“ஆ..ஆ.. ஆடலரசு, இன்னொரு செய்தி. புவிகாந்த புலம் மட்டும் எங்களுக்கு திசைய காட்டறதில்ல… சூரியன் உதிக்கும் திசை, நட்சத்திர அமைப்பு மற்றும் நிலப்பகுதியில இருக்கும் அடையாளங்கள வச்சும் எங்களால வழிய சரிய கண்டுபிடிச்சிட முடியும்.”
“நீங்க சொல்ரத கேட்டா, எனக்கு ஆச்சரியமா இருக்கு வாக்டெய்ல்.”
“எனக்கும் உங்கள பர்த்தா ஆச்சரியமா தான் இருக்கு.”
“அட… அப்படி என்ன என்கிட்ட ஆச்சரியப்படுரா மாதிரியான விஷயம் இருக்கு.”
“என்ன இப்படி சொல்றீங்க…. உங்க குரல் வளமும், உடல் நிறமும் என்ன ஆச்சரியத்துல ஆழ்த்துது.”
“உன்மையாவா?”
“ஆமாம்ப்பா… என்னவிட அளவுல சின்னதா இருக்கீங்க, ஆனா உங்க அளவுக்கு என்னால குரல் எழுப்ப முடியாது.”
“ஆமாம்… நாங்க அடிக்கடி குரல் எழுப்புவோம்…. ரொம்ப சத்தமா தான்.”
“உங்க உடலோட கருப்பு மஞ்சள் நிறம் பளபளப்பா இருக்குது.”
“உம்ம்ம்ம் அதுக்கு காரணம் சில உலோகங்கள் தான் வாக்டெய்ல்.”
“ஓஓ…. உலோகங்கள்லாம் இருக்கா?”
“ஆமாம் வாக்டெய்ல்…. என்னோட இறகுகள் கருப்பா இருப்பதற்கு காரணம், கரிம சேர்மங்களோட இரும்பு, தாமிரம் மற்றும் குரோமியம் உள்ளிட்ட உலோகங்களும் குறைந்த அளவுல் இருப்பதுதான். மஞ்சள் நிறத்துக்கு காரணம் கோபல்ட் மற்றும் நிக்கல் உலோகம் தான்.”
“சிறப்பு ஆடலரசு. சரி நா இதுவரைக்கும் உங்க அம்மா அப்பாவ பார்க்கலையே. அவங்க எங்க?”
ஆடலரசு ஒன்றும் சொல்லவில்லை. வருத்தம் தொய்ந்த முகத்துடன் மெளனமாக இருந்தது.
“என்ன ஆச்சு ஆடலரசு?”
“எனக்கு அம்மா அப்பா இல்ல. நான் பொறந்த உடனே அவங்க இறந்துட்டாங்களாம். கனலி ஐயாவும் எங்க கூட்டத்தாரும் தான் என்ன வளத்தாங்க.”
“மன்னிச்சுக்கப்பா. உங்கள வருத்தப்படித்திட்டேன்.”
“பரவாயில்ல வாக்டெய்ல், சரி இந்தாங்க இத சாப்பிடுங்க.”
“இது பேரு என்ன? ரொம்ப இனிப்பா நல்லா இருக்கு.”
“இதுப் பேரு தேன். இது உணவு மட்டுமில்ல; மருந்தும் கூட”
“அப்படியா சிறப்பு தான். இது எங்க கிடைக்கும்?”
“மலர்கள்ல இருக்கும்.”
“என்னது மலர்கள்ல இருந்து தேன் எடுக்குறீங்களா?”
“ஆமா வாக்டெய்ல்.”
“சிறப்பு.”
“வாக்டெய்ல்…. நீங்க ஓய்வு எடுங்க. நான் போய் கனலி ஐயாவ அழைச்சிட்டு வரேன்.”
உடனே, ஆடலரசு அங்கிருந்து பறந்தது.
அப்பொழுது வாக்டெய்லுக்கு அதன் அம்மா அப்பாவின் நினைவு வந்தது. அவர்களையும், தலைவர் இருன்டினிடே மற்றும் ஸ்வாலோ கூட்டத்தாரையும் எண்ணி அது கண் கலங்கியது.
இறகுகளை இன்னமும் அசைக்க முடியாததால் கண்ணீரைக்கூட அதனால் துடைத்துக் கொள்ள முடியவில்லை. எனினும் கனலி ஐயாவையும் ஆடலரசுவையும் எண்ணி வாக்டெய்ல் ஆறுதல் அடைந்தது.
(பயணம் தொடரும்)
கனிமவாசன்
சென்னை
9941091461
drsureshwritings@gmail.com
இதைப் படித்து விட்டீர்களா?
Comments
“சொர்க்க வனம் 17 – வாக்டெய்லின் ஆறுதல்” மீது ஒரு மறுமொழி