சொர்க்க வனம் 15 – வாக்டெய்ல் உயிர் பிழைத்தது

இங்கு…

நான்கு மணிநேரத்திற்கும் மேலாக அந்த மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருக்கிறது வாக்டெய்ல். அதனிடத்தில் எவ்வித அசைவும் இல்லை.

பகல் பொழுது விடிய துவங்கிற்று.

அந்தப் பெரிய மரத்தின் மறுமுனையில் வசித்து வரும் ஆடலரசு என்ற ஊதாச் சிட்டு தனது உறக்கம் கலைந்து அந்த பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தது.

அப்படியாக மரத்தை சுற்றி வரும்பொழுது, வாக்டெய்ல் மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்தது ஆடலரசு.

முதலில் அது பயந்தது. காரணம் வாக்டெய்லின் உருவ அளவும் அதன் தோற்றமும் தான்.

பின்னர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டும் கிளையில் தொங்கிக் கொண்டிருந்த வாக்டெய்லுக்கு அருகில் எச்சரிக்கையுடன் சென்று பார்த்தது ஆடலரசு.

 

வாக்டெய்ல் அசைவின்றி இருந்ததால், அதற்கு உடனடி மருத்துவ உதவி தேவை என்பதை அது புரிந்துக் கொண்டது.

உடனே அக்கம் பக்கத்தில் இருக்கும் தனது நண்பர்களது இருப்பிடங்களுக்கு சென்று தகவலை கூறியது ஆடலரசு.

அதன் நண்பர்களும் சற்று அதிர்ச்சி அடைந்தன.

பின்னர் வாக்டெய்லை காப்பாற்றும் நோக்கில் அவை கூட்டமாக அங்கு பறந்து வந்தன.

வாக்டெய்லை கண்டவுடன் ஊதாச் சிட்டுகளுக்கு பரிதாப உணர்வு மேலெழுந்தது. தாமதமின்றி அவை செயல்பட தொடங்கின.

அவை எல்லாம் ஒன்று சேர்ந்து பெரும் முயற்சி செய்து கிளையிலிருந்து வாக்டெய்லை விடுவித்து தூக்கிக் கொண்டு பறந்தன. இரண்டு ஊதாச்சிட்டுகள் வாக்டெய்லின் பையை தூக்கிக் கொண்டு சென்றன.

சில நிமிடங்களுக்கு பிறகு அவற்றின் இருப்பிடத்திற்கு அவை வந்து சேர்ந்தன. அங்கிருந்த ஒரு பாதுகாப்பான பருத்த மரக்கிளையில் வாக்டெய்லை கிடத்தின.

 

அப்பொழுது….

“அடப்பாவமே…. இதுக்கு உயிர் இருக்கா இல்லையான்னு தெரியலையே?” என்று ஒரு ஊதாச்சிட்டு வருத்தப்பட்டு கூறியது.

“உயிர் இருக்குற‌ மாதிரித்தான் தெரியுது” என்று மற்றொரு ஊதாச்சிட்டு சொன்னது.

மற்றொரு ஊதாச்சிட்டோ சிறிதளவு தண்ணீரை எடுத்து வந்து வாக்டெய்லின் முகத்தில் தெளித்துப் பார்த்தது.

அப்படியும் வாக்டெய்லிடம் எந்த அசைவும் இல்லை.

“நான் போய் நம்ம கனலி ஐயாவ அழைச்சிக்கிட்டு வர்றேன். அவருக்கு தான் என்ன வைத்தியம் செய்யனும்னு தெரியும்” என்று கூறி அங்கிருந்து புறப்பட்டது ஆடலரசு.

நேரே கனலி (ஊதாச்சிட்டு) வசித்து வரும் கூட்டிற்கு ஆடலரசு வந்தது.

“ஐயா…ஐயா….” என்று அது அழைத்தது.

அமைதியாக கண் மூடி அமர்ந்திருந்த கனலி, தனது கண்களை திறந்து பார்த்தது.

“வா… ஆடலரசு, என்ன காலைலயே வந்திருக்கே?”

“ஐயா… உங்க உதவி தேவைப்படுது” என்றது சற்று பதற்றத்துடன்.

அப்பொழுது அதன் முகபாவனையிலிருந்து ஏதோ தீங்கு நிகழ்ந்திருப்பதை கனலி புரிந்து கொண்டது.

“சொல்லுப்பா” என்று கனலி கேட்க, நடந்தவற்றை அப்படியே கூறியது ஆடலரசு.

“சரிப்பா வா… போய் பார்க்கலாம்” என்று கூறி ஆடலரசுவுடன் விரைவாக புறப்பட்ட்து கனலி.

அதற்கிடையில் ஊதாச்சிட்டுகள் எல்லாம் வருத்தமுடன் வாக்டெய்லை சுற்றி நின்று கொண்டிருந்தன.

 

கனலி ஐயாவும் ஆடலரசும் அங்கு வந்தன. ஊதாச்சிட்டுகள் கனலி ஐயாவுக்கு மரியாதை செலுத்தின.

நேராக வாக்டெய்லின் அருகில் சென்றது கனலி. அதன் கண்களின் நிலையை உற்றுப் பார்த்தது. அதன் உடல்நிலையை நன்கு ஆய்வு செய்தது கனலி.

சுற்றி இருந்த ஊதாச்சிட்டுகளை பார்த்து, “இதுக்கு உயிர் இருக்கு” என்று கனலி கூறியது.

அதைக்கேட்டு ஊதாச்சிட்டுகள் மகிழ்ந்தன.

“ஆனா… வயித்துல இதுக்கு பிரச்சனை இருக்கு… இறகுகள்ள பெரிய காயம் இருக்கு… உடனே வைத்தியம் செஞ்சாகணும்” என்று கனலி  கூறியது.

ஊதாச்சிட்டுகளின் மகிழ்ச்சி உடனே மறைந்தது.

அப்பொழுது ஆடலரசுவை அழைத்து ஒருசில பச்சிலைகளையும் தேனையும் கொண்டு வரும்படி கூறியது கனலி.

உடனே ஆடலரசுவும் அதன் இரண்டு நண்பர்களும் அங்கிருந்து விரைந்து சென்றன. சிறிது நேரத்தில் கனலி சொன்னவற்றை அவை கொண்டுவந்து கொடுத்தன.

பச்சிலைகளின் சாறு மற்றும் தேன் ஆகியனவற்றின் கலவையை வாக்டெய்லுக்கு கொடுத்தது கனலி.

ஒரு மணிநேரமாக வைத்தியங்களை வாக்டெய்லுக்கு செய்துக் கொண்டிருந்தது கனலி.

வாக்டெய்லின் உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை.

 

கூடியிருந்த ஊதாச்சிட்டுகள் சோகத்துடன் கனலியையே பார்த்துக் கொண்டிருந்தன.

“நம்மால முடிஞ்ச வைத்தியத்தை செஞ்சிட்டோம். இன்னு எட்டு மணி நேரம் பொருத்துப் பார்ப்போம். அதுக்கப்புறமும் இது உடல்ல எந்த அசைவும் இல்லைன்னா ஒன்னும் பண்ண முடியாது. பாவம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தது.

சிறிது நேரம் கழிந்தது….

ஊதாச்சிட்டுகள் அங்கிருந்து கலைந்துச் செல்லத் துவங்கின. ஆடலரசு மனம் கசந்தது. வாக்டெய்லின் முகத்தை பார்க்க பார்க்க அதற்கு சோகம் அதிகரிக்க தொடங்கியது.

“இது எங்கிருந்து வந்துச்சு? இதுக்கு என்ன ஆச்சு? இதோட பெற்றோர்கள் எங்க இருப்பங்களோ? அவங்களோட நிலம என்னவாச்சோ?” என பற்பல கேள்விகள் ஆடலரசுவின் உள்ளத்தில் எழுந்தன.

முற்பகல் வேளை வந்தது. அதற்கு இயல்பாக எடுக்கும் பசி உணர்வு அப்பொழுது தோன்றவில்லை.

ஆடலரசுவின் நண்பன் அங்கு வந்தது. ” வா, உன்ன சாப்பிட அம்மா கூப்பிட்டாங்க”என்று அதன் நண்பன் கூற, “இல்ல நண்பா எனக்கு பசியில்ல” என்று கூறி அதனை எப்படியோ அனுப்பிவைத்தது ஆடலரசு.

 

நேரம் சென்றது. பிற்பகல் வேளையிருக்கும். தீடீரென வாக்டெய்லின் கால்கள் அசைந்தன. உடனே ஆர்வமுடன் அருகில் அமர்ந்திருந்த ஆடலரசு வாக்டெய்லை உற்று நோக்கியது. மீண்டும் வாக்டெய்லின் கால்கள் அசைந்தன.

மகிழ்ச்சியில் துள்ளியது ஆடலரசு. உடனே, அது தனது நண்பர்களிடம் வாக்டெய்லின் அசைவு பற்றிய தகவலை தெரிவித்துவிட்டு கனலி ஐயாவை அழைத்துவர சென்றது.

ஆடலரசுவை பார்த்ததும், “என்ன ஆச்சு?” என்று கனலி கேட்டது. “ஐயா, அந்த பறவையோட கால்கள் அசைஞ்சத நான் பார்த்தேன். அதான் உங்ககிட்ட சொல்லலாம்னு வந்தேன்” என்று மகிழ்ச்சியில் கூறியது ஆடலரசு.

“அப்படியா! ரொம்ப நல்ல செய்திதான். சரி வா, நேர்ல போய் பர்த்திடுவோம்” என்று கனலி ஐயா கூறியது.

சிறிது நேரத்தில் அவை வாக்டெய்லிடம் வந்தன. அதற்கிடையில் ஊதாச்சிட்டுகள் அங்கு கூடியிருந்தன.

மீண்டும் வாக்டெய்லின் உடல்நிலையை கனலி பரிசோதித்தது. “உடல்ல நல்ல முன்னற்றம் தெரியுது. இனி உயிருக்கு ஆபத்து இல்லை” என்று கனலி கூற ஆடலரசுவும் மற்ற ஊதாச்சிட்டுகளும் மகிழ்ந்தன.

“ரொம்ப நன்றி ஐயா” என்று ஆடலரசு கூற, “நம்மால முடிஞ்சத செய்திருக்கோம் அவ்வளவு தான்.” என்று கூறியது கனலி.

“ஐயா, இன்னும் ஏதாவது வைத்தியம் செய்யணும்மா?” என்று ஆடலரசு கனலியை  பார்த்துக் கேட்டது.

“இந்த மருந்த இன்னிக்கு இரவு இதுக்கு கொடுக்கணும். இன்னும் இரண்டு நாட்கள்ல இதோட உடல்நிலை சீராகிடும். ஆனா… இதால இப்பத்திக்கு பறக்க முடியாது” என்று கனலி  சொன்னது.

அதைக் கேட்டு ஆடலரசுவிற்கு ஒருபுறம் மகிழ்ச்சி தான். மறுபுறம், வாக்டெய்லால் பறக்க முடியாது என்பதால் அதற்கு வருத்தமும் தோன்றியது.

“சில வாரங்கள்ல காயம் குணமாயிடும்… அப்புறம் இந்த பறவையால பறக்க முடியும்” என்று கனலி  சொன்னவுடன், ஆடலரசுவுக்கு நிம்மதி பிறந்தது.

பின்னர் அங்கிருந்து கனலி  புறப்பட்டு சென்றது.

 

அப்பொழுது, “ஆடலரசு… நீ காலைல இருந்து ஒன்னுமே சாப்பிடலப்பா…. வா… வந்து சாப்பிடு… அதான் கனலி ஐயா சொல்லிட்டாருல… இந்த பறவைக்கு ஒன்னும் இல்லைன்னு” என்று அங்கிருந்து ஒரு ஊதாச்சிட்டு கூற, ஆடலரசும் சாப்பிட சென்றது.

அன்றைய பொழுது கடந்து சென்றது. இரவு கனலி ஐயா சொன்னபடியே மருந்துகளை வாக்டெய்லுக்கு கொடுத்தது ஆடலரசு.

அவ்வப்பொழுது வாக்டெய்லின் உடலில் அசைவுகள் தென்பட்டன.

மறுநாள் காலை…. சட்டென ஆடலரசு கண் விழித்தது. உடனே வாக்டெய்லின் அருகில் சென்று பார்த்தது. அப்பொழுது வாக்டெய்ல் கண் விழித்து சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தது.

சற்று தயக்கத்துடன் ஆடலரசு வாக்டெய்லின் அருகில் சென்று பார்க்க, வாக்டெய்லும் ஆடலரசுவை பார்த்தது.

வாக்டெய்லின் பார்வை, ‘நான் எங்கு இருக்கேன்?’ என்று கேட்பது போல் இருந்தது ஆடலரசுவுக்கு.

“உங்க உடல்நிலை சீராயிடும்” என்று ஆடலரசு கூற மெல்ல தனது கண்களை மூடி உறங்கியது வாக்டெய்ல்.

அங்கு, வாக்டெய்லின் அம்மா அழுகையை நிறுத்தியது. ஏதோ ஒருவித நம்பிக்கை அதற்கு ஏற்பட்டது. எப்படியும் வாக்டெய்ல் குட்டியை கண்டுபிடிச்சிடுவோம் என்று அதற்கு தோன்றியது.

(பயணம் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
9941091461
drsureshwritings@gmail.com

 

இதைப் படித்து விட்டீர்களா?

சொர்க்க வனம் 14 – குருவிக் கூட்டத்தின் தவிப்பு

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.