சொர்க்க வனம் 21 – ‍வாக்டெய்ல் கண்ட காட்சிகள்

சில நாட்கள் கடந்தன.

கனலி அதிகாலையிலேயே வந்து வாக்டெய்லின் உடல்நிலையை பரிசோதித்தது. வாக்டெய்லின் இறகுகளில் காயம் ஆறத் துவங்கியிருந்தது. உடலின் மற்ற பாகங்களில் இருந்த காயங்கள் எல்லாம் முழுவதுமாக ஆறியிருந்தன.

அதனால், வாக்டெய்லின் உடல்நிலை சீராகியிருப்பதை கனலி உறுதி செய்துக்கொண்டது.

வாக்டெய்லும் “வலி ஏதும் இல்லை” என்று கூறியது.

“வாக்டெய்ல், உன்னோட உடல்நிலை சீராகி இருக்கு” என்றது கனலி.

உடனே, ஆடலரசுவையும் கனலியையும் பார்த்து “இதுக்கு உங்களோட அன்பும், கனலி ஐயா தந்த மருந்தும் தான் காரணம்” என்றது வாக்டெய்ல்.

புன்னகையுடன், “உன்னோட மன உறுதியும் ஒரு காரணம்” என்றது கனலி.

இதனைக் கேட்டு, அருகில் இருந்த ஆடலரசு மகிழ்ச்சி அடைந்தது.

பின்னர், “சரி வாக்டெய்ல், சிறகுகள்ள இருக்கும் காயம் குணமாக இன்னும் சில நாட்கள் தேவைப்படும். இவ்வளவு நாட்களா நீ கூட்டுக்குள்ளேயே இருந்துட்ட. இனி மெல்ல நடந்து இந்த மரத்த சுற்றி பார்க்க முயற்சி பண்ணு. இப்போதைக்கு சிறகுகள மட்டும் அசைச்சிடாத. என்ன சரியா?” என்றது கனலி.

மலர்ந்த முகத்துடன் “சரி ஐயா, இன்னிக்கே முயற்சி பண்றேன்” என்றது வாக்டெய்ல்.

“நல்லது, ஆடலரசு துணையோட நீ மரத்த சுற்றி பார்க்கலாம்.” என்று கூறி அங்கிருந்து புறப்பட்டது கனலி.

சிறிது நேரத்தில் பகல் பொழுது வந்தது. காலை உணவை வாக்டெய்லும் ஆடலரசும் உண்டு முடித்தன.

“நண்பா, எனக்கு ஒரு முக்கிய வேலை இருக்கு. நான் போய் அத முடிச்சிட்டு வந்துடுறேன். அப்புறம் மரத்தை சுற்றிப் பார்க்கலாம்” என்று கூறி அங்கிருந்து ஆடலரசு பறந்து சென்றது.

“சரி” என்று கூறி கூட்டில் இருந்தது வாக்டெய்ல்.

காலையில் கனலி சொன்ன வார்த்தைகளால் மிகவும் உற்சாகம் அடைந்திருந்தது வாக்டெய்ல். ஆர்வம் அதிகரிக்க, தனிமையில் மரத்தை சுற்றிப் பார்க்க முடிவு செய்தது.

உடனே, கூட்டில் இருந்து வெளியே வந்து நின்றது வாக்டெய்ல். அந்தக் கூடு இருந்த மரக்கிளை மிகவும் பருத்து இருந்தது. அதிலிருந்து கீழ்நோக்கி ஒரு மரக்கிளையும், மேல் நோக்கி மற்றொரு கிளையும் பிரிந்து சென்றன‌.

“முதல்ல கீழபோய் பார்க்கலாம்” என்று எண்ணி, கீழ்நோக்கி சென்ற கிளையில் மெதுவாக வாக்டெய்ல் நடந்து சென்றது. அந்தக் கிளை நிலப்பகுதிக்கு சற்று உயரத்தில் இருந்தது.

மரக்கிளை நுனியில் வந்து நின்றது வாக்டெய்ல்.

அங்கு ஒரு குட்டி மான் புற்களை மேய்ந்து கொண்டிருப்பதை வாக்டெய்ல் பார்த்தது. இதுவரையிலும் மான் குட்டியை அது பார்த்ததேயில்லை. புதுமையாக இருந்ததால் தொடர்ந்து அந்த மான் குட்டியையே வாக்டெய்ல் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது.

குட்டி மான் மிகவும் அழகாக இருந்தது. அது ஆர்வமுடன் புற்களை மேயும் காட்சியும் வாக்டெய்லுக்கு பிடித்துப் போனது.

சட்டென, தொலைவில் இருந்த மான் குட்டியின் தாய் குரல் ஒலி எழுப்ப, அந்த குட்டி மான் நிமிர்ந்து பார்த்து ஓடி சென்று, அதன் தாயுடன் சேர்ந்து கொண்டது. அங்கு இன்னும் சில மான்களும் கூட்டமாக புற்களை மேய்ந்து கொண்டிருந்தன.

அப்பொழுது ஒரு புதுவித வாசனை அங்கு எழுவதை வாக்டெய்ல் உணர்ந்தது. அந்த வாசனை புற்களில் இருந்து வந்து கொண்டிருந்தது.

மான் குட்டி நுனி புற்களை மேய்ந்ததால் அறுபட்டு மீதமிருந்த அடிபுற்களில் இருந்து எளிதில் ஆவியாகும் பச்சிலை மூலக்கூறுகள் வெளிப்பட்டன. குறிப்பாக 3-எக்சினேல் எனும் ஆல்டிஹைடு மூலக்கூறே அந்த வாசனைக்கு காரணம். அந்த வாசனையும் வாக்டெய்லுக்கு பிடித்தது.

வாக்டெய்ல் மீண்டும் மான் கூட்டத்தை பார்த்து மகிழ்ந்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் மான் கூட்டம் அங்கிருந்து நகர்ந்தது.

பின்னர், மீண்டும் அம்மரக்கிளையில் ஏறி கூடு இருந்த பகுதியை நோக்கி நடக்க துவங்கியது வாக்டெய்ல்.

அப்பொழுது, மேலிருந்து ஒரு இலை வாக்டெய்ல் தலைமீது விழுந்தது. அதனால் மேல் நோக்கி பார்க்க, மரக்கிளை அசைந்து கொண்டிருந்தது.

‘மரம் எதையோ சொல்கிறதோ’ என்று எண்ணியவாறே நின்று கொண்டிருந்த மரக்கிளையைப் பார்க்க, முன்னே எறும்புகள் சாரை சாரையாக நடந்து சென்று கொண்டிருந்தன.

ஒவ்வொறு எறும்பும் செம்பழுப்பு நிறத்தில் பெரிதாக இருந்தன.

அத்தோடு பெரும்பாலான எறும்புகள் ஏதோ தழை போன்ற உணவு துணுக்குகளை சுமந்தபடி சென்று கொண்டிருந்தன.

எறும்பின் உடல் எடையை விட அதிகப்படியான எடை கொண்ட உணவு துணுக்குகளை அவை சுமந்து செல்வதைக் கண்டதும், வாக்டெய்லுக்கு ஆச்சரியம் மிகுந்தது.

எறும்புகள் தனது உடல் எடையைவிட சுமார் நூறு மடங்கு எடைக் கொண்ட பொருளை எளிதில் தூக்கும் சக்தி படைத்தவை என்ற செய்தி வாக்டெய்லுக்கு தெரியாது.

அதனால், சில நிமிடங்கள் அந்த எறும்புகளை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தது வாக்டெய்ல்.

பாதை பிறழாமல் எறும்புகள் சுறுசுறுப்பாக நகர்ந்து கொண்டிருந்தன. உணவு துணுக்குகளின் பாரம் தாங்க முடியாமல் தடுமாறிய எறும்புகளிடம் இருந்து உடனே மற்ற எறும்புகள் அந்த உணவு துணுக்குகளை வாங்கிக் கொண்டு நகர்ந்தன.

‘அவற்றிடம் தான் என்னே அன்பு! என்னே உதவும் மனப்பான்மை!’ என்று மேலும் வியந்தது வாக்டெய்ல்.

சிறிது நேரத்தில் எறும்புகள் எல்லாம் அந்த பாதையை கடந்து சென்று விட்டன.

அதனால் மேலும் முன்னேறி கூடு அருகே வந்து நின்றது வாக்டெய்ல்.

அப்பொழுது அவ்வழியே வந்த காகம், “வாக்டெய்ல், என்ன வெளிய வந்திருக்கே, ஏதாச்சும் உதவி வேணுமா?” என்று அக்கறையுடன் கேட்டது.

“இல்லங்க, சும்மா தான் வெளிய வந்தேன்” என்றது வாக்டெய்ல்.

“சரிப்பா” என்று சொல்லி பறந்துச் சென்றது காகம்.

பின்னர், மேல் நோக்கியிருந்த மரக்கிளையின் வழியே வாக்டெய்ல் நடந்து சென்றது.

மரக்கிளை சற்று சாய்வாகவே இருந்தது. கவனமுடன் அடியெடுத்து வைத்தது வாக்டெய்ல். அப்பொழுது அங்கு வந்த அணில், வாக்டெய்லின் பின்னே மெதுவாக நடந்து வந்தது.

‘ஒருவேளை தான் வழிமறித்து இருப்பதால் அணிலார் மெதுவாக பின்னே வருகிறதோ?’ என்று எண்ணியது வாக்டெய்ல். அதனால், சற்று வில‌கி நின்று, “நீங்க போங்க” என்று அணிலைப் பார்த்து சொன்னது வாக்டெய்ல்.

“இல்லப்பா கிளை சாய்வா இருக்கும், நீ நடக்கும் போது சறுக்கிட்டா, அதான் உனக்கு பாதுகாப்பா பின்னாடி வர்றேன். நீ மெதுவா மேல ஏறு” என்று கூறியது அணில்.

அதைக் கேட்டதும், வாக்டெய்லுக்கு ஆச்சரியமும், அந்த மரத்தில் வாழ்ந்து வரும் உயிரினங்களின் மீது இருந்த மதிப்பும் அன்பும் மேலும் கூடியது.

“ரொம்ப நன்றிங்க” என்று கூறி கிளையின் மீது ஏறி உச்சியை அடைந்தது வாக்டெய்ல். அதுவரையிலும் கூடவே வந்த அணில், பின்னர் மீண்டும் கீழறங்கிச் சென்றது.

வாக்டெய்ல் இப்பொழுது பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் நின்று கொண்டு அவ்விடத்தை சுற்றிச் சுற்றிப் பார்த்தது. எங்கும் பச்சை பசேலென காட்சியளித்தது. வனத்தின் எழிலில் வாக்டெய்ல் மயங்கியது.

அப்பொழுது தொலைவில் இருந்த மரத்தில் ஏதோ கூடு போன்றதொரு அமைப்பு தொங்கிக் கொண்டிருப்பதை வாக்டெய்ல் பார்த்தது.

இதுவரையிலும் கூடுகள் மரக்கிளையில் தொங்கியபடி வாக்டெய்ல் பார்த்ததே இல்லை. எனவே, குழப்பத்தில் ஆழ்ந்தது வாக்டெய்ல். அது அந்த கூடு போன்ற அமைப்பையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் தொங்கிக் கொண்டிருந்த அந்தக் கூட்டில் குருவி ஒன்று உள்ளே சென்றது.

அந்த அமைப்பு கூடு தான் என்பதை வாக்டெய்ல் உறுதி செய்துக் கொண்டது. அது அடுத்து ஆச்சரியம் அடைந்தது. அதற்கு காரணம், அந்தக் கூட்டின் அடிப்புறத்தின் வழியே அந்தக் குருவி நுழைந்து சென்றது தான்.

அந்த குருவிக் கூட்டையே தொடர்ந்து உற்று நோக்க, குருவி உள்ளே செல்வதும் வெளியே வருவதுமாக இருந்தது.

கார்மேகம் சூழத் தொடங்கியது. மழை பொழிவிற்கான அறிகுறிகள் தெளிவாய் தென்பட்டன.

அப்பொழுது அங்கு வந்த பச்சைக் கிளி, “வாக்டெய்ல், இப்ப உடல்நிலை பரவாயில்லையா?” என்று கேட்டது.

புன்னகையுடன் “நல்லா இருக்குங்க, இறகுகள மட்டும் இன்னும் கொஞ்ச நாளைக்கு அசைக்க வேணாமுன்னு கனலி ஐயா சொன்னாரு” என்றது வாக்டெய்ல்.

“ஐயா சொன்னாரா, அப்ப சரி” என்றது கிளி.

உடனே, “அங்க தூரத்துல ஒரு கூடு தொங்குதே, அது யாரு கட்டினாங்க?” என்று தனது முகத்தால் சுட்டிக் காட்டி வாக்டெய்ல் கேட்க, “எங்க? தெரியலையே” என்று கிளி கூறியது.

வாக்டெய்ல் மீண்டும் இடத்தை சுட்டிக்காட்ட, அந்தக் கூட்டை கிளி பார்த்துவிட்டது.

உடனே, “ஓ! ஓ! அது தூக்கணாங் குருவிகளோட கூடு, நீ இதுக்கு முன்னாடி பார்த்ததில்லே?” என்று கிளி கூறியது.

“இல்ல, இப்பதான் முதல்முறையா பாக்குறேன். கூட்டோட வாசப்படி கீழிருந்து மேல் நோக்கி இருக்கே, ஆச்சரியம் தான்” என்று வியந்தது வாக்டெய்ல்.

“ஆமா இதுமாதிரி வித்தியாசமான கூட்ட தூக்கணா குருவிகளால மட்டும் தான் கட்ட முடியும்” என்று கிளி கூறியது.

“சரிப்பா நீ என்னோட கூட்டுக்கு வரியா?” என்று கிளி கேட்க, வாக்டெய்லும் “ஊம்…. வர்றேன்” என்று வாக்டெய்ல் சொல்லியது.

அருகில் இருந்து மற்றொரு பாதுகாப்பான மரக்கிளையின் வழியாக வாக்டெய்லை அழைத்து சென்றது கிளி.

கிளியின் கூட்டில் அவை இரண்டும் பேசிக் கொண்டிருந்தன. அப்பொழுது மைனாவும் அங்கு வந்து அவற்றின் உரையாடலில் சேர்ந்து கொண்டது. அவை தொடர்ந்து பல்வேறு செய்திகளை பேசிக் கொண்டிருந்தன.

மதிய நேரம் வந்தது.

வெளியே சென்றிருந்த ஆடலரசு கூட்டிற்கு திரும்பியது. வாக்டெய்ல் அங்கு இல்லாததைக் கண்டு அது அதிர்ச்சி அடைந்தது.

உடனே வெளியே வந்து பார்க்க, புறா அவ்வழியே வந்தது. “என்னப்பா வாக்டெய்லயா தேடுற?” என்று கேட்டது.

“ஆமாம்பா வாக்டெய்ல் எங்க இருக்குன்னு தெரியுமா?” என்றுக் கேட்டது ஆடலரசு.

“ஊம்ம்… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் கிளியோட கூட்டுல வாக்டெய்ல் இருந்துச்சி” என்று புறா சொன்னது.

“நல்லதுப்பா நான் உடனே போய் பாக்குறேன்” என்று கூறி சட்டெனெ கிளியின் கூட்டிற்கு வந்தது ஆடலரசு.

ஆடலரசுவைக் கண்டதும், நேரம் கடந்திருப்பதை உணர்ந்தது வாக்டெய்ல். மேலும் நண்பனிடத்தில் சொல்லாமல் வந்ததும் நினைவிற்கு வந்தது. அதனால், “நண்பா, உங்கிட்ட சொல்லாம வெளிய வந்துட்டேன். மன்னிச்சுக்கோ” என்று வாக்டெய்ல் வருந்தியது.

“பரவாயில்ல நண்பா, பாதுகாப்பு தான் முக்கியம். நம்ம நண்பர்கள் தான் இருக்காங்களே?” என்று ஆடலரசு கூறியது.

பின்னர் “சரி நாம சாப்பிட போலாமா?” என்று ஆடலரசு கேட்டது.

அப்பொழுது, “ஆடலரசு நாம எல்லோரும் இங்கேயே சாப்பிடலாமே” என்று கிளி சொன்னது.

அவை எல்லாம் “சரி” என்று சொல்ல, கிளியின் கூட்டில் வாக்டெய்ல், ஆடலரசு மற்றும் மைனாவும் ஒன்றாக கிளியுடன் அமர்ந்து மதிய உணவை உட்கொண்டன.

சிறிது நேரம் கழித்து வாக்டெய்லை கூட்டிற்கு அழைத்துச் சென்றது ஆடலரசு. அங்கு, வாக்டெய்ல் தான் கண்டக் காட்சிகளை ஆடலரசுவிடம் விளக்கி கூறியது.

அன்று மாலைப் பொழுதில், மீண்டும் வாக்டெய்லை அழைத்துச் சென்று மரத்தின் மற்ற பகுதிகளையும் சுற்றி காண்பித்தது ஆடலரசு.

வாக்டெய்ல் சொர்க்க வனத்தை குறித்து மகிழ்ச்சி அடைந்தது.

(பயணம் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
9941091461
drsureshwritings@gmail.com

இதைப் படித்து விட்டீர்களா?

சொர்க்க வனம் 20 – கனலியின் முயற்சிகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.