வாசப்பூ

குண்டு மல்லி தோட்டத்துல
வண்டு ஒன்று புகுந்ததாம்
கொண்டைச் சேவல் காவல்காரன்
கொஞ்சம் தூக்கம் போட்டதாம்

வண்டு மெல்ல பாட்டுப்பாடி
வட்டமிட்டு ஆடுச்சாம்
குண்டு மல்லி மொட்டுகள
கொட்டி கொட்டி போனதாம்

‘அண்ணா இவன் அடிக்கிறானே’
அலறும் குரலைக் கேட்டுத்தான்
கண்விழிச்ச சேவல் ஒரு
கம்போட வந்ததாம்

சண்டித்தனம் பண்ணும் வண்டு
சட்டெனவே பறந்ததாம்
கொன்னுடுவேன் உன்னை என்று
கொண்டைச் சேவல் கூவுச்சாம்

என்ன இங்க சத்தமென
இலந்தை முள்ளும் வந்ததாம்
சின்ன வண்டு மீண்டும் அப்ப
சீண்டிப் பார்க்க இறங்கிச்சாம்

முன்னாடி இருந்த இலந்தை
முட்களிலே மோதிச்சாம்
கண்டபடி முள்ளடிக்க
கதறியேதான் பறந்ததாம்

வண்டு ஓடிப் போனதால
வாசப்பூவும் மலர்ந்ததாம்
பொன்னப் போல கிழக்கால
பொழுதும் மெல்ல விடிச்சதாம்

சின்னபசங்க நீங்களும்
சேட்டை செய்யும் போதெல்லாம்
வண்டு கதைய நினைக்கனும்
வாசப்பூவா மாறனும்

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.