“வாட்ச் அவசியமா உனக்கு?” ஆறாவது படிக்கும் தனது மகனைப் பார்த்து பாலு கத்தினான்.
“இப்ப எதுக்கு அவன சத்தம் போடுறீங்க?” என்றபடி பாலுவின் மனைவி வானதி கேட்டாள்.
“ஆறாவது படிக்கிறவனுக்கு வாட்ச் அவசியமா?” என்றபடி மனைவியையும் மகனையும் முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் பாலு.
“வாட்ச் தானே கேட்டேன். என்னமோ ஏரொப்ளேன் கேட்ட மாதிரி குதிக்கிறாரு?” என்று விசும்பினான் பாலுவின் மகன் முரளி.
“அப்பா கோவமா இருக்காங்க. சரியானதும் வாங்கித் தரச் சொல்றேன்” என்று மகனை சமாதானப்படுத்தினாள் வானதி.
வானதி மத்திய அரசில் பணியாற்றும் ஓர் இடைநிலை ஊழியர். பாலு சொந்தமாக எலட்ரிக்கல் கடை நடத்தி வரும் குட்டி முதலாளி.
‘நேரம், காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும். அப்போதுதான் முன்னேற முடியும்’ என்பது பாலுவின் கொள்கை. அக்கொள்கைக்கு வாட்ச் என்பது எதிர்ப்பதமானது என்பது அவனது கருத்து.
ஆதலால் பாலு வாட்ச் அணிய மாட்டான். வாட்ச் அணிந்திருப்பவர்களைப் பார்த்தாலும் பாலுவுக்கு கோபம் கொப்பளிக்கும்.
ஆகையால்தான் தன் மகன் வாட்ச் கேட்டதும், அவனையும் அறியாமல் சின்ன பையன் என்றும் பார்க்காமல் கத்திவிட்டான் பாலு.
பாலு-வானதி திருமண நிச்சயதார்த்தத்தின் போது வானதி, பாலுவிற்கு கோல்டன் செயின் வாட்ச் ஒன்றை பரிசாக பாலுவின் கைகளில் அணிவித்தாள்.
தன் மனைவியாக வரப்போகும் பெண்ணிடம் அப்போதைக்கு ஏதும் கூறாமல் அதனை அணிந்து கொண்டு, சிறிது நேரத்தில் அதனை கழற்றி பேண்டு பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டான்.
வானதி பாலுவிடம் “வாட்ச் எங்கே?” என்று கேட்டபோது “வாட்ச் செயின் அளவு பெரியதாக உள்ளதால் கையைவிட்டு கழன்று விடுகிறது. ஆதலால் கழற்றி விட்டேன்” என்று கூறி சமாளித்தான்.
அதன்பிறகு அந்த வாட்ச்சை அணியவில்லை. திருமணமான புதிதில் வானதி பாலுவிடம் தான் பரிசளித்த கோல்டன் செயின் வாட்ச்சை அணியச் சொல்லி இரண்டு மூன்று தடவை வற்புறுத்தினாள்.
அவள் கூறிய போது அமைதியாக இருந்த பாலு பின்னர் அவளிடம் தன்னுடைய கொள்கை பற்றி கூறி, இனிமேல் வாட்ச் அணியப் போவதில்லை என்றான்.
இந்த ஒருவிசயத்தைத் தவிர பாலுவிற்கும் வானதிக்கும் அவ்வளவாக கருத்து வேறுபாடுகள் வேறேதும் வருவதில்லை.
ஆனால் வானதி வாட்ச் விசயத்தில் பாலுவிற்கு நேர்மாறானவள். வெளியே செல்லும் சமயங்களில் கையில் வாட்ச்சை கட்டாயமாக அணிவாள்.
வானதி அப்பாவின் சேவையைப் பாராட்டி அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தாரால் அவருக்கு பரிசளிக்கப்பட்ட டைட்டன் வாட்ச்சை அவர் தன்னுடைய மகளுக்கு கொடுத்திருந்தார்.
ஆதலால் வானதி அதனை மிகப்பெரிய பொக்கிஷமாகப் பாதுகாத்தாள். தினந்தோறும் அலுவலகம் செல்லும்போது அதனை அவள் கையில் அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள்.
தந்தை தனக்கு கொடுத்த வாட்ச்சை கையில் அணிந்திருக்கும் போது அது, தந்தை தன்னுடன் இருப்பதைப் போன்ற உணர்வினை அளிப்பதாக பாலுவிடம் வானதி அடிக்கடி கூறுவாள்.
திருமணமாகி நான்கு வருடங்களில் வானதி அணிந்திருந்த வாட்ச் செயின் அறுந்து போனது. வானதியின் வாட்ச் செண்டிமன்ட் பற்றித் தெரிந்திருந்தும், தன்னுடைய கொள்கை காரணமாக வானதியின் வாட்ச் செயினை வேண்டா வெறுப்பாக மாற்றிக் கொடுத்தான் பாலு.
வானதியின் வாட்ச் சுமார் பதினைந்து வருடங்கள் உழைத்து களைத்து இறுதியில் நின்று போனது. அப்பா அளித்த வாட்ச் என்பதால் வானதி அதனை மீண்டும் செயல்படச் செய்ய எவ்வளவோ முயன்றும் இறுதியில் தோல்வியே மிஞ்சியது.
அதன்பிறகு பாலுவிடம் வாட்ச் வாங்கித் தரும்படி வானதி எத்தனையோ முறை கேட்டும் அவன் அதனை காதில் வாங்கிக் கொள்ளவுமில்லை. வாட்ச் வாங்கிக் கொடுக்கவுமில்லை.
அலுவலகத்திற்கு பஸ் பிடிக்கச் செல்லும்போதும், அலுவலகத்திலிருந்து வீடு திரும்ப பஸ் பிடிக்கச் செல்லும்போதும் கையில் வாட்ச் இல்லாததால் நேரம் பார்க்க மிகவும் சிரமப்பட்டாள் வானதி.
ஒருசில சமயங்களில் ஓரிரு நிமிடங்களில் பஸ்ஸை தவறவிட்டு நேரம் தவறி அலுவலகம் செல்லும்போது பாலுவின் கொள்கையால் தனக்கு ஏற்படும் கஷ்டத்தால் கணவனின் மீது வானதிக்கு கோபம் கொப்பளிக்கும்.
‘கணவன் தானே’ என்று மனதைத் தேற்றிக் கொள்வாள்.
இந்நிலையில் நேரத்தை அறிந்து கொள்ள ஓர் வழியைக் கையாண்டாள் வானதி. அதாவது தன்னுடைய கைபேசியில் நேரத்தை கண்டுகொள்வதே அது.
ஒருநாள் வானதியும் பாலுவும் சென்னை செல்ல ரயிலுக்குக் காத்திருந்தனர். அப்போது நேரத்தை அறிந்து கொள்ள வழக்கம் போல் தன்னுடைய கைப்பையிலிருந்து கைபேசியை எடுத்து மணியைப் பார்த்துவிட்டு பையில் வைக்கும்போது கைபேசி தவறியது.
இருபதாயிரம் ரூபாய் கைபேசி கீழே விழுவதைக் கண்டதும் வேகமாகச் செயல்பட்டு அதனை பிடித்தாள் வானதி.
அப்போது எதிர்பாராதவிதமாக வானதி கீழே விழுந்து காலில் முறிவு ஏற்பட்டது. மருத்துவமனையில் வானதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மயக்கம் தெளிந்து கண் விழித்த வானதி மலங்க மலங்க விழித்த பாலுவைப் பார்த்தாள்.
“‘சொல்றனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. நேரம் காலம் பார்க்காமல் உழைப்பதற்கு வாட்ச் அவசியமில்லை என்ற உங்கள் கொள்கை உங்களுடைய தொழிலுக்கு ஏற்றது.
நான் அலுவலகத்திற்கு செல்லும் போது குறிப்பிட நேரத்திற்குள் கட்டாயம் செல்ல வேண்டும். வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அவசரமாக அலுவலத்திற்கு பஸ் பிடிக்கச் செல்லும் போது சில நேரங்களில் ஒரு நிமிடத்தில் பஸ்ஸை தவறவிட்டு படும் அவஸ்தை மிகவும் கொடுமையானது.
உங்களிடம் வாட்ச் வாங்கித்தர கேட்ட போது நீங்கள் என்னுடைய சூழ்நிலை புரியாமல் உங்களுடைய கொள்கையால் மறுத்து விட்டீர்கள்.
ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும் தரமான வாட்ச்சை மறுத்ததன் விளைவே என்னுடைய கால்முறிவு. அவரவர் வேலைக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப தேவைகள் வேறுபடும்; அதில் வாட்சும் அடக்கம். புரிந்து கொள்ளுங்கள்” என்றாள்.
பாலு பதிலேதும் கூறாமல் அமைதியாக இருந்தான்.
மறுநாள் காலையில் வானதி கண்விழித்தபோது முரளி “அம்மா, இங்க பார்த்தீயா, வாட்ச் அவசியமா என்று கேட்ட அப்பா புது வாட்ச் வாங்கிக் கொடுத்திருக்கிறார்” என்றபடி தனது கையை நீட்டினான்.
“சூப்பர், நல்லா இருக்கு” என்றாள் வானதி. அப்போது பாலு பரிசுப் பொட்டலம் ஒன்றை வானதியிடம் நீட்டினான்.
ஆச்சர்யத்துடன் வானதி அதனைப் பிரித்த போது டைட்டன் வாட்ச் அவளைப் பார்த்து சிரித்தது.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!