வாதநாராயணன் இலைகள், கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. இவை, வாத நோய்களைக் குணமாக்கும்; பித்த நீரை அதிகரிக்கும்; நாடி நடையைப் பலப்படுத்தும்; உடல் வெப்பத்தை அதிகரிக்கும். மேலும், வீக்கத்தைக் கரைக்கும். அதிகமாக உட்கொண்டால் கழிச்சலுண்டாக்கும்.
இது வெளிர் மஞ்சள் நிறமான கட்டைகளைக் கொண்ட மென்மையான மரம். இலையுதிர்க்கும் வகையைச் சார்ந்தது. 12 மீ. வரை உயரமானவை. இரு சிறகாகப் பிரிந்த சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலைகளையும், உச்சியில், பெரிய பகட்டான, வெள்ளை மற்றும் மஞ்சளான பூக்களையும், தட்டையான, ½ அடி வரை நீண்ட காய்களையும் கொண்டது. ஒரு காயில் 10 விதைகள் வரை காணப்படும்.
ஆதிநாராயணன், வாதரசு, வாதமடக்கி போன்ற பெயர்களாலும் இது குறிப்பிடப்படுகின்றது. தமிழகமெங்கும், கிராமங்களில், வேலிகளில், சாலையோரங்களில் வளர்க்கப்படுகின்றது. புகைவண்டிப் பாதையோரங்களிலும் இவை பரவலாகக் காணப்படும். இலை, பட்டை ஆகியவை மருத்துவப் பயன் மிகுந்தவை.
வாதவலி, வீக்கம், கட்டிகள் குணமாக வாதநாராயணன் இலையைச் சமைத்துச் சாப்பிட வேண்டும். வாரம் இரண்டு முறைகள் இவ்வாறு பயன்படுத்தலாம். மேலும், இலையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி, வீக்கம், கட்டிகள் மேல் ஒற்றடமிட வேண்டும்.
கை, கால் குடைச்சல், வலி குணமாக வாதநாராயணன் இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, தினமும் காலையில் மட்டும் குடித்துவர வேண்டும்.
உடல்வலி குணமாக வாதநாராயணன் இலையைப் போட்டு கொதிக்க வைத்த நீரில் குளிக்க வேண்டும்.
குடல் வாயு குணமாக வாதநாராயணன் இலையை நிழலில் உலர்த்தி, தூள் செய்து கொண்டு, 3 கிராம் அளவு, தினமும் 1 வேளை வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
வாதநாராயண எண்ணெய்: வாதநாராயணன் இலைச்சாறு ஒரு லிட்டர், மஞ்சள் கரிசாலை, குப்பைமேனி, வெற்றிலை இவற்றின் சாறு ஒவ்வொன்றும் ¼ லிட்டர், வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் இவை ஒவ்வொன்றும் ½ லிட்டர், சுக்கு, மிளகு, திப்பிலி, கருஞ்சீரகம், சீரகம், மஞ்சள் வகைக்கு 20 கிராம் தூள் செய்து கொள்ள வேண்டும். பசும்பால் ½ லிட்டர் சேர்த்து, அனைத்தையும் ஒன்றாக்கி, பதமாகக் காய்ச்சி, 21 எருக்கம் பூக்களை நசுக்கி எண்ணெய்யுடன் கலந்து, மேலும் கொதிக்க வைத்து, வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை மேற்பூச்சாகத் தடவிவர பக்கவாதம், பாரிசவாயு, உடல் இழுப்பு, உடல் வலி ஆகியவை குணமாகும்.