நண்பகல்…
சூரியன் தனது கதிர்களைக் கடுமையாக்கிக் கொண்டிருந்தான்.
அந்தப் பகுதி சாலையின் பக்கவாட்டின் இருபுறங்களிலும் சற்று அகலமான பகுதிகள் காணப்பட்டன.
‘இனி காரை ஒரமாக நிறுத்தி உணவு உண்ணலாம்’ என ரமேஷ் முடிவு செய்தான்.
சாலையின் இடது பக்கமாய் காரை நிறுத்தி விட்டு, கண்ணாடிகளை ஏற்றி வெளியின் தூசு அண்டாமல் காரின் பஞ்சு சீட்டில் பதிந்திருந்தான். ஏ.சி. வெளியிலிருந்த வெப்பத்தைத் தடுத்தது.
இதுவரை கறுப்புச் சாலையை மட்டுமே கூர்மையாக பார்த்து வந்த ரமேஷ், கண்களின் இறுக்கத்தைத் தளர்த்தி இயல்பாக்கிய போது காருக்குள் பக்கத்து சீட்டில் வைத்திருந்த அவன் மனைவியின் ஸ்கேன் ரிப்போர்ட் கண்களில் பட்டது.
மனதிலே பலவித எண்ணங்கள் வந்து மோத ஆரம்பித்தன.
‘இன்னும் சிறிது நேரத்தில் மருத்துவரைச் சந்திக்க வேண்டும். ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்துவிட்டு மேலும் என்ன பரிசோரனைகளைச் செய்யச் சொல்வாரோ… அவற்றின் முடிவுகள் எப்படி இருக்குமோ?’ மனம் கலங்க ஆரம்பித்தது.
செல்போனில் மெசேஜ் அலார்ட் கேட்டு ரமேஷ் அதை திறந்து பார்த்தான். காருக்கு இன்னும் இரண்டு நாட்களில் இன்சுரன்ஸ் பிரீமியம் செலுத்த வேண்டும் என சொல்லியது.
‘வியாபாரத்திலே போட்ட பணம் இலாபத்தோடு வருமா?
பல வருடங்களாக நடந்துவரும் சொத்து வழக்கு இந்த ஆண்டிலாவது முடிவுக்கு வருமா?
இதுவரை கடன் கேட்காத நண்பன் ஒருவன் கேட்டானே என்பதற்காக முன்பின் யோசிக்காமல் பெருந்தொகையைக் கொடுத்தது எவ்வளவு தவறாகி விட்டது. வியாபாரத்தில் பெரிய இழப்பாம். அவன் பலரிடம் கடன் வாங்கி இருப்பது நேற்று தான் தெரித்தது.’
இந்த எண்ணங்களுக்கிடையில் காரின் மென்மையான சீட்டும் ஏ.சி.-யின் குளுமையும் சுகமான அனுபவத்தைத் தரவில்லை.
வாழ்க்கையில் தினம் தினம் என்ன நடக்கும் என்பது திகிலாகவே உள்ளது.
தற்போதெல்லாம் கொரோனாவிடமிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக ஹோட்டல் உணவுகளைத் தவிர்த்து விடுவது வழக்கம். எனவே வீட்டிலிருந்து கட்டிக் கொண்டு வந்த உணவுப் பொட்டலத்தைப் பிரித்தான்.
கை கழுவுவதற்காக ‘சோப்’பைத் தேடினான்; காணவில்லை. நேற்றைக்கே மனைவியிடம் எடுத்து வைக்க சொல்லி இருந்தான். அவள் என்ன செய்வாள் வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும் அவளது உடல் நலக்குறைவு அவளைத் தடுமாற வைத்திருக்கிறது.
‘சித்தி மகனின் திருமணத்திற்கு எந்த உடை உடுத்துவது? எந்த நகை அணிவது? உறவினர்களிடம் எதை எதைப் பேசுவது?’ என பல நாட்களாய் கற்பனை செய்து வைத்திருந்த அவளுக்குக் கடைசியில் அந்தத் திருமணத்துக்குக் கூட செல்ல முடியாத சூழ்நிலை அமைந்து விட்டது.
அவளுக்கு ஆபரேஷன் என்று முடிவாகிவிட்டது. அதை சிக்கல் இல்லாமல் எப்படி செய்வது என்பதைப் பற்றிதான் மருத்துவர் இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறார். அதற்குதான் புதிதாக மற்றொரு ஸ்கேன் எடுத்து வர சொல்லி இருந்தார்.
’சோப்’பைத் தேடிய அவனது கண்களில் காரில் கிடந்த சானிடைசர் பட்டது. ‘அதை கைகளில் சிறிது புரட்டி கையை கழுவி விடலாம்’ என்று எண்ணியபோது ‘அதில் கெமிக்கல் பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்குமே’ என தோன்றியது.
‘ஆனால் சோப்பிலும் கெமிக்கல் தானே இருக்கிறது’ என மனம் சமாதானம் செய்து கொண்டது. பொட்டலத்தை பிரித்து உணவை உண்ணத் தொடங்கினான்.
அப்போது சாலையின் மறுபுறம் ஓரத்தில் ஒருவன் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு எதிரே வந்து கொண்டிருந்தான்.
சைக்கிளில் ஆங்காங்கே பைகளையும் பொருட்களையும் தொங்கவிட்டிருந்தான்.
சைக்கிளின் முன்பக்க சக்கரத்தில் டியூப் இல்லை. சக்கரத்தின் விளிம்பைச் சுற்றி அந்த டயரை கட்டி வைத்திருந்தான். அதிலும் ஒரு சிறிய துண்டு பிய்ந்து போயிருந்தது. அதில் பழைய செருப்பு ஒன்றை வைத்துக் கட்டியிருந்தான்.
சைக்கிளில் தொங்க விட்டிருந்த பை ஒன்றில் பாய் ஒன்று சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.
அதன் அருகிலுள்ள பையில் அவனது துணிமணிகள் இருக்கக்கூடும். இன்னொரு இடத்தில் ஒரு ஜோடி பழைய செருப்புகள் தொங்கவிடப்பட்டிருந்தன.
இரண்டு மூன்று பிளாஸ்டிக் பாட்டில்களையும் கட்டி தொங்க விட்டிருந்தான். அது பலமுறை திரும்பத் திரும்ப பயன்படுத்தப்பட்ட பாட்டில்.
அதை சுற்றி ஒட்டப்பட்டு இருந்த லேபிளில் எழுத்துக்கள் அழிந்தும் நிறம் மங்கியும் இருந்தன. சொல்லப்போனால், அவனது மொத்த உடமைகளும் அந்த சைக்கிளிலேயே இருந்தன எனலாம்.
ஒரு அழுக்கு பேண்டும் சுமாரான சட்டையும் அணிந்திருந்தான். தோளில் ஒரு துண்டும் போட்டிருந்தான். சட்டைப்பை சற்று உப்பலாய் தெரிந்தது.
கையில் கடிகாரம் ஒன்றை கட்டி இருந்தான். அவனிடம் இருந்த விலை உயர்ந்த பொருளும் அதுவாகத்தான் இருக்கமுடியும்; அதை அவன் அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான்.
ரமேஷ் கார் நிறுத்தி இருந்த சாலையின் மறுபுறம் அவன் காருக்கு எதிரே வந்தவுடன் அவன் தனது சைக்கிளை ஸ்டாண்ட் போட்டான். ரமேஷ் இன்னும் அதிகமாய் அவனை கவனிக்க ஆரம்பித்தான்.
வேகவேகமாக சைக்கிளின் கேரியரில் வைத்திருந்த ஒரு பிளாஸ்டிக் கூடையில் இருந்து சாப்பாடு பொட்டலத்தை அவன் எடுத்தான். கூடவே அதிலிருந்து சாப்பாடு தட்டு ஒன்றையும் எடுத்தான்.
அது அவன் வழக்கமாக உணவு உண்ணப் பயன்படுத்தும் தட்டாக இருக்கலாம். அந்த உணவுப் பொட்டலம் கொரானா காலம் என்பதற்காக ஏதாவது தன்னார்வத் தொண்டு நிறுவனம் தந்ததாக இருக்கலாம் அல்லது ஏதாவது உணவகங்களில் இலவசமாக கிடைத்திருக்கலாம்.
அந்தப் பொட்டலத்தை மகிழ்ச்சியோடு பார்த்த வண்ணம் அந்தத் தரையில் உட்கார்ந்தான். சைக்கிளில் தொங்க விட்டிருந்த தண்ணீர் பாட்டிலை அருகில் எடுத்து வைத்துக் கொண்டான்.
அதைப் பிரிக்கும் போது ‘இந்தப் பொட்டலத்தில் என்ன சாப்பாடு இருக்குமோ?’ என்ற ஆச்சரியம் அவன் கண்களில் ததும்பியது. பின்னர் சாப்பாட்டு பொட்டலத்தில் இருந்த சாப்பாட்டை தட்டுக்கு மாற்றினான்.
அதை உண்ணும் போது அவனிடம் மகிழ்ச்சியைக் காண முடிந்தது. வேக வேகமாக சாப்பிட்டான். அந்த உணவு பிரியாணி போன்று தோன்றியது. சாப்பிட்டு முடித்தபோது அவனிடத்தில் ஒரு திருப்தி காணப்பட்டது.
பிறகு சிறிது நேரம் அருகில் இருந்த சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டான். கொஞ்சம் தண்ணீர் குடித்தான். அருகில் கிடந்த ஒரு தென்னங் கீற்றை எடுத்து அதிலிருந்து ஈக்கிலை பிரித்தெடுத்து பற்களை குத்திக் கொண்டிருந்தான்.
மொத்தத்தில் ஒரு சைக்கிளிலேயே அடங்கிவிடும் அவன் உடமைகளினால் பெரிய கவலைகள் ஒன்றும் அவனுக்கு இருக்க வாய்ப்பில்லை என உணர முடிந்தது.
சற்று நேரத்தில் எழுந்த அவன் சாப்பாடு இருந்த காகிதத்தை சுருட்டி ஓரமாக எறிந்தான். சாப்பிட்ட தட்டை நன்றாக கழுவி அதனை மறுபடியும் கேரியரில் இருந்த பிளாஸ்டிக் கூடையில் போட்டான்.
உப்பலாக இருந்த அவன் சட்டை பாக்கெட்டில் இருந்து பீடியை எடுத்தான். முன்பக்க சிறிய கூடையில் துழாவி தீப்பெட்டி ஒன்றை எடுத்து பற்ற வைத்துக் கொண்டான். மீண்டும் சைக்கிளை தள்ளிக் கொண்டு சென்றான். அவன் பீடியில் இருந்து வெளியேறிய புகை லேசாக காற்றில் மிதந்து சென்றது.
ஒரு மனிதன் உணவை உண்ணும் போது அவன் உடலிலும் மனதிலும் என்ன உணர்வுகள் எழ வேண்டுமோ, அவற்றை அவனிடம் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.
ரமேஷ் தன்னுடைய உணவின் மீது கவனத்தைத் திருப்பிக் கொண்டான்.
இந்த உணவு பசிக்காக உண்பதல்ல. கடமைக்காக.. மதியநேர உணவை விட்டு விட கூடாது என்பதற்காக..வீட்டிலிருந்து மதிய உணவு சாப்பிட்டு விட்டீர்களா? எனும் கேள்விக்கு பதில் சொல்வதற்காக..
அந்த ஏழை அவனது உணவை அவன் கண்ட போது அவனிடம் உண்டான ஆவல், உண்ணும் போது அவனிடம் கண்ட மகிழ்ச்சி, உண்டு முடித்த போது அவனுக்கு கிடைத்த திருப்தி இவை எதையும் ரமேஷால் உணரமுடியவில்லை.
வசதியான வாழ்க்கை என்ற பெயரில் மேலும் மேலும் பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கிறோம். எதிர்காலத்துக்கு என்று கவலைப்பட்டு எதை எதையெல்லாமோ திட்டமிடுகிறோம். அவை நிறைவேறாத போது வாழ்வில் அழுத்தம் கூடுகிறது.
‘வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார்… ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்’ என்னும் இயேசுநாதரின் போதனை மனதில் தோன்றி மறைந்தது.
ரமேஷ் தற்போது சாப்பிட்டு முடித்து கார் கதவுகளை திறந்து வெளியில் வந்து கைகளைக் கழுவினான். தனது வாழ்க்கையில் கழுவித் தள்ள வேண்டியவைகள் இன்னும் பல இருப்பதாக உணர்ந்தான்.
‘உலகத்தில் சொத்துக்களாலும் பணத்தாலும் வசதியான பொருட்களாலும் கிடைக்கும் வாழ்க்கை மட்டுமல்ல; எளிமையான வாழ்க்கையும் வரம்தான்’ என எண்ணிக் கொண்டான்.
பா. சுரேஷ் டேனியல்
உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை
ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி (தன்னாட்சி)
நாகர்கோவில் – 629003
கைபேசி: 9944270749
மின்னஞ்சல்: sureshdanielp@gmail.com
One Reply to “வானத்துப் பறவைகள் – சிறுகதை”
Comments are closed.