அழகிய காடு ஒன்று இருந்தது. அக்காட்டினை சிங்கம் சின்னப்பா ஆட்சி செய்தது. அக்காட்டில் பறவைகள் மற்றும் விலங்குகள் சந்தோசமாக வாழ்ந்து வந்தன.
ஒருநாள் முயல் முத்தண்ணா வயிறு நிறைய உண்டு விட்டு மரத்தடியில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தது. அப்போது அருகில் இருந்த தென்னை மரத்திலிருந்து தேங்காய் ஒன்று தட் என்ற பெரும் சத்தத்துடன் புதரில் விழுந்தது.
சப்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த முயல் முத்தண்ணா, ‘வானம் பெயர்ந்து விழத் தொடங்கி விட்டது. நாம் உடனே இங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டும்’ என்று எண்ணிக் கொண்டு ஓட ஆரம்பித்தது.
முயல் முத்தண்ணா ஓடுவதை வாழைப்பழம் தின்று கொண்டிருந்த குரங்கு குப்புசாமி பார்த்தது.
முத்தண்ணாவிடம், “ஏன் இவ்வளவு பதட்டமாக ஓடுகிறாய்?” என்று கேட்டது குப்புசாமி.
அதற்கு முத்தண்ணா “உன்னிடம் பேசிக் கொண்டிருக்க நேரமில்லை. வானம் பெயர்ந்து விழத் தொடங்கி விட்டது. நான் இவ்விசயத்தை உடனே நம் மன்னரிடம் கூற வேண்டும். ஆதலால் ஓடிக் கொண்டிருக்கிறேன்” என்று கூறிவிட்டு ஓடத் தொடங்கியது.
உடனே குப்பண்ணா “இரு நானும் உன்னுடன் வருகிறேன். இவ்விசயத்தை நாம் மன்னரிடம் இப்போதே தெரிவிப்போம்” என்று கூறி முத்தண்ணாவுடன் ஓடத் தொடங்கியது.
முத்தண்ணாவும் குப்புசாமியும் ஓடுவதை புல் மேய்ந்து கொண்டிருந்த மான் மலர்விழி பார்த்தது.
“நீங்கள் இருவரும் இவ்வளவு அச்சத்துடன் எங்கே செல்கிறீர்கள்” என்று மலர்விழி கேட்டது.
அதற்கு குரங்கு குப்புசாமி “வானம் பெயர்ந்து விழத் தொடங்கி விட்டதாக முத்தண்ணா கூறினான். இவ்விசயத்தை நாங்கள் இருவரும் மன்னரிடம் தெரிவிக்க போய் கொண்டிருக்கிறோம்” என்று சொன்னது.
அதனைக் கேட்ட மான் மலர்விழி “நானும் உங்களுடன் சேர்ந்து வானம் பெயர்ந்து விழுவதை மன்னரிடம் சொல்ல வருகிறேன்” என்று கூறி அவர்களுடன் ஓடத் தொடங்கியது.
முயல் முத்தண்ணா, குரங்கு குப்புசாமி, மான் மலர்விழி ஆகியோர் ஓடுவதை குளத்தில் குளித்துக் கொண்டிருந்த எருமை எட்டியப்பன் பார்த்தது. “நீங்கள் மூவரும் எங்கே வேகமா செல்கிறீர்கள்?” என்று எட்டியப்பன் கேட்டது.
அதற்கு மான் மலர்விழி “வானம் பெயர்ந்து விழத் தொடங்கி விட்டதாக முத்தண்ணா கூறியது. இவ்விசயத்தை மன்னரிடம் தெரிவிக்க ஓடிக் கொண்டிருக்கிறோம்” என்றது.
“நான் உங்களுடன் சேர்ந்து கொண்டு மன்னரிடம் வானம் பெயர்ந்து விழுவதை தெரிவிக்க வருகிறேன்” என்று சொல்லிக் கொண்டு அவர்களுடன் ஓடத் தொடங்கியது.
முயல் முத்தண்ணா, குரங்கு குப்புசாமி, மான் மலர்விழி, எருமை எட்டியப்பன் ஆகியோர் ஓடுவதை ஆடிக்கொண்டிருந்த மயில் மாதவன் “எல்லோரும் நில்லுங்கள்.
நான் ஆடுவதை சற்று நேரம் ரசியுங்கள்” என்றது.
அதற்கு எருமை எட்டியப்பன் “உனக்கு விசயம் தெரியாமல் பேசுகிறாய். வானம் பெயர்ந்து விழத் தொடங்கியதாக முயல் முத்தண்ணா கூறுகிறான். நாங்கள் எல்லோரும் இவ்விசயத்தை நம் மன்னரிடம் வேகமாகச் சொல்ல போய் கொண்டிருக்கிறோம். உன் ஆட்டத்தை ரசிக்க இப்பொழுது எங்களுக்கு நேரம் இல்லை” என்று சொல்லியது.
அதனைக் கேட்ட மயில் மாதவன் “சரி நானும் உங்களுடன் வருகிறேன். இவ்விசயத்தை நம் மன்னரிடம் நாம் எல்லோரும் சென்று தெரிவிப்போம்” என்று கூறி அவர்களுடன் இணைந்து ஓடியது.
முயல் முத்தண்ணா, குரங்கு குப்புசாமி, மான் மலர்விழி, எருமை எட்டியப்பன், மயில் மாதவன் ஆகியோர் சிங்கம் சின்னப்பாவின் குகையை அடைந்தன.
அனைவரும் வேகமாக ஓடி வருவதைப் பார்த்த சிங்கம் சின்னப்பா “என்ன விசயம்? எல்லோரும் ஏன் இப்படி ஓடி வருகிறீர்கள்?” என்று கேட்டது.
அதனைக் கேட்டவுடன் மயில் மாதவன் “வானம் பெயர்ந்து விழப்போவதாக முயல் முத்தண்ணா சொன்னதாக எருமை எட்டியப்பன் கூறியது. ஆதலால் நாங்கள் இந்த விசயத்தை உங்களிடம் சொல்ல வேகமாக ஓடி வந்தோம்” என்று கூறியது.
அதனைக் கேட்ட சிங்கம் சின்னப்பா முயல் முத்தண்ணாவிடம் “உனக்கு எப்படி வானம் பெயர்ந்து விழுவது தெரியும்?” என்று கேட்டது.
அதற்கு முயல் முத்தண்ணா “நான் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது தட் என்ற சப்தம் கேட்டது. வானம் பெயர்ந்து விழுந்ததால் அந்த சத்தம் வந்தது. இவ்விசயத்தை உங்களிடம் தெரிவிக்க வருகையில் இவர்களை சந்தித்தேன். அவர்களும் வானம் பெயர்ந்து விழுவதை உங்களிடம் தெரிவிக்க என்னுடன் ஓடி வருகிறார்கள்” என்று கூறியது.
அதற்கு சிங்கம் சின்னப்பா “அப்படியா? சத்தம் எங்கே வந்தது?. அந்த இடத்தை என்னிடம் காட்டு” என்றது.
முயல் முத்தண்ணா தன்னுடன் வந்தவர்களுடன் சிங்கத்தையும் சேர்த்து தான் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த இடத்திற்கு வந்தது.
அப்பொழுது தென்னை மரத்திலிருந்து மற்றொரு தேங்காய் தட் என்ற சத்தத்துடன் விழுந்தது.
அதனைக் கேட்ட முயல் “கேட்டீர்களா அரசே வானம் பெயர்ந்து விழும் சத்தத்தை என்றது”.
அதற்கு சிங்கம் பலமாகச் சிரித்து “முயல் முத்தண்ணா இந்த சத்தம் தேங்காய் விழுந்ததால் வந்தது. அதனை நீ வானம் பெயர்ந்து விழுவதாக தவறாக எண்ணி விட்டாய். உன்னிடம் சரியாக விசாரிக்காமல் இவர்களும் உன்னுடன் சேர்ந்து ஓடி வந்திருக்கிறார்கள்.” என்று கூறி சிரித்தது.
பின் அவர்களிடம் “நீங்கள் எதனையும் தீர விசாரிக்காமல் முடிவு செய்யக் கூடாது. இதனால் நேரம் வீணாவதுடன் தேவையற்ற பயம் ஏற்படும். இனிமேல் எதனையும் தீர விசாரித்து செயல்படுங்கள்” என்று கூறியது.