லதாவின் பதிலைக் கேட்ட அவள் அம்மா மாலதி அதிர்ச்சியில் உறைந்தாள்.
“என்னடி சொல்றே? பைத்தியமா உனக்கு?” என்று இரைந்தாள்.
“ஆமாம்மா! நான் ராகுலை கல்யாணம் பணணிக்க மாட்டேன்!” என்றாள் லதா ஆழ்ந்த அமைதியுடனும் அழுத்தமான தீர்மானத்துடனும்.
“மானம் போய்டும்டி!” என்று ஆவேசமாக லதாவை அறைய கையை ஓங்கினாள் அம்மா.
ஆனால் லதாவிடமிருந்த தீர்க்கமான முடிவும் அவள் கடின உடல்மொழியும் அவளை தடுத்து நிறுத்தியது.
மாலதிக்கு தலை சுற்றியது.
‘அப்பா இல்லாத பெண்ணை செல்லம் கொடுத்து வளர்த்து விட்டோமே’ என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள்.
லதாவும் ராகுலும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராய் விரும்பி காதலித்து, இரு வீட்டாரின் ஆரம்ப நிலை தயக்கத்தை உடைத்து, இருவரும் இரு வீட்டாரையும் கெஞ்சியும் கொஞ்சியும் சம்மதிக்க வைத்து, தாஜ் ஹோட்டலில் “பெட்ரோதல்” எனப்படும் நிச்சயதார்தத்தை ஆடம்பரமாக நடத்தி, இருவரின் அலுவலக ஐ.டி. இஞ்சீனியர்களையும் வியப்பில் ஆழ்த்திய ஒரே வருடத்தில், “ராகுல் வேண்டாம்” என்றால் யாருக்குத்தான் திகைப்பு, ஆவேசம், கோபம் வராது?
சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, அதிர்ச்சி செய்தியை மெல்ல ஜீரணித்துக் கொண்டு, ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்திக் கொண்டு மாலதி, மகளிடம் “ஏன்? என்ன ஆச்சு?” என்று பதட்டம் தணிந்த குரலில் வினவினாள் மாலதி.
பொதுவாக நிச்சயதார்த்தம் முடிந்த ஒரு சில மாதங்களிலேயே திருமணம் நடத்தி விடும் இந்த காலகட்டத்தில் மேல் படிப்பு, ட்ரான்ஸ்பர் என்பதை காரணம் காட்டி முகூர்த்ததை ஒத்திப் போடுவது விபரீதத்தில் முடியலாம் என்பதற்கு ராகுல்-லதா கேஸ் ஒரு சாம்பிள்.
லதாவிடமிருந்து மௌனமே பதிலாக வந்ததால் மாலதி மேலும் தொடர்ந்தாள்.
“ஏண்டி! இதுக்குதான் சொன்னேன், தொட்டதெற்கெல்லாம் பார்ட்டி, பிக்னிக் என்று சுத்தாதே! அவா ஆத்துக்கெல்லாம் அடிக்கடி முணுக்கென்றால் போயிண்டு இருக்காதேன்னு வார்ன் பண்ணினேன்! நீ கேக்கலே”
“மூணு முடிச்சு போடற வரைக்கும் எட்டி இருந்தால்தான் வாசனைன்னு உனக்கு எத்தனை தரம் திருப்பி திருப்பி சொல்றது! போடி!” என்று அம்மா பெரும் மூச்சிறைந்தாள்.
“இல்லேம்மா! அவரை ரொம்ப குளோஸ்சா அப்சர்வ் பண்ணப்பதான் எனக்கு அவரோட ரொட்டீன், வீக்னஸ்லாம் தெரிஞ்சுது!
அவரு ரொம்ப சோம்பேறிமா! எழுந்திருக்கருத்துக்கே எட்டு மணி! எக்சர்சைஸ் வாக்கிங் ஒண்ணும் கிடையாது! சில சமயம் குளிக்காமலேயே ஆபீஸ் வந்துரராரு,
ஷேவிங் பண்ணிக்கிறதில்லே; அன்டர்-ஆர்ம்ஸ் ஷேவ் பண்ணிக்கிறதில்லே; ஒரே ‘ஸ்வெட் ஸ்மெல் இன் தி லாங் ரன்; அவர் எனக்கு சூட் ஆக மாட்டார்மா!”
“பின்னே என்ன தைரியத்திலே அவனை லவ் பண்ணினே?”
“ஆரம்பத்திலே நன்னாதான் பேசினார், பழகினார்மா; இம்ப்ரஸிவ்வா இருந்தார்”
“அப்புறம் என்ன ஆச்சு?”
“எப்பவாவது சிகரெட் ஸ்மோக் பண்ணுவார்; பீர் சாப்பிடுவார், கே.எஃப்.ஸி.போவாரு!”
“கண்டராவி! அதெல்லாம் ரொம்ப ரொமான்டிக்கா இருந்துதோ?”
லதா குற்ற உணர்வால் சற்றே தலை குனிந்தாள்.
திடீர்ன்னு “நீங்க இதப் பண்ணப் படாது அதப் பண்ணப் படாதுன்னு சொன்னியா?”
“ஆமாம்மா ! மொதல்ல ஒண்ணு ரெண்டு சிகரெட், இப்ப ஒரு பாக்கெட்;
ஆரம்பத்தில் ஒரு பாட்டில் பீர், இப்ப ஸ்காட்ச்சும் பீரும் கலந்து காக்டெயில்லா அடிக்கிறார்மா!”
“நீ ஏதாவது சாப்பிட்டாயா?”
………………………………………….
………………………………………….
“சொல்லுடி! வாயை திறந்து?!”
“ஆமாம்மா! ஒரு பீர் மாத்திரம் கம்பெனி கொடுத்தேன்!”
“கர்மம்! கர்மம்! கம்பெனியாம்! இப்படி ஏதாவது செய்யறது; அப்புறம் ஆம்பளை எல்லை மீறினா, அய்யோ! அய்யோன்னு புலம்பறது! ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தி இருக்கலாம்மோல்யோ! சொன்னா கேள்டி, அதையெல்லாம் சரி பண்ணிருல்லாம். வீக்னஸ் இல்லாத ஆம்பிளையா, இல்லை பொம்மனாட்டியா?”
“அம்மா! எனக்கு ராகுல் வேண்டாம்!” என்றாள் லதா தீர்மானமாக.
மாலதியின் கோபமும் ஆவேசமும் உச்சத்திற்கு சென்றன.
“போடி! பைத்தியக்காரி! நூறு பேர் முன்னாடி பந்தாவா தாஜ் ஹோட்டல்ல நிச்சயம் பண்றது, குதிக்கறது, கும்மாளம் போடறது; அப்புறம் மாப்பிள்ளை வேண்டாம்கிறது!
புதுசா வேற ஒருத்தன் பேரை போட்டு நான் அந்த நூறு பேர் கிட்ட ‘என் பொண்ணுக்கு கல்யாணம்’னு பத்திரிக்கை கொடுத்தால் அவா என்னை செருப்பால அடிக்க மாட்டா?
என்ன நெனைச்சுண்டு இருக்கே உன் மனசிலே? எல்லாம் உங்கப்பா கொடுத்த செல்லம்டி! அவர் ஆக்சிடென்ட்ல பொசுக்குன்னு போய்ட்டார்! இப்ப நான் கிடந்து இந்த கர்மத்தை எல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கு! போ!”
நாட்கள் சென்றன. மாலதியின் தங்கை ரம்யா டில்லியில் இருந்து சென்னை வந்தாள்.
‘இந்த நேரம் பார்த்து சித்தி வர்றாளே’ என்று லதா கவலைப்பட்டாள். ஏனென்றால் சித்தி வாயாடி. நோண்டி நோண்டி விஷயத்தை எப்படியாவது கறந்து விடுவாள்.
பிரயாண களைப்பு தீர்ந்த சில மணி நேரத்திலேயே ரம்யாவின் பேச்சு களை கட்டியது.
“இந்த ‘வந்தே பாரத்’ வந்தாலும் வந்தது, மத்த இரயில் ஸ்டாண்டர்ட் எல்லாம் குறைஞ்சு போய்டுத்து; இத்தனைக்கும் ‘தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்’ஸில் ஏ.ஸி. 3 டயர்ரில் தான் வந்தேன்.
எவன் எவனோ டிக்கெட் இல்லாமலேயே ஏறான்; பெர்த் பாசஞ்சர் கேட்டால் முறைக்கிறான்; டி.டி.ஈ. ஐபேட் பார்த்துக் கொண்டே அடுத்த கம்பார்ட்மெண்ட்க்கு போய்டிரார்!
ஒவ்வொரு கம்பார்ட்மெண்ட்க்கும் ஒரு செக்யூரிட்டி கார்ட் போட்டால் நிறைய பேருக்கு வேலை கிடைக்கும்; நமக்கு நிம்மதி கிடைக்கும்;
ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் கூட பத்து ரூபாய் பதினைந்து ரூபாய் எக்ஸ்ட்ராவாக வாங்கினால் செக்யூரிட்டிக்கு சம்பளம் கொடுக்கலாம்; நமக்கும் நல்ல தூக்கம் கிடைக்கும்” என்று ரயில்வேக்கு விலையில்லா இலவச யோசனை வழங்கினாள்.
பொதுவாகவே ரம்யா வாயாடி. இப்ப டில்லியில் வேற இருக்காளா, ஹிந்தியும் வெளுத்து வாங்கறா!
ஒரு காப்பிக்கு பின், “ஏண்டி லதா! எப்ப கல்யாண சாப்பாடு போடப் போறே? என்று கச்சேரியை ஆரம்பித்தாள்.
“ராகுல் பிள்ளையாண்டான் எப்படி இருக்கான்? கல்யாண மாப்பிள்ளை அல்லவா? அதான் விசாரிச்சேன்”
லதாவுக்கு சித்தியின் ‘ஆல் இன் ஆல்’ அரட்டை என்றாலே கொஞ்சம் அலர்ஜி!
சித்தியின் அபார ஆளுமையால் கலங்கி நின்ற லதா “சட்டென்று அவசரப்பட்டு, விதரணை தெரியாமல், “ராகுலைக் கல்யாணம் பண்ணிக்கப் போறதில்லை” என்று உளறி விட்டாள்.
அவ்வளவுதான்! சித்தியின் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் வேகம் எடுத்துவிட்டது!
ஏற்கனவே மாலதி மறைமுகமாக லதாவின் அபத்த முடிவை சொல்லியிருந்ததால், சித்தி ஆரம்பித்து விட்டாள் ஆவேச அட்வைசை!
“ஏண்டி! உங்கப்பா எங்க அக்காவை கல்யாணம் பண்ணாமல் வேறொரு பெண் வாக்கப்பட்டு இருந்தால் நீ பிறந்தே இருக்க மாட்டே தெரியுமோ!” என்று பொட்டில் அறைந்தார்போல் ஆரம்பித்தாள்.
“உங்கம்மா மேலே வேறொரு ஜாதிக்கார ஆபிசர் உயிரையே வச்சிருந்தான்! ஜாதி பிரச்னையிலே, ஆத்தில் நடந்த யுத்தத்திலே அந்த கல்யாணம் நடக்கலே! அப்படி நடந்து இருந்தா நீ பொறந்திருப்பியா? வேறொரு பொண்ணோ ஆணோ இந்த ஆத்திலே நடமாடிண்டு இருந்திருப்பா இப்ப!
உங்கப்பா மட்டும் என்ன பெரிசா கிழிச்சார்? தாம்பத்திய உறவிலேயே இண்டரெஸ்ட் இல்லாம கோவில் கோவிலா சுத்தி திரிஞ்சவரை, செக்ஸ்சாலஜிஸ்ட், சைக்கியாடிறிஸ்ட், என்றெல்லாம் காண்பித்து, தாது, லேகியம் என்று ஏதேதோ உங்கப்பாவை சாப்பிட வைத்து நீ பொறந்தே!
கொஞ்ச நாளிலேயே அவர் போய்ட்டார்! உங்கம்மாதான் ஒத்த ஜீவனா பாங்க் வேலைக்கும் போய்யிண்டு உன்னை வளர்த்து ஆளாக்கியிருக்கா”
சித்தி சற்று லதாவிடம் நெருங்கி வந்து கிசு கிசு குரலில், “ராகுல்லோட சினிமாவுக்கெல்லாம் போய் இருக்கியா? தியேட்டர்ல பக்கத்துல பக்கத்துல உட்கார்ந்து இருக்கரச்ச ரொமான்டிக் மூட்ல, அவன் மடியிலேயிருந்து வாட்டர் பாட்டில்லையோ, பாப்கார்ன் பாக்கெட்டையோ எடுக்கரச்ச, படாத இடத்தில விரல் பட, அவன் ‘கும்’ என்று ஆம்பிளையா இருந்ததை கண்டு பிடிச்சு இருப்பியே?”
சித்தியின் ஏவுகணை பேச்சைக் கேட்டு அதிர்ந்த லதா ரெகவர் ஆவதற்குள், சித்தி “அப்புறம் என்னடி, அதாண்டி முக்கியம். மத்த எல்லாத்தையும் கல்யாணத்துக்கு அப்புறம் மாத்திடலாம்டி! “
சித்தி இப்பொழுது ஏ.கே.47 துப்பாக்கியை எடுத்தாள்.
“சரி! இன்னொருத்தனோட போறே; அவன் ராகுலைவிட மோசமா இருந்தா, அவனையும் விட்டுட்டு இன்னொருத்ததனோட சுத்துவியா?
யாருக்குத்தான் ஆசையில்லே? ம்ஹூம்! ஒவ்வொரு ஜோடியையும் பாக்கறச்சே நமக்கும் அதுமாதிரி அமையலேயேன்னு சில சமயம் தோணும்; உள்ளே போய் பார்த்தால்தான் பவிசு தெரியும்!
என்னையே எடுத்துக்கோ! அவர் பஹ்ரைன்ல இருக்கார். வருஷத்துக்கு ஒரு மாசம் வந்துட்டு போறார். பணம் ஏதோ இருக்கு; மத்த சுகம்?”
லாஸ்ட் ஓவர் என்பதால் தோனி போல சித்தி சிக்ஸ் அடிக்க ஆரம்பித்துவிட்டாள்.
“அவன் யோக்கியனா, நல்ல குடும்பமா, நன்னா சம்பாதிக்கிறானா, ஓரளவுக்கு நாம் சொல்றதை கேட்பானா, இதெல்லாம் இருந்தால் போதும்டி, அவனை நம் கையிலே போட்டுண்டுரலாம்!
கடைக்கு போய் புடவை எடுக்கிறோம், கடைக்காரன் எடுத்து போடறதை எல்லாம் பார்க்கிறோம்.
பெரும்பாலும், நாம் முதன் முதல்ல பார்த்து புடிச்ச புடவையை தாண்டி எத்தனை புடவையை பார்த்தாலும் முதல்ல நமக்கு எது புடிச்சு இருந்துதோ, அந்த புடவையைதான் நாம் செலக்ட் பண்ணுவோம் விலை முன்ன பின்ன இருந்தாலும். பஸ்ர்ட் இம்ப்ரெஸ்ஸண் இஸ் த பெஸ்ட் இம்ப்ரெஸ்ஸண்டி!
உன் உள்மனசு சொல்லி சொல்லி ஒரு வருஷமா ராகுலை நெஞ்சுக்குள்ளே வச்சு பூஜை பண்ணியிருக்கே!
அவனை எவளாவது அள்ளிண்டு போறதுக்குள்ளே நீ அவனை விட்டுறாதேடி! உள்ளதும் போய்த் தொலைக்கப் போறது!” என்று முடித்தாள் சித்தி.
ஒரு கணம் லதாவின் மனதில் அவள் ஆபீஸ் தோழி ரேகா பெர்ஃப்யூம் மணத்துடன் ராகுலுடன் அடிக்கடி நெருங்கி நெருங்கி பேசுவது நினைவுக்கு வந்தது.
சித்தியின் “உள்ளதும் போய்த் தொலைக்கப் போறது” என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் ஊஞ்சலாடியது.
அவள் திருமண விமானம் பாதுகாப்பாக தரை இறங்கியது.
ஜெ.ஜெயகுமார்
சென்னை
கைபேசி: 9884251887