வாயிலார் நாயனார் மனதால் இறைவனை மானசீகமாக வழிபட்டு நீங்காத இன்பமான சிவபதத்தைப் பெற்ற வேளாளர் ஆவார்.
இறைவனை வழிபாடு செய்யும் முறைகளை மனம், மொழி, மெய் என மூன்று வகைகளாகப் பிரிப்பர்.
இதில் மெய் எனப்படும் உடலால் வழிபாடு செய்வது முதல்நிலை என்பர்.
மொழி எனப்படும் இரண்டாவது நிலையில் இறைவனைப் போற்றி பாடுவது ஆகும்.
முதல் நிலையைவிட இரண்டாவது நிலை சிறந்தது ஆகும்.
மனம் எனப்படும் மூன்றாவது நிலையில், மனதால் மானசீகமாக இறைவனை வழிபடுவதைக் குறிக்கும்.
இறைவனை வழிபாடு செய்யும் மூன்று முறைகளில் மனதால் வழிபாடு செய்வதே சிறந்தது.
அவ்வாறு மனதால் இறைவனை வழிபாடு செய்து அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக உள்ளார் வாயிலார் நாயனார்.
மனதால் மானசீகமாக வழிபடுவதின் பெருமை குறித்து மகாபாரதக் கதை ஒன்றைக் கூறுவர். அதனைப் பற்றிப் பார்க்கலாம்.
ஒருசமயம் பாண்டவர்களில் வில்வித்தையில் சிறந்தவனான அர்ச்சுனன் கயிலாயத்தைக் கடந்து சென்றான்.
அப்போது சிவகணங்கள் பூமியில் வழிபாடு செய்பவர்கள் இறைவனுக்கு இட்ட நிர்மாலியத்தை வாரிக் கொட்டிக் கொண்டிருந்தனர்.
பல்வகையான பூக்களும் வில்வமும் மலைபோல் குவிக்கப்பட்டிருப்பதைக் கண்ட அர்ச்சுனன் ‘இது நம்முடைய பூசையின் நிர்மாலியம்’ என்று நினைத்தான்.
சிவகணங்களிடம் “இது யார் செய்த பூசையின் நிர்மாலியம்?” என்று கேட்டான்.
“பூமியில் இருக்கும் பஞ்சபாண்டவர்களில் ஒருவன் வழிபாட்டில் பயன்படுத்தியது” என்றனர்.
“அவன் பெயர் என்ன?” என்று கேட்டான் அர்ச்சுனன்.
“அவன் பெயர் பீமன். இந்த மலைபோல் அந்தப் பக்கமும் பூக்கள் குவிந்து கிடக்கின்றன.” என்றனர்.
“பீமனா? பீமன் அண்ணன் உட்கார்ந்து சிவபூஜை செய்ததைப் பார்த்ததேயில்லையே” என்று எண்ணினான்.
பிறகு சிவகணங்களிடம் “அர்ச்சுனன் செய்த பூசையின் நிர்மாலியம் எங்கே?” என்று கேட்டான்.
அது அளவில் மிகப்பெரியது என்ற பதிலை எதிர்நோக்கிய அர்ச்சுனனிடம் சிவகணங்கள் “அதுவா? இதோ இந்த கூடையில் இருக்கிறது” என்று சிறிய கூடையைக் காட்டினர்.
அதனைக் கேட்டதும் அர்ச்சுனன் அதிர்ச்சியில் “பீமன் சிவபூசை செய்து பார்த்ததில்லையே” என்றான்.
அதற்கு சிவகணங்கள் “அவன் இறைவனை மனத்தால் வழிபடுகிறான். ஒரு நந்தவனத்தைக் கண்டால் அதிலுள்ள பூக்கள் அனைத்தையும் மனத்தால் இறைவனுக்கு அர்ப்பணம் செய்துவிடுவான். அது இங்கே மலையாகக் குவிந்துவிடும்.” என்றனர்.
அப்போது அர்ச்சுனனுக்கு மனத்தால் மானசீகமாக வழிபடுவதன் சிறப்பு விளங்கியது.
வாயிலார் நாயனார் இறைவனை மானசீகமாக வழிபட்டவர்.
அவர் தொண்டைநாட்டில் திருமயிலையில் அவதரித்தவர். திருமயிலை என்பது மயிலாப்பூர் ஆகும்.
வேளாளரான அவர் சிவனாரிடத்து பேரன்பு கொண்டிருந்தார்.
ஆதலால் அவர் இறைவனாரை தம் உள்ளம் என்னும் கோயிலில் இருத்தினார். ஆனந்தத்தால் அப்பிரானாருக்கு திருமஞ்சனம் செய்வித்தார்.
அன்பால் திருவமுது படைத்து ஞானத்தால் திருவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினார்.
தம்முடைய தூய உள்ளத்தில் இறைவனை இருத்தி எப்போதும் மானசீகமாக மனதால் வழிபட்டு வந்தார்.
வாயிலார் மனதால் இறைவனாரை வழிபட்டு இறுதியில் நீங்காத இன்பமாகிய வீடுபேற்றினை அடைந்தார்.
வாயிலார் நாயனார் குருபூஜை மார்கழி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.
வாயிலார் நாயனாரை சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் ‘தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்‘ என்று புகழ்கிறார்.