வார்த்தை தவறிவிட்டாய் – சிறுகதை

கோர்ட் அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

போலீசார் வெங்கட்டை இன்று எப்படியும் பிடித்துக் கொண்டு வந்து ஆஜர் படுத்தி விடுவார்கள். வெங்கட் வந்து டைவர்ஸ் பத்திரத்தில் கையெழுத்து போட்டு விட்டால் சுமதிக்கு டைவர்ஸ் கிடைத்துவிடும்.

சுமதி தன் வக்கீலுடன் நீதிமன்ற வாசலில் ரொம்ப ஆவலுடன் காத்திருக்கிறாள்.

இரண்டரை வருடமாக வாய்தா மேல் வாய்தா வாங்கி வெங்கட் வழக்கை இழுத்தடிக்கிறான்.

‘எப்படியாவது வெங்கட்டிடம் இருந்து டைவர்ஸ் வாங்கி வேறு யாரையாவது திருமணம் செய்து அவனுக்காகவே ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்து காட்டி அவன் முகத்திலும், கேடுகெட்ட அவன் குடும்பத்தினர் முகத்திலும் கரியை பூச வேண்டும்’ என்ற வைராக்கியத்தில் சுமதி கோர்ட் வாசலில் உறுமிக் கொண்டிருக்கிறாள்.

இரு தரப்பு வக்கீலும் தயாராய் நிற்கிறர்கள்.

இன்னும் அரை மணி நேரத்தில் வழக்கு விசாரணைக்கு வந்துவிடும். ஆனால் வெங்கட் இதுவரை வரவில்லை.

“போலீசை நன்றாக கவனித்து விட்டதாகவும், கட்டாயம் அவர்கள் இன்று வெங்கட் எங்கு இருந்தாலும் பிடித்துக் கொண்டு வந்து விடுவார்கள்” என்று சுமதி வக்கீல் உறுதியாக சொல்கிறார்.

சுமதிக்குதான் நம்பிக்கையில்லை. சுமதிக்கு வெங்கட்டை பற்றி நன்றாகத் தெரியும். ‘அவன் அரக்கன், என்ன வேண்டுமானாலும் செய்வான். அவன் வரும்வரை நிச்சயமில்லை’ சுமதி ஒருவித படபடப்புடன் காத்திருந்தாள்.

சுமதியும் வெங்கட்டும் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்கள். காதல் என்றால் சாதாரண காதல் இல்லை உலகமே வியந்த காதல்.

இவர்கள் காதலை பேசாத பத்திரிக்கைகள் இல்லை; டிவி இல்லை, சோசியல் மீடியா முழுதும் இவர்கள் காதல்தான் ஒருகாலத்தில் ட்ரெண்டிங்.

வெங்கட் தஞ்சாவூரில் ஒரு கிராமத்து விவசாய கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவன். கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்து பெரிய கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்கிறான். லட்சத்தில் சம்பளம் வாங்குகிறவன்.

அதே நிறுவனத்தில் வேலை செய்த சுமதியை அவனுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. சுமதி அந்த நிறுவனத்தின் சென்டர் ஆப் அட்ராக்க்ஷன். சுமதிக்கு தினம் தினம் ஒரு காதல் ப்ரோபோசல்தான்.

சுமதி முற்போக்கு சிந்தனைகொண்ட, சுய சார்புள்ள நவீன கலாச்சாரத்தின் பிரதிநிதி. காற்றில் அலையும் அவள் கூந்தல், இல்லாத இடை, ஒய்யார நடை, உயர் ரக உடை, எல்லாமே நவீன யுகத்தின் நாகரிக வெளிப்பாடுகளாகவே இருந்தது.

இதெல்லாம் கிராமத்து பின்னணிக் கொண்ட வெங்கட்டுக்கு வாயைப் பிளக்கும் சமாச்சாரங்களாகப்பட்டது. அதுவே ஈர்ப்பானது. பின் அவள் மீது காதல் கொள்ளச் செய்தது.

அந்த காதலை வெறி கொண்டதாகவும் மாற்றியது. நாடி, நரம்பு, மூளை, இதயம் என்று காதல் வெறி வெங்கட் உடல் முழுதும் பற்றிக்கொண்டது.

சுமதிக்கு நிறைய நண்பர்கள் முதலில் வெங்கட்டையும் அவள் ஒரு நண்பனாகத்தான் நினைத்தாள். அவன் காதலையும் ஒரு டிராமாவாக, விளையாட்டாக கருதினாள்.

எத்தனையோ பேர் நம்மை காதலிப்பதாக சொல்வார்கள். அது போல் தான் வெங்கட்டும் என்று பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் நாட்கள் நகர நகர வெங்கட்டின் காதல் மிக அடர்த்தியானது; தீவிரமானது; தூய்மையானது என்பதையும் அவள் உணரத் தொடங்கினாள்.

அவன் பார்வை, அவனுடைய அந்த உடல் மொழி எல்லாம் அவனுடைய பெருங்காதலை சுமதிக்கு உணர்த்தியது.

“உண்மையாகவே காதலிக்கிறாயா வெங்கட் ? அழகில் மயங்கி உளறுகிறாயா? இல்லை என்னை அடைய நாடகம் போடுகிறாயா?” என்று சுமதி வெங்கட்டிடம் கேட்டாள் .

“உன் சம்மதம் இல்லாமல், உன்னை தொடக்கூட மாட்டேன் சுமதி, நீ இல்லன்னா நான் செத்துருவேன் சுமதி..” என்று சொன்னான். அவன் கண் முழுதும் உண்மை.

இருவரும் ஒருநாள் அடையாறு பாலத்தருகில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது சுமதி விளையாட்டாய் “நான் எது சொன்னாலும் செய்து விடுவாயா வெங்கட்?” என்று கேட்டாள்.

“ஆமாம் செய்வேன்” என்றான்.

“எங்கே இந்த கூவத்தில் குதி; பார்க்கலாம்” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் அவன் கூவத்தில் குறித்து விட்டான்.

அரண்டு போய்விட்டாள் சுமதி.

கூச்சல் போட்டு எல்லோரையும் கூப்பிட்டு, ஆம்புலன்ஸ், போலீஸ் என்று வரவழைத்து அவனை மீட்டெடுத்து அப்பல்லோவில் சேர்த்து ஒரு மாதம் சிகிச்சைக்கு பின் 10 லட்சம் பில் கட்டி அவனை உயிருடன் மீட்டெடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது .

வெங்கட் கூவத்தில் குதித்தது பேப்பர், டிவி, சோசியல் மீடியா என்று பெரும் விவாதமானது.

மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த வெங்கட், “அடுத்த டாஸ்க் என்ன சுமதி? எதிலிருந்து குதிக்க வேண்டும்?” என்று கேட்டான்.

சுமதி அவன் வாயை பொத்தினாள். “உயிரே போயிருக்க வேண்டியது. இனி இதுபோல் செய்யவே கூடாது வெங்கட், என் உயிர் இருக்கும் வரை நீ சாகக் கூடாது” என சத்தியம் வாங்கினாள்.

“நீ செத்துப் போயிட்டினா நானும் செத்திடுவேன் வெங்கட்” என்று அழுதாள்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனை வாசலில் சுமதிக்கும் வெங்கட்டுக்குமான காதல் திருவண்ணாமலை தீபம் போல் ஒளிர்ந்தது.

ஆனால் வெங்கட் வீட்டார்களுக்கு இதில் சுத்தமாக சம்மதம் இல்லை.

சாதி அந்தஸ்து கலாச்சாரம் நடை உடை பாவனை, பழக்க வழக்கம், ஆண் நண்பர்கள் சவகாசம் என சுமதி அந்த குடும்பத்திற்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாதவளாக இருந்தாள். சுமதியை ஏற்றுக் கொள்ள தயாராய் இல்லை.

ஆனால் வீட்டில் ஒரே செல்லப் பிள்ளையான வெங்கட்டின் விருப்பம் அவர்களுக்கு பெரும் தர்ம சங்கடமாய் இருந்தது.

வெங்கட் சுமதியை திருமணம் செய்து கொள்ளவில்லை யென்றால் மறுபடியும் கூவத்தில் குதித்து விடுவான் என்ற நிலையில் அரை மனதோடு அந்த திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார்கள்.

இரு வீட்டிலும் ஏகப்பட்ட குளறுபடிகளுக்கு மத்தியில் திருமணமும் நடந்தேறியது. வெங்கட்டும் சுமதியும் சென்னையில் தனிக்குடித்தனம் போனார்கள். நன்றாகத்தான் நாட்கள் நகர்ந்தன. அழகான ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்கள்.

இருந்தாலும் சுமதிக்கும் வெங்கட் அம்மாவிற்குமான பனிப்போர் நடந்து கொண்டேதான் இருந்தது.

தஞ்சாவூருக்கு சுமதி போகும் போதும், அவர்கள் சென்னை வந்தாலும் எதாவது ஒரு சண்டையில்லாமல் இருந்ததில்லை.

அப்படிதான் பொங்கலுக்கு தஞ்சாவூருக்கு போன சுமதி மொட்டை மாடியில் அரை நிக்கர்- பனியனுடன் செல்பி எடுக்க போய் அதை கண்டித்து வெங்கட் அம்மா பேச, ஒரு கட்டத்தில் வார்த்தை முத்தி, சுமதி கேரக்டரை பற்றி தவறாக சொல்லிவிட, சுமதிக்கு கடும் கோபம் வர தன் ஹீல்ஸ் செருப்பால் வெங்கட்டின் அம்மாவை ஓங்கி அடித்து விட்டாள்.

வெங்கட்டுக்கு தன் அம்மாவை அடித்ததை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. சுமதியை சரமாரியாக தாக்கினான். உருகி உருகி காதலித்த சுமதியை காலால் பலமுறை உதைத்தான். சுமதி மயங்கி சரிந்தாள்.

சுமதி வெங்கட் கட்டிய தாலியை கழட்டி வராண்டாவில் வீசினாள். குழந்தையை தூக்கிக் கொண்டு தனியாக சென்னை திருப்பினாள்.

சென்னை வந்த வெங்கட்டை சுமதி வீட்டார்கள் பதிலுக்கு தாக்கினார்கள். தஞ்சாவூருக்கும் சென்னைக்கும் போர் மூண்டது.

வெங்கட் சமரசம் செய்ய முயன்றான். சுமதி பாறை போல் உறுதி காட்டினாள்.

சமரசம் பேச வந்த வெங்கட் அப்பாவை சுமதி வீட்டார்கள் தாக்கினார்கள். வெங்கட் சுமதியின் அண்ணனை அடித்து உதைத்தான். பிரச்சினை பூதாகரமாகியது. சுமதி கோர்ட்டுக்கு போனாள்.

சமாதானமாக பிரிவதாக வக்கீலை வைத்து பேசினார்கள். ஆனால் வெங்கட் அவளை விடுவதாக இல்லை, அவளுக்கு நிறைய தொந்தரவுகள் கொடுத்தான்.

குடித்து விட்டு கலாட்டா செய்வது, சுமதியுடன் தனிமையில் இருந்த போட்டோக்களை சோசியல் மீடியாவில் போடுவது, அவளை பற்றிய அவதூறு பரப்புவது என்று அவளுக்கு நிறைய இடையூறுகள் செய்ய ஆரம்பித்தான்.

நிறைய குடிக்க ஆரம்பித்தான், கோர்ட்டுக்கு சரியாக வருவதில்லை, வாய்தா மேல் வாய்தா வாங்கி அவளை இன்று வரை வதைத்துக் கொண்டிருக்கிறான்.

‘இன்றோடு இந்த கஷ்ட காலம் முடிவுக்கு வந்துவிடவேண்டும்’ என்று சுமதி கடவுளை வேண்டி நிற்கிறாள்.

இன்னும் ஐந்து நிமிடத்தில் சுமதியின் வழக்கு வரப்போகிறது. இப்போது வரை வெங்கட் வரவில்லை.

வெங்கட் வக்கீலுக்கு ஏதோ ஒரு போன் வந்தது, அவர் கடகடவென்று ஒரு பேப்பரை எடுத்து ஏதோ எழுதினார். கையெழுத்திட்டு நீதிபதியின் மேஜைக்கு அனுப்பினார்.

பின்னர் நீதிபதி பார்த்துவிட்டு, இப்போது இந்த வழக்கின் பிரதிவாதி தற்கொலை செய்து கொண்டதால் இந்த வழக்கை ஒத்தி வைக்கிறேன் என்று வாசித்தார்.

போலீசார் வெங்கட் இருக்கும் இடத்தை முற்றுகையிட, அவன் மதுவில் விஷம் கலந்து குடித்து இறந்து விட்டான்.

அவன் எழுதிய தற்கொலை கடிதத்தில் ‘சுமதியில்லாமல் என்னால் வாழ முடியாது’ என்று இருப்பதாக வக்கீல்கள் பேசிக் கொண்டார்கள்.

சுமதிக்கு தலை சுற்றியது.

“இப்போதும் என்னை நீ ஏமாற்றி விட்டாய் வெங்கட், என்கூட சண்டை போடாம எதுக்கு வெங்கட் செத்து போன?” சுமதி புலம்பினாள். நிதானமிழந்த சுமதியை வக்கீல்கள் சூழ்ந்துகொண்டார்கள்.

யாருக்காக நாம் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று சுமதி நினைத்தாளோ அவன் இல்லையென்றாகி விட்டது.

தன் வாழ்வில் சுமதியில்லையென்றால் செத்துவிடுவேன் என்ற அவன் கொள்கைபடி இறந்து விட்டான்.

சுமதியும் அன்று மருத்துவமனை வாசலில் சொல்லியிருந்தாள் ‘வெங்கட் இல்லையெனில் இந்த உலகத்தில் அவளும் இருக்க மாட்டாள்’ என்று.

ஆனால் அதை வெங்கட் உட்பட யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை போலும்.

சுமதி பித்து பிடித்தவள் போலானாள்.

“அநியாமா என் ஒத்த புள்ளய கொன்னுட்டிய பாவி” என்று வெங்கட் அம்மாவின் குரல் வேறு இரு காதுகளிலும் இடைவிடாது ஒலித்துக்கொண்டேயிருந்தது.

நள்ளிரவில் பக்கத்தில் தூங்கி கொண்டிருந்த குழந்தைக்கு ஒரு முத்தத்தை கொடுத்து விட்டு, மின் விசிறியில் புடவையால் தூக்கு போட்டு சுமதியும் செத்துப் போனாள்.

நவீன காலமாவது மண்ணாவது, எப்போதும் சாகவே சாகாத காதலை என்ன செய்வது? யார் வெல்வது?

முனைவர் க.வீரமணி
சென்னை
கைபேசி: 9080420849

6 Replies to “வார்த்தை தவறிவிட்டாய் – சிறுகதை”

 1. சினிமாவில் கூட காதலை கல்யாணத்தோடு முடித்து விடுகின்றனர். ஆனால் அதற்கு பின் தான் உண்மையான காதலின் ஆழத்தை உணர முடியும்..

  கல்யாணம் என்பது நம் காதலின் தன்மையை உணர நாமே வைத்துக்கொள்ளும் விஷப் பரீட்சை.

  சிலருக்கு முடிவுகள் சாதகமாக அமையும்.

  பலருக்கு…?

  நவீனமாக்கப்பட்ட சமுதாயம் என்பது நாம் வாழும் வெளி வாழ்க்கை அல்ல. அது நம் மனதை பொருத்தது. இதற்கு காதலும் விதி விலக்கல்ல..

  காதலிக்கும் முறைகள் வேறுபடலாம். ஆனால் காதல் என்பது மன ஒருமைப்பாட்டின் அம்சம். அது கலைந்து போவதனால் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் இழப்புகளை கதாசிரியர் வெளிப்படையாக பதிவு செய்துள்ளார்.

  கதையின் பாத்திரங்களும் கதையின் போக்குயும் நமக்கு தெரிந்த மனிதர்களை நினைவூட்டும் வகையில் இருக்கிறது.
  வார்த்தை ஜாலம், சுவாரசியமான கதையாடல், யதார்த்தமான நடை மற்றும் உச்சகட்ட முடிவு யாவும் அழகாக கோர்க்கப்பட்டுள்ளது.

  பாராட்டுக்கள்!

 2. தஞ்சாவூருக்கும் சென்னைக்கும் சண்டை; இது போல் சிறப்பான சொற்றொடர்கள் கதையின் அர்த்தத்தை மேம்படுத்துகின்றன. கதை மாந்தர் அறிமுகம், கதை சொல்லல், இறுதி முடிவு எல்லாம் கனகச்சிதமாய் சிறுகதையை வெளிப்படுத்தி இருக்கிறது.

  கை தேர்ந்த கதாசிரியராக மாறியிருக்கிறீர்கள்.

  உச்சி முதல் உள்ளம் கால் வரை சிலுக்குறது!

 3. கதை தற்கொலைக்கு ஆதரவா இருக்கு. கதையின் முடிவு இப்படி இருந்திருக்க வேண்டாம் என்பது என்னுடைய கருத்து.

 4. வாவார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி என்ற வைர வரி, பாரதியார் கண்ணனை காதலியாக எண்ணி, கண்ணன் பாட்டில் பாடப்பட்ட கவிதை வரி. கண்ணனை அதுவரை கடவுளாக தொழுத பாரதியார் உறவாக வர்ணிக்கிறார். கண்ணனை நண்பனாக, சேவகனாக, தோழனாக, சீடனாக, சத்குருவாக, காதலனாக, காதலியாக, இப்படியாக அந்த உறவுகள் நீலும். அதில் ஒன்றுதான் கண்ணனை காதலியாக பார்க்கிற ஒரு உணர்வு. அதில் கண்ணனை மானசீகமான முறையில் காதலியாக பார்த்த பாரதியார், காதலனுக்கும், காதலிக்குமாக சின்ன சின்ன பிண‌க்குகள் வருவது எதார்த்தம். அப்படி உருவானது தான் வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா என்கின்ற அற்புதமான வரி.

  இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் பேராசிரியர் க. வீரமணி அவர்கள் எழுதிய வார்த்தை தவறி விட்டாய் என்கின்ற கதை என்னை பாடாய்படுத்தியது.

  சுமதி வெங்கட் அவர்களுக்குள் இருந்த காதலை இந்த கதை வாழ வைத்திருக்கிறது.

  காதலியாகவோ, காதலனாகவோ இருக்கும்போது இருக்கும் அந்த பந்தம், திருமணமான பின்பு கணவன் மனைவி என்ற உறவுக்குள் இணையும் பொழுது ஏதோ ஒன்று அவர்களை தடுத்துக் கொண்டு இருக்கிறது.

  ராமன் கூட, சீதையை மணக்கும் பொழுது அதில் ஒரு அன்பு இருந்தது. அதனால்தான் வில்லை வளைத்து காதல் புரிந்து அவளை ஏற்றுக்கொண்டான். ஆனால் திருமணத்திற்கு பிறகு அந்த அன்பு இல்லாமல் போனது.

  சீதையை ராவணன் கடத்திச் சென்றாலும் கூட, அவளுடைய விருப்பமில்லாமல் அவனுடைய சுண்டு விரல் நகம் கூட அவள் மீது படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். கடைசி வரை அவளும் சம்மதிக்கவில்லை. ராவணனும் அவளை தொடவில்லை. இது சாதாரண மானிதனுக்கு தெரிந்தது. ஆனால் கடவுளாக இருக்கும் ராமனுக்கு ஏன் தெரியவில்லை. அதனால் தானே அவளுடைய கற்பை நிரூபிப்பதற்காக அக்னி சட்டியில் இறங்கச் சொன்னான். அப்படி என்றால் அவனுடைய அன்பு எங்கு சென்றது என்ற கேள்வி எழுகிறது.

  ஆனால் வெங்கட் சுமதியை விட்டு பிரிந்து விடக் கூடாது என்பதற்காக தன் வாழ்நாள் எல்லாம் கூடவே இருந்து காதல் மனம் புரிந்த, அந்த வாசம் தன் கூடவே இருக்க வேண்டும் என்று மன்றாடி கொண்டிருந்தான்.

  அதனால் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடுவதை விட தன் உயிரை விட்டு காதலை வாழ வைக்கிறேன் என்று சொல்லி தற்கொலையில் மாண்டு போனான்.

  இது ஒரு படைப்பின் வெற்றியா தோல்வியா என்பதை விவாதிப்பதை விட, காதலன் சார்பாக இருந்து வாதிடுவதே சாலச்சிறந்தது.

  படைப்பாளியும் காதலையும் வாழ வைத்திருக்கிறார்; காதலனையும் இந்த கதை மூலம் பேச வைத்திருக்கிறார்.

  ஒரு நேர்த்தியான படைப்பை வாசித்து முடித்த கனத்த இதயத்தோடு நான் ஆசிரியர் க. வீரமணி அவர்களை இவ்வாறு சபிக்கிறேன்.

  காதல் கொப்பளித்து கொப்பளித்து உமிழ்ந்து இந்த தேசத்தை உயர்வு கொள்ள இன்னும் இது போன்ற சிறந்த படைப்புகளை தர வேண்டும்…. தர வேண்டும் என்று.

  வாழ்த்துக்கள் ஐயா

Comments are closed.