வால்நட் அறிவுத்திறனின் குறியீடு

மனித மூளையைப் போன்ற உணவுப் பொருளைப் பார்த்திருக்கிறீர்களா?. அதுவே வால்நட் என்னும் கொட்டை ஆகும்.

வால்நட் என்பது ஜுக்லான்ஸ் ரெஜியா என்னும் மரத்திலிருந்து கிடைக்கும் உண்ணக்கூடிய விதைகள் ஆகும்.

இது வட்ட வடிவமாக ஒற்றை விதையினைக் கொண்டுள்ளது. இது கடினமான ஓட்டினுள் வைக்கப்பட்டு உள்ளது.

இது மூளைக்கான உணவு என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இதனுடைய ஊட்டச்சத்துகள் மூளையின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிற்கு ஆதரவளிக்கின்றன என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.  ஆதலால்தான் இது அறிவுத்திறனின் குறியீடு எனப்படுகிறது.

 

மூளைக்கான உணவு
மூளைக்கான உணவு

 

முந்திரி, பாதாம், பிஸ்தா உள்ளிட்ட கொட்டைகளில் இதுவே மூளைக்கான உணவு என்று சிறப்பிக்கப்படுகிறது.

வால்நட்டில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன. அவை ஆங்கில அல்லது பாரசீக வால்நட் (ஜுக்லான்ஸ் ரெஜியா), கருப்பு வால்நட் (ஜுக்லான்ஸ் நிக்ரா) மற்றும் வெள்ளை அல்லது பட்டர் வால்நட் (ஜுக்லான்ஸ் சினேரியா) ஆகியவை ஆகும்.

வால்நட்டின் வளரியல்பு மற்றும் பண்புகள்

வால்நட் மரமானது 25-35மீ உயரமும், 2மீ சுற்றளவும் கொண்ட இலையுதிர் மர வகையைச் சார்ந்தது. இம்மரமானது நீர் தேங்காத மண்ணில் செழித்து வளரும்.

இது 50-250 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கிறது. இம்மரமானது பயிர் செய்து நான்கு வருடங்களில் பலன் தரத் துவங்குகிறது.

இம்மரத்தில் மஞ்சள் கலந்த பச்சை நிறப் பூக்கள் தோன்றுகின்றன.  அப்பூக்களிலிருந்து பச்சைநிறக் காய்கள் தோன்றுகின்றன.

 

மஞ்சள் கலந்த பச்சைநிறப் பூக்கள்
மஞ்சள் கலந்த பச்சை நிறப் பூக்கள்

 

பூக்களிலிருந்து தோன்றும் காய்கள்qq
பூக்களிலிருந்து தோன்றும் காய்கள்

 

முதிர்ந்த காய்கள்
முதிர்ந்த காய்கள்

 

இக்காயனாது நன்கு பழுத்த பின்பு சுருக்கம் நிறைந்த மேற்புற தோலினை கழற்றி விட்டு மேலோட்டுடன் கூடிய வால்நட் கொட்டையை வெளிப்படுத்துகிறது.

காயானது பழுக்கும் போது மேற்புறத் தோல் மெல்லிதாகவும், பழுப்பு நிற கொட்டையின் மேலோடு கடினமாகவும் மாறுகிறது.

வால்நட் மரங்கள் தங்களின் அருகில் வளரும் தாவரங்களின் வளர்ச்சியை தடுப்பதற்காக ஒருவகை வேதிப்பொருளை மண்ணுக்குள் சுரக்கின்றன. இதனால்தான் தோட்டங்களின் எல்லையில் இம்மரங்களை வளர்ப்பதில்லை.

வால்நட்டின் வரலாறு

இம்மரமானது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயிர் செய்யப்பட்டு வருகிறது. பாரசீக வால்நட்டின் தாயகம் மத்திய ஆசியாவின் மலைப் பகுதிகள் ஆகும்.

அலெக்ஸாண்டர் இதனை மத்திய ஆசியாவிலிருந்து கிரேக்கம் மற்றும் மாசிடோனியாவிற்கு அறிமுகப்படுத்தினார். கி.பி.4-ஆம் நூற்றாண்டில் ரோமானியர்கள் இதனை பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்தனர்.

ஆங்கிலேயர்கள் இதனை வட அமெரிக்காவில் அறிமுகம் செய்தனர். கருப்பு வால்நட்டின் தாயகம் வட அமெரிக்கா ஆகும்.

தற்போது இது செர்பியா, பல்கேரியா, பிரான்ஸ், கிரீஸ், ருமானியா, சீனா, ஐக்கிய அமெரிக்கா, சிலி போன்ற நாடுகளில் வணிக நோக்கத்தில் வளர்க்கப்படுகிறது.

தற்போது சீனா இதனை அதிகளவு உற்பத்தி செய்து உலகில் முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இது உணவுப் பொருளாக மட்டுமல்லாது மருந்துப் பொருள், எரிபொருள், சாயப் பொருளாகவும் பயன்படுத்தப் படுகிறது.

வால்நட்டில் உள்ள ஊட்டச் சத்துக்கள்

இக்கொட்டை த‌ன் எடையில் 65 சதவீதம் நிறைவுறா கொழுப்பினையும், 15 சதவீதம் புரதத்தினையும் கொண்டுள்ளது.

ஏனைய கொட்டைகளை விட இக்கொட்டையே அதிகளவு பாலி நிறைவுறா கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளது.

இதில் மிக அதிகளவு விட்டமின் இ, அதிகளவு விட்டமின் பி6 (பைரிடாக்ஸின்), பி1 (தயாமின்), பி9 (ஃபோலேட்டுகள்) ஆகியவை உள்ளன. மேலும் இதில் விட்டமின் ஏ, பி2 (ரிபோஃப்ளோவின்), பி3 (நியாசின்), பி5 (பான்டாதெனிக் அமிலம்), சி, கே போன்றவையும் காணப்படுகின்றன.

இதில் மிக அதிகளவு காப்பர், மாங்கனீஸ், அதிகளவு பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்புச்சத்து, துத்தநாகம் ஆகியவையும், செலீனியம், கால்சியம், பொட்டாசியம் முதலியவையும் உள்ளன.

இது மிக அதிகளவு பாலி நிறைவுறா கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளது. மேலும் இதில் கார்போஹைட்ரேட், புரதம், நார்சத்து ஆகியவையும் உள்ளன.

வால்நட்டின் மருத்துவ பண்புகள்

மூளையின் ஆரோக்கிய செயல்பாட்டிற்கு

இது மூளைக்கான சிறப்பு உணவாகும். ஒமேகா-3 குறைபாடு அதிக மன அழுத்தத்தையும், அறிவாற்றல் இழப்பினையும் ஏற்படுத்துகிறது.

இக்கொட்டையில் உள்ள ஒமேகா-3 அமிலமானது மன அழுத்தத்தைக் குறைத்து மூளையின் நினைவாற்றலை கூட்டுவதோடு சிந்தனை செயலாக்கத்தையும் அதிகரிக்கிறது.

இதனால் இதனை சீராக உணவில் சேர்த்துக் கொண்டு மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

ஆரோக்கியமான இதயத்திற்கு

இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம், லினோலிக் அமிலம், ஆல்பா லினோலெனிக் அமிலம், அராச்சிடோனிக் அமிலம் ஆகியவை இதயநோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது.

இதனை சீராக உணவில் உட்கொள்ளும்போது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவினைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவினை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் நரம்புகளில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது.

மேலும் இது இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் எண்டோடெலியல் செல் செயல்பாடுகளை பாதுகாக்கிறது. ஆரோக்கிய இதயத்திற்கு இதனை அளவோடு உண்ணலாம்.

எலும்புகளின் பலத்திற்கு

வால்நட்டில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளின் பலத்தை மேம்படுத்துகிறது. மேலும் இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை உறுதிபடுத்துகிறது. இது உடலானது கால்சியம் உறிதலை ஊக்குவிக்கிறது.

உடலின் எடையை பராமரிக்க

இதனை உட்கொள்ளும்போது வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது.

ஊட்டச்சத்து மிகுந்த இதனை உட்கொள்ளும்போது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுஉப்புகள், கொழுப்புகள் கிடைப்பதால் இடைவேளை உணவாகவும் உட்கொள்ளலாம்.

இதனை அதிகமாக உட்கொண்டால் இதில் உள்ள ஊட்டச்சத்துகள் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். ஆதலால் இதனை அளவோடு உட்கொள்வது அவசியம்.

ஆன்டி ஆக்ஸிஜென்ட் மையம்

ஆன்டி ஆக்ஸிஜென்ட் அதிகமுள்ள உணவுப்பொருட்களின் பட்டியலில் இது இரண்டாவது இடத்தில் உள்ளது.

மிகவும் அரிதான ஆன்டி ஆக்ஸிஜென்டுகளான குயினோன் ஜுக்லோன், டானின் டெல்லிமாக்ராண்டின் மற்றும் ஃபிளாவனோல் மோரின் ஆகியவை இக்கொட்டையில் உள்ளன.

இந்த ஆன்டி ஆக்ஸிஜென்டுகள் வேதிப்பொருட்களால் கல்லீரல் பாதிப்படைவதை தடுக்கிறது.

உடல் வளர்சிதை மாற்றம் மேம்பாடடைய

இதில் உள்ள பாலி நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் மற்றும் மாங்கனீஸ், காப்பர், இரும்புச்சத்து, செம்புச்சத்து, துத்தநாகச்சத்து போன்றவை உடலின் சீரான வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன.

செரிமானம், நியூகிளிக் அமில தொகுப்பு உள்ளிட்ட சீரான உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு வால்நட்டினை உண்ணலாம்.

உணவுப் பாதையின் ஆரோக்கியத்திற்கு

இது உட்புற செரிமான மண்டலத்தின் நச்சுகள் மற்றும் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்ய உதவுகிறது.

இதனை சீராக உட்கொள்ளும்போது லாக்டோபாசில்லஸ், ரூமினோகாக்கஸ் மற்றும் ரோஸ்புரியா போன்ற குடலின் ஆரோக்கியத்திற்கு காரணமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து உணவுப்பாதையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

சரும பாதுகாப்பிற்கு

இதில் உள்ள விட்டமின் இ ப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாடுகளிலிருந்து சருமத்தினைப் பாதுகாக்கிறது. மேலும் இதனை உண்ணும் போது சருமச் சுருக்கங்கள் மற்றும் வறண்ட சருமம் உண்டாவது தடுக்கப்படுகிறது.

கண்களுக்கு அடியில் கருவளையத்தை நீக்க வால்நட் உள்ள பொருட்களைப் பயன்படுத்தவும். பளபளக்கும் இளமையான சருமத்தைப் பெற இக்கொட்டையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆரோக்கியமான கூந்தலைப் பெற

இக்கொட்டையில் உள்ள விட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிஜென்டுகள் மயிற்கால்களை வலிமையடையச் செய்து பொடுகு உள்ளிட்ட சருமப் பிரச்சினைகளை போக்குகிறது. மேலும் அடர்த்தியான, நீளமான, வலிமையான கூந்தலையும் வழங்குகிறது.

முறையான உறக்கத்திற்கு

இக்கொட்டையினை உண்ணும்போது மெலாட்டானின் என்னும் ஹார்மோனை சுரக்கச் செய்கிறது. மெலாட்டனின் தூக்கத்தைத் தூண்டுவதோடு அதனை முறைப்படுத்துகிறது.

முறையான ஆழ்ந்த தூக்கத்திற்கு இக்கொட்டையினை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.

வால்நட்டினைப் பற்றிய எச்சரிக்கை

ஒருநாளைக்கு ஏழு முதல் ஒன்பது வால்நட்டுகளை உண்ணலாம். இதனை அளவுக்கு அதிகமாக உண்ணும் போது வயிறு வலி, வயிற்றுப்போக்கு, வயிற்று பொருமல், நெஞ்சு எரிச்சல் ஆகியவை உண்டாகும். அளவுக்கு அதிகமாக உண்ணும் போது உடலின் எடை அதிகரிக்கும்.

வால்நட்டினை தேர்வு செய்யும் முறை

வால்நட்டானது கடைகளில் ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து பதப்படுத்தியது, அரைத்து பொடியாக்கப்பட்டது, மேல் தோல் இல்லாமலும், மேல்தோலுடனும் என பலவகைகளில் கிடைக்கிறது.

பதப்படுத்தப்படாத வால்நட்டினை தேர்வு செய்வதே சிறந்தது.

வால்நட்டினை தேர்வு செய்யும்போது ஒரே சீரான நிறத்துடன், வெட்டுக்காயங்கள் இல்லாமல், ஒரே அளவிலும் கையில் எடுக்கும்போது கனமானதாகவும் இருக்க வேண்டும்.

வால்நட்டானது அப்படியேவோ, உப்பு அல்லது இனிப்பு சேர்த்து வறுக்கப்பட்டோ உண்ணப்படுகிறது. இது இழைக்கப்பட்டு இனிப்புகள், சாலட்டுகள், பிஸ்கட்டுகள், கேக்குகள் ஆகியவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

அறிவுத்திறனின் குறியீடான வால்நட்டை உணவில் அடிக்கடி அளவாக உண்டு ஆரோக்கியமான வாழ்வு வாழ்வோம்.

வ.முனீஸ்வரன்