வாழைக்காய் வறுவல் அருமையான தொட்டு கறி ஆகும்.
இது மிகவும் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
எளிய முறையில் வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வாழைக்காய் – 2 எண்ணம் (பெரியது)
வெள்ளைப்பூண்டு – 4 எண்ணம் (நடுத்தரமானது)
பெருஞ்சீரகம் (சோம்பு) – 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி – 1டீஸ்பூன்
மல்லிப் பொடி – 2 டீஸ்பூன்
கரம் மசாலாப் பொடி – 3 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் பொடி – 1டீஸ்பூன்
பெருங்காயப் பொடி – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 3 கீற்று
உப்பு – தேவையான அளவு
நல்ல எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
வாழைக்காய் வறுவல் செய்முறை
வாழைக்காயை தோல் நீக்கி நீளவாக்கில் நேராக படத்தில் காட்டியுள்ளவாறு நறுக்கிக் கொள்ளவும்.
வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி நசுக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

வாணலியில் 1½ ஸ்பூன் நல்ல எண்ணெய் ஊற்றி வாழைக்காயை படத்தில் காட்டியவாறு வதக்கிக் கொள்ளவும்.
வாழைக்காயின் மேல் பகுதி வெந்தால் போதுமானது.


அதே வாணலியில் மீதமுள்ள 1½ ஸ்பூன் நல்ல எண்ணெயை ஊற்றி அதில் கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு, பெருஞ்சீரகம் சேர்த்து வதக்கவும்.

பின்னர் அதனுடன் மஞ்சள் பொடி, மல்லிப் பொடி, கரம் மசாலாப் பொடி, மிளகாய் வற்றல் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்து அடுப்பினை சிம்மில் வைத்து வதக்கவும்.

பின்னர் அதனுடன் வதக்கிய வாழைக்காயினைச் சேர்த்து ஒரு சேர கிளறி 3 நிமிடங்கள் வாழைக்காயுடன் மசாலா கலவை சேருமளவுக்கு வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.


சுவையான வாழைக்காய்வறுவல் தயார்.
இதனை ரசம் சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை, தேங்காய் சாதம், சாம்பார் சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.
குறிப்பு
வாழைக்காயை சிவக்க வதக்கக் கூடாது.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!